அலசல்
Published:Updated:

ரத்தம் சிந்தும் ‘செங்கடல்’ ஆகிறதா கருங்கடல்?

கருங்கடல்
பிரீமியம் ஸ்டோரி
News
கருங்கடல்

- தாக்‌ஷாயிணி

“வீணாக எங்கள் பொறுமையைச் சோதிக்காதீர்கள். எங்கள் கருங்கடல் எல்லைக்குள் இனியும் அத்துமீறி நுழைந்தால் சுட்டு வீழ்த்தப்படுவீர்கள்...” - அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அரசுகளுக்கு இப்படி எச்சரிக்கை அனுப்பியிருக்கிறது ரஷ்யா. ஜூன் 23-ம் தேதி பிரிட்டனின் ‘ஹெச்.எம்.எஸ் டிஃபெண்டர்’ போர்க்கப்பல், க்ரிமியா கருங்கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததற்குத்தான் இப்படிக் கொதித்திருக்கிறது ரஷ்யா. நூற்றாண்டுகளாகத் தொடரும் கருங்கடல் அரசியலும், அதில் உலக நாடுகள் ‘வலைவிரிக்க’ முயல்வதும் தொடர்கதையாகிவருகிறது. பல பில்லியன் டாலர் கொட்டும் இந்தக் கருங்கடல் அரசியல் விளையாட்டில் என்னதான் நடக்கிறது?

ஐரோப்பா, ஆசிய கண்டங்களுக்கு இடையே ரஷ்யா, ஜார்ஜியா, துருக்கி, பல்கேரியா, ரோமானியா, உக்ரைன் ஆகிய நாடுகளின் எல்லைகளைக் கொண்டிருப்பதுதான் கருங்கடல். தமிழ்நாட்டின் பரப்பளவைவிட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் இந்தக் கடலில், இயற்கை எரிவாயுவின் இருப்பு பல மடங்கு அதிகம். உக்ரைன் கருங்கடல் எல்லையிலிருக்கும் எரிவாயுவின் அளவு மட்டுமே இரண்டு ட்ரில்லியன் க்யூபிக் மீட்டர் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், மொத்த கருங்கடல் படுகைகள் முழுவதும் எவ்வளவு எரிவாயு இருக்குமென்பதை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இந்த இயற்கை வளத்தைப் பங்கு போட சுமார் இரண்டு டஜன் நாடுகள் முட்டிமோதுவதுதான் கருங்கடல் அரசியலின் தட்பவெப்பத்தைச் சூடாக்கியிருக்கிறது!

ரத்தம் சிந்தும் ‘செங்கடல்’ ஆகிறதா கருங்கடல்?
ரத்தம் சிந்தும் ‘செங்கடல்’ ஆகிறதா கருங்கடல்?

ஒட்டமான் ஏரி டு சோவியத் ஏரி

கருங்கடலின் கடந்தகால வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், அது துருக்கி உதுமானிய பேரரசின் (Ottoman Empire) ஆளுகையிலேயே பெரும்பாலும் இருந்திருப்பது தெரியும். ஒருகாலத்தில் ‘ஒட்டமான் ஏரி’ என்று அழைக்கப்பட்ட கருங்கடல் வழியாகத்தான் ரஷ்யப் பேரரசின் தென் மேற்கு வர்த்தகத் தொடர்புகள் மத்திய தரைக்கடலை அடைந்தன. மேற்கு ஆசியாவிலிருந்து கிழக்கு ஐரோப்பாவுக்குக் கடல்வழியாகச் செல்ல வேண்டுமென்றாலும், கருங்கடல் வழியாகச் செல்வது மட்டுமே சாத்தியம். இஸ்தான்புல்லில் இருந்துகொண்டு போஸ்போரஸ் ஜலசந்தியைக் கட்டுப்படுத்தியதால், கருங்கடலில் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய வர்த்தகத்தைத் தன் விரலசைவில் ஆட்டுவித்தது உதுமானியப் பேரரசு.

18-ம் நூற்றாண்டின் இறுதியில், மேற்கண்ட வர்த்தகத்தில் சில இடையூறுகளை ஏற்படுத்தியது உதுமானியப் பேரரசு. ரஷ்யக் கப்பல்களை தடைசெய்து, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகக் கப்பல்கள் மட்டும் கருங்கடல் பகுதிக்குள் நுழைய உதுமானிய அரசு அனுமதியளித்தது. இதை எதிர்த்த ரஷ்யப் பேரரசு, பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து, இந்தத் தடையை 1789-ல் உடைத்தது. 1922-ல் இரண்டு வரலாற்று நிகழ்வுகள் நிகழ்ந்தன. ஒன்று, சோவியத் யூனியன் உருவானது; இரண்டு, மன்னராட்சி நாடான உதுமானியப் பேரரசு கலைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, கருங்கடல் பகுதிகள் சோவியத்தின் ஆளுகைக்குள் படிப்படியாகக் கொண்டுவரப்பட்டன. ‘ஒட்டமான் ஏரி’ என்றழைக்கப்பட்ட கருங்கடல், ‘சோவியத் ஏரி’ என்றும் அழைக்கப்பட்டது அப்போதுதான்!

1991-ல் சோவியத் யூனியன் உடைந்த பிறகு அதிலிருந்து ரோமானியா, பல்கேரியா, உக்ரைன், ஜார்ஜியா எனப் பல்வேறு நாடுகள் முளைத்தன. கருங்கடலில் ரஷ்யாவின் ஆதிக்கம் சிதறிப்போனது. இந்த நாடுகள் ஒவ்வொன்றும் கருங்கடல் பகுதியில் தங்கள் எல்லைகளை வரையறுத்துக்கொள்வதில் முரண்பட்டதால், அதுவரை நாட்டாமை செய்துகொண்டிருந்த ரஷ்யாவால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்த ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பு, ரோமானியா மற்றும் பல்கேரியாவைத் தங்கள் கூட்டமைப்பில் இணைத்துக்கொண்டது. கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாதபோதிலும், உக்ரைனில் கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன ரக ஏவுகணைகளை நிறுத்தியது ‘நேட்டோ.’ இதை ரஷ்யா சிறிதும் ரசிக்கவில்லை. அன்றிலிருந்து கருங்கடலைக் கைப்பற்றுவது யார் என்கிற சர்வதேசக் கடல் அரசியல் வலுப்பெற்றது.

ரத்தம் சிந்தும் ‘செங்கடல்’ ஆகிறதா கருங்கடல்?

நேரடி ஆக்‌ஷன்... க்ரிமியாவை இணைத்த புதின்

``எங்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்குவதுபோல, எங்கள் எல்லையிலுள்ள நாடுகளில் ‘நேட்டோ’ ஆயுதங்களை இறக்குமதி செய்வதை ஏற்க முடியாது. கருங்கடலில் அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று ரஷ்யா பலமுறை கூறிப் பார்த்தது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 30 நாடுகள் அங்கம்வகிக்கும் ‘நேட்டோ’ அதைச் சட்டை செய்யவேயில்லை. பொறுமையிழந்த ரஷ்ய அதிபர் புதின், நேரடி ஆக்‌ஷனுக்குத் தயாரானார். உக்ரைனின் ஆளுகைக்குள் இருந்த க்ரிமியா தீப கற்ப பகுதிக்குள் 2014, பிப்ரவரி 20-ல் ரஷ்யப் படைகள் நுழைந்தன. கணநேரத்தில் க்ரிமியாவின் விமான நிலையங்கள், ராணுவத் தளங்கள், நாடாளுமன்றக் கட்டடம் ஆகியவை ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. க்ரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதா அல்லது உக்ரைனிலேயே ஒரு பகுதியாக அங்கம்வகிப்பதா என்பது குறித்து 2014, மார்ச் 16-ம் தேதி பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் ஏறத்தாழ 97 சதவிகிதம் பேர், க்ரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு விருப்பம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் 84-வது மாகாணமாக க்ரிமியா இணைத்துக்கொள்ளப்பட்டது. க்ரிமியாவின் கருங்கடல் எல்லைகள், ரஷ்யாவின் எல்லைகளாக விரிந்தன.

புதின்
புதின்

இந்த இணைப்பைப் பல நாடுகள் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘க்ரிமியா பிரச்னையில் இருதரப்பும் பேசி முடிவெடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் நழுவிக்கொண்டன. ஆனால், மேற்குலக நாடுகளுக்கு ரஷ்யாவை கார்னர் செய்ய இந்த விவகாரமே போதுமானதாக அமைந்துவிட்டது. ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், 2014-ல் ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறவிருந்த ஜி-8 மாநாடும் ரத்து செய்யப்பட்டது. ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால், ரஷ்யா இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, இன்றுவரை உக்ரைன் நாட்டின் ஓர் அங்கமாகவே க்ரிமியா பார்க்கப்படுகிறது. ஆனால், அதைத் தனது பகுதியாக ரஷ்யா சொந்தம் கொண்டாடுவதால், கருங்கடலில் பிரச்னைகள் தொடர்கின்றன.

இவ்வளவு சூடான சூழலில்தான் ஜூன் 23-ம் தேதி க்ரிமிய கருங்கடல் எல்லைக்குள் பிரிட்டனின் போர்க் கப்பலான ‘ஹெச்.எம்.எஸ் டிஃபெண்டர்’ நுழைய முயன்றது. இதையடுத்தே துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு, எச்சரித்துள்ளது ரஷ்ய கடற்படை. இந்தச் சம்பவத்துக்கு விளக்கம் அளித்திருக்கும் பிரிட்டன் அரசு, ‘உக்ரைனின் ஓர் அங்கமான க்ரிமியாவுக்குள் நுழைய முயன்றது உண்மைதான். ஆனால், ரஷ்ய கடற்படையால் நாங்கள் விரட்டப்படவில்லை. போர் ஒத்திகை நிகழ்ச்சியில் ரஷ்யா சுட்டுப் பயிற்சி செய்ததாகவே நாங்கள் இதைப் பார்க்கிறோம்’ என்று சமாளித்திருக்கிறது.

எர்டோகன்
எர்டோகன்

கொதிக்கும் கருங்கடல்!

கருங்கடலின் முக்கியத்துவம், அதன் அடிமடியிலிருக்கும் இயற்கை எரிவாயுவுக்காக மட்டுமல்ல... புதிய பொருளாதாரச் சந்தைகளுக்காகவும்தான் என்கிறார்கள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள். “கருங்கடலை எல்லைகளாகக்கொண்டிருக்கும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துவருகிறது. தங்கள் கருங்கடல் எல்லையிலுள்ள இயற்கை எரிவாயுக்களை அந்த நாடுகள் சந்தைப்படுத்தும் பட்சத்தில், அவற்றின் பொருளாதாரநிலை அபரிமிதமாக உயரும்; புதிய சந்தைகள் உருவாகும். இன்று நாளொன்றுக்கு 2.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கருங்கடல் வழியாக வர்த்தகமாகிறது. உலகின் மொத்த உற்பத்தியில் 25 சதவிகித தானியங்கள் இந்தக் கடலில்தான் பயணிக்கின்றன. சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தின் ஓர் அங்கமாக இருப்பதால், கருங்கடல் நாடுகளின் வியாபார கேந்திரமாக துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இன்னும் சில ஆண்டுகளில் முக்கியத்துவம் பெற்றுவிடும். இது தெரிந்ததால்தான், கருங்கடலுக்கும் மத்திய தரைக் கடலுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் புதிய நீர்வழிப் பாதை உருவாக்கும் திட்டத்தை துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்திருக்கிறார். ஒரு காலத்தில் இந்தியா எப்படி மேற்குல கம்பெனிகளுக்கு ஒரு அட்சயபாத்திரமாக இருந்ததோ, அதேபோல இன்று கருங்கடல் நாடுகள் அட்சயபாத்திரமாக மாறியிருக்கின்றன” என்றார்கள்.

ஒருபக்கம் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் என ‘நேட்டோ’ கூட்டமைப்பு நாடுகள் கருங்கடலில் ஆதிக்கம் செலுத்தப் போட்டியிடுகின்றன. இன்னொரு பக்கம் ஜார்ஜியா, துருக்கி, பல்கேரியா, ரொமானியா, உக்ரைன் ஆகிய கருங்கடலின் எல்லை நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன... ரஷ்யாவோ மொத்தச் சந்தையையும் கைப்பற்றி, கிழக்கு ஐரோப்பாவை மறைமுகமாகத் தனது கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள முயல்கிறது. வரும் காலங்களில் வியாபார கேந்திரமாக மட்டுமல்ல... உலக அரசியலின் மையப் புள்ளியாகவும் கருங்கடல் மாறப்போவது நிஜம். இந்தக் காட்சிகள் உச்சம் பெறும்போது, கருங்கடல் ரத்தம் சிந்தும் ‘செங்கடல்’-ஆக மாறினாலும் ஆச்சர்யம் இல்லை!