கட்டுரைகள்
Published:Updated:

பலே பாய்ச்சல் போதிதேவ்!

போதிதேவ்
பிரீமியம் ஸ்டோரி
News
போதிதேவ்

‘மழலை மேதை’ என்ற பட்டத்தை இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் இவருக்கு வழங்கி இருக்கிறது.

ந்தச் சுட்டிக்கு வயது 3 ஆண்டுகள், 4 மாதங்கள்... குரலில் தேன் மழலை மாறவில்லை. ஆனால், உதிர்க்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாதனைகளாக மாறிவருகிறது. பெரியவர்களின் வாயிலே சட்டென நுழையாத கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், மடகாஸ்கர், மெடிட்டரேனியன்ஸீ போன்ற பெயர்களை அழகாகச் சொல்கிறார், போதிதேவ் பாண்டியா. வீட்டில் செல்லமாக ‘ஸிம்பா’.

‘மழலை மேதை’ என்ற பட்டத்தை இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் இவருக்கு வழங்கி இருக்கிறது. வீடு முழுவதும் உலக உருண்டை, உலக வரைபடம், இன்னும் பல அழகுப் புத்தகங்கள் நிறைந்திருக்கின்றன. அம்மா மடியில் அமர்ந்துகொண்டு புன்னகையுடன் வரவேற்கிறார் போதிதேவ்.

பலே பாய்ச்சல் போதிதேவ்!

‘‘உங்களுக்கு யார் இதெல்லாம் சொல்லித் தந்தாங்க?’’ என்று கேட்டால், ‘‘நானே படிச்சேன்’’ என்கிறார் மழலைக் குரலில்.

‘‘இந்தியாவின் கேப்பிடல் என்ன?’’ என்று கேட்டு முடிக்கும் முன்னரே, ‘நியூடெல்லி’ என்றவர், ‘‘இந்தியாவுக்குக் கீழே இலங்கை இருக்கு. அதுக்கு அந்தப் பக்கம் மாலத்தீவுகள், மேலே நேபாளம், கொஞ்சம் தள்ளி பூட்டான்’’ என்று நம் மனக்கண்களில் இந்திய வரைபடத்தைக் கொண்டுவருகிறார்.

அங்கே மாட்டியிருக்கும் உலக வரைபடத்தில் மற்ற நாடுகளையும் காண்பித்து பெயர்களைச் சொல்கிறார். அதுமட்டுமா? உலகின் எந்த நாட்டின் கொடியைக் காண்பித்தாலும், அந்த நாட்டின் பெயரையும் தலைநகரின் பெயரையும் சொல்கிறார். உலக வரைபடத்தில் எந்த நாட்டுக்கு எத்தனையாவது எண் (லொகேஷன்) என்பதையும் சொல்கிறார்.

‘‘எந்த இரு நாடுகளின் கொடி ஒரே மாதிரி இருக்கும்?’’ எனக் கேட்டால், ‘‘இந்தோனேசியா, மொராக்கோ’’ என்று கூறி திக்குமுக்காட வைக்கிறார்.

பலே பாய்ச்சல் போதிதேவ்!

ஒரு நாட்டின் பெயரைச் சொன்னால் அந்த நாட்டுக் கொடியின் நிறம், அதில் உள்ள படங்கள் என அனைத்து விவரங்களையும் துல்லியமாகக் கூறி அசத்துகிறார். மேலும், 100-லிருந்து தலைகீழாக 1 வரை எண்களைச் சொல்வது, ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்களை தடுமாறாமல் சொல்வது, ஆத்திசூடி எனக் கேள்வி ஞானத்திலேயே பல விஷயங்களை அடுக்குகிறார் போதிதேவ்.

இதுபற்றி அம்மா லக்ஷ்மிதேவி, ‘‘போன ஏப்ரல் மாசம் பெரிய பையன் புத்தாவுக்குப் பரீட்சை சமயத்தில் 10 நாடுகளின் தலைநகரை சொல்லிக்கொடுத்துட்டிருந்தேன். பக்கத்தில் விளையாடிட்டுருந்தான் ஸிம்பா. அடுத்த நாள் நாடுகளின் பெயர்களையும் தலைநகர்களையும் ஸிம்பா கடகடன்னு சொல்ல ஆரம்பிச்சதும் சந்தோஷமாகிட்டோம். அப்போதான் அவனுக்கு இவ்வளவு ஞாபகசக்தி இருக்கும் விஷயமே தெரிஞ்சது. நாம ஒரு தடவை சொல்றதை கேட்டுக்கிட்டு அப்படியே சொல்வான். எப்பவும் குளோப், மேப் வெச்சு பார்த்துட்டிருப்பான். இப்போ நாடுகளின் பெயர்களுக்கான ஸ்பெல்லிங்கூட தெரியுது'' என்கிறார் பெருமிதமாக.

பலே பாய்ச்சல் போதிதேவ்!

‘‘ஸிம்பாவின் இன்னொரு க்ரேஸ் காலண்டர்கள். எந்த மாதம் எந்தக் கிழமையில் தொடங்கி எதில் முடியுது, எந்த மாதத்துக்கு எத்தனை நாள்கள், எத்தனை ஞாயிற்றுக்கிழமை வருது எனப் பார்த்துச் சொல்வான். இவன் புரட்டிப் பார்த்தே எங்க வீட்டு காலண்டர் கிழிஞ்சே போச்சு'' என்று சிரிக்கிறார் அம்மா.

‘‘இதுக்காக, நாங்க எதையுமே அவனிடம் திணிக்கலை. வெளிநாடுகளில் ஐ.க்யூ சோதனை பண்றதை 10 வயதுக்கு மேல்தான் அனுமதிக்கிறாங்க. பெங்களூர்ல இந்த மாதிரி ‘ப்ராடிஜி’ குழந்தைகளின் பெற்றோர்களுக்காக ஒரு வொர்க்ஷாப் மாதிரி இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்துறாங்க. அதிலும் 7 வயசு குழந்தைகளின் பெற்றோர்கள்தான் கலந்துக்க முடியும்'' என்கிறார் போதிதேவின் தந்தை சித்ரபாண்டியன்.

போதி பாய்ச்சல் மேலும் தொடரட்டும்!