அலசல்
Published:Updated:

‘குண்டுவீச்சு’ - குற்றம்சாட்டப்பட்டவரை ஜாமீனில் எடுத்த பா.ஜ.க நிர்வாகி?

குண்டுவீச்சு
பிரீமியம் ஸ்டோரி
News
குண்டுவீச்சு

குமரி அரசியல்...

‘குமரி மாவட்டத்தில் முன்னாள் பா.ஜ.க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை ஜாமீனில் விடுவிக்க, இந்நாள் பா.ஜ.க நிர்வாகி ரகசியமாக உதவியிருக்கிறார்’ என்றொரு குற்றச்சாட்டு பரபரக்கிறது!

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகேயுள்ள கருமன்கூடல் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க முன்னாள் நிர்வாகியும், தொழிலதிபருமான கல்யாணசுந்தரத்தின் வீட்டின் மீது கடந்த செப்டம்பர் மாதம், 24-ம் தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து குண்டு வீசியதாக, ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பைச் சேர்ந்த ரிஸ்வான் முஹம்மது கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில், சிறையிலிருந்த ரிஸ்வான் முஹம்மதுவை ஜாமீனில் விடுவிக்க பா.ஜ.க உள்ளாட்சிப் பிரிவு மாநிலச் செயலாளரான வழக்கறிஞர் சிவகுமாரே ரகசியமாக உதவியிருக்கிறார் என்று முன்னாள் பா.ஜ.க நிர்வாகியான வழக்கறிஞர் ஜெயராம், கட்சி மேலிடத்துக்குப் புகார் தெரிவித்திருக்கிறார். இது குறித்த மீம்ஸ்கள் குமரி மாவட்டத்தில் வைரலாகிவருகின்றன.

‘குண்டுவீச்சு’ - குற்றம்சாட்டப்பட்டவரை ஜாமீனில் எடுத்த பா.ஜ.க நிர்வாகி?

“ஆதாரம் இருக்கிறது!”

இந்த நிலையில், ஜெயராமிடம் பேசினோம். “பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் துணைத் தலைவராக பதவி வகித்த என்மீது வழக்கு இருப்பதாகக் கூறி கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். ஆனால், பா.ஜ.க மாநில நிர்வாகியான வக்கீல் சிவகுமார், பா.ஜ.க-வைச் சேர்ந்தவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை பெயிலில் எடுக்க ஐந்து லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு ரகசியமாக உதவியிருக்கிறார். வழக்கில், தான் நேரடியாக ஆஜரானால் சிக்கலாகிவிடும் என்பதால், தனது ஜூனியரைக்கொண்டு குற்றவாளியை ஜாமீனில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். எனது இந்தக் குற்றச்சாட்டுக்கு கோர்ட் மெமோ ஆதாரம் இருக்கிறது. வழக்கு இருப்பதாகச் சொல்லி என்னைக் கட்சியைவிட்டு நீக்கியவர்கள், குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்பட்ட சிவகுமாரின் செயலுக்கு என்ன செய்யப்போகிறார்கள்?” என்று ஆவேசமானார்.

சிவகுமார், ஜெயராம்
சிவகுமார், ஜெயராம்

“நான் என்ன செய்ய முடியும்?”

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சிவகுமாரிடம் விளக்கம் கேட்டோம். “1997-ம் ஆண்டு ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை நான் மனசாட்சிக்கு உட்பட்டு செயல்பட்டுவருகிறேன். என்னுடைய சட்ட அலுவலக இளம் வழக்கறிஞர் என்னிடம் கலந்தாலோசிக்காமல் அந்த அப்பியரன்ஸ் மெமோவில் கையெழுத்திட்டிருக்கிறார். அதற்கு நான் என்ன செய்ய முடியும்... பா.ஜ.க பிரசாரப் பிரிவு மாவட்டத் தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் என்பவரின் துணிக்கடையை அடித்து நொறுக்கியதாக ஜெயராம் மீது ஏற்கெனவே வழக்கு நிலுவையில் இருக்கிறது. சொந்தக் கட்சிப் பொறுப்பாளரின் கடையையே அவர் அடித்து உடைத்ததால்தான் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். அந்தக் காழ்ப்புணர்ச்சியில் இப்போது என்மீது அவதூறு பரப்புகிறார். இது குறித்து மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்திருக்கிறேன்” என்றார்.

பா.ஜ.க என்றாலே பரபரப்பும் குற்றச்சாட்டுகளும்தான்!