அரசியல்
அலசல்
Published:Updated:

எல்லை தாண்டுகிறதா எல்லை பாதுகாப்புப் படை? - போர்க்கொடி தூக்கும் பஞ்சாப், மேற்கு வங்கம்...

எல்லை பாதுகாப்புப் படை
பிரீமியம் ஸ்டோரி
News
எல்லை பாதுகாப்புப் படை

`எல்லைப் பாதுகாப்புப் படையின் செயல்திறனை மேம்படுத்தவும், கடத்தல் மோசடிகளைக் கட்டுப்படுத்தவும் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது’

பஞ்சாப், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய எல்லையோர மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு (BSF) 15 கிலோமீட்டராக இருந்த அதிகார வரம்பை 50 கிலோமீட்டராக அதிகரித்திருக்கிறது மத்திய அரசு. ‘நாட்டின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை’ என்று மத்திய அரசு கூறினாலும் எதிர்க்கட்சிகளும், பஞ்சாப் மற்றும் மேற்குவங்க அரசுகளும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேசிய அரசியலில் அனல் தகிக்கும் இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?

தேசப் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட முடிவா?

இந்தியாவின் சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் ஒரு படைப்பிரிவே, பி.எஸ்.எஃப். இது அண்டை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மாநிலங்களில் பயங்கரவாத ஊடுருவல், போதைப்பொருள்கள், ஆயுதங்கள் கடத்தல், அகதிகள் இடப்பெயர்வு போன்றவற்றைத் தடுக்கும் பணிகளில் ஈடுபடுகிறது. இந்த நிலையில்தான், மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 11-ம் தேதி வெளியிட்ட திருத்தப்பட்ட அரசாணையில் பஞ்சாப், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு மாநில எல்லைக்குள் இருக்கும் அதிகார வரம்பு 15 கிலோமீட்டரிலிருந்து 50 கிலோமீட்டராக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் எல்லைப் பாதுகாப்புப் படையினர், மேற்கண்ட மாநிலங்களின் காவல்துறை அனுமதி இல்லாமலேயே தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தேடுதல் வேட்டை நடத்தி, எதையும் பறிமுதல் செய்யலாம்; குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் மூலம் யாரையும் கைதுசெய்யலாம்.

மத்திய அரசோ, `எல்லைப் பாதுகாப்புப் படையின் செயல்திறனை மேம்படுத்தவும், கடத்தல் மோசடிகளைக் கட்டுப்படுத்தவும் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது’ என்று கூறியிருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு பா.ஜ.க ஆட்சி நடைபெறுவதால், அம்மாநில அரசு இந்தத் திருத்தத்தை வரவேற்றிருக்கிறது. ஆனால், இதை பஞ்சாப், மேற்கு வங்க அரசுகள் கடுமையாக எதிர்க்கின்றன.

எல்லை தாண்டுகிறதா எல்லை பாதுகாப்புப் படை? - போர்க்கொடி தூக்கும் பஞ்சாப், மேற்கு வங்கம்...

பஞ்சாப்பின் பாதி பி.எஸ்.எஃப்-ன் கீழ்!

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ``இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல்’’ என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ``பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதால், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பை அழிக்கிறார்கள். பஞ்சாப் அரசின் 50 சதவிகித அதிகாரத்தையே மத்திய அரசு உறிஞ்சப்பார்க்கிறது” என்று காட்டம் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரியோ, “பஞ்சாப்பின் பாதி, பி.எஸ்.எஃப் அதிகாரத்தின்கீழ் போய்விடும்’’ என்று பதறியிருக்கிறார்.

மேற்கு வங்க அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், ``சட்டம், ஒழுங்கு என்பது மாநிலத்துக்கு உரித்தானது. ஆனால், இதில் பா.ஜ.க அரசு மத்திய நிறுவனங்கள் மூலம் தலையிட முயல்கிறது” என்று குற்றம்சாட்டியிருக்கிறார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ``அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., என்.ஐ.ஏ ஆகியவற்றைவைத்து மாநில அரசுகளை அச்சுறுத்திய மத்திய அரசு, இப்போது இந்தப் பட்டியலில் பி.எஸ்.எஃப்-பையும் சேர்த்திருக்கிறது’’ என்று விமர்சித்திருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பஞ்சாப், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் அதிகார வரம்பை அதிகரித்திருக்கும் அதேசமயம், பா.ஜ.க ஆட்சிசெய்யும் குஜராத்தில் ஏற்கெனவே இருந்த 80 கிலோமீட்டர் அதிகாரப் பரப்பை 50 கிலோமீட்டராக குறைத்திருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது பற்றியெல்லாம் பேசும் அரசியல் பார்வையாளர்களோ, “கடந்த செப்டம்பர் மாதத்தில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் குஜராத்தில் பிடிபட்டது. ஆனால், அந்த மாநிலத்தில் பி.எஸ்.எஃப்-ன் அதிகார வரம்பைக் குறைத்துவிட்டு, பஞ்சாப்பிலும் மேற்கு வங்கத்திலும் அதிகாரப் பரப்பை அதிகரித்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ‘போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை’ என்கிறது மத்திய அரசு. ஆனால், போதைப்பொருள் கடத்தலைப் பொறுத்தவரை, 2018-20 காலகட்டத்தில் உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள்தான் முன்னிலையில் உள்ளன. இந்தப் பட்டியலில் பஞ்சாப் இடம்பெறவே இல்லை. அப்படி இருக்கும்போது பஞ்சாப் எல்லையின் அதிகார வரம்பை அதிகரித்திருப்பது ஏன்?

1965 காலகட்டத்தில் மாநில காவல்துறையிடம் வாகன வசதிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பப் பற்றாக்குறைகள் இருந்தன. மேலும், இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்துமுடிந்த சூழல் என்பதால், எல்லைப்பகுதியை பாதுகாப்பதற்காக பி.எஸ்.எஃப்-யை உருவாக்கி எல்லைப் பாதுகாப்பு அதிகாரத்தை வழங்கியது. ஆனால், இன்றைய சூழலில் மாநிலக் காவல்துறை, பி.எஸ்.எஃப் என இரு தரப்பிலும் தொழில்நுட்ப வசதிகள் பன்மடங்கு மேம்பட்டுவிட்டன. பல்வேறு இடங்களில் மாநிலக் காவல்துறையும், பி.எஸ்.எஃப்-ம் சேர்ந்தே செயல்படுகின்றன.

சரண்ஜித் சிங் சன்னி - ஃபிர்ஹாத் ஹக்கீம் -  நாராயணன் திருப்பதி
சரண்ஜித் சிங் சன்னி - ஃபிர்ஹாத் ஹக்கீம் - நாராயணன் திருப்பதி

அப்படி இருக்கும்போது, மாநில அரசுகளுடன் ஆலோசிக்காமல், பி.எஸ்.எஃப்-ன் எல்லைகளை மத்திய அரசு தன்னிச்சையாக அதிகரித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. மாநில முதல்வர்களின் அதிகாரத்துக்குச் சவாலாக, ஆளுநர்கள் இருப்பதுபோல, மாநிலக் காவல்துறையின் அதிகாரத்தைக் குறைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பி.எஸ்.எஃப் சட்டத்தின் பிரிவு 139 (ii) தனிநபர்களைக் கைதுசெய்வதற்கான பெரும் அதிகாரங்களை வழங்குகிறது. மேலும், இந்தச் சட்டத் திருத்தத்தில் உள்ளூர் போலீஸாருடன் கலந்தாலோசிப்பது பற்றிக் குறிப்பிடப்படவில்லை. எனவே, இதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்கிறார்கள்.

ஆனால், பா.ஜ.க-வின் தமிழக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியோ, “தேசப் பாதுகாப்பில் எந்தச் சமரசமும் செய்துகொள்ள முடியாது. இது நாட்டின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு. முக்கியமாக அஸ்ஸாம், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் பாதுகாப்பு கருதியே இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறந்து விளங்குவதால்தான் அங்கு அதிகார வரம்பைக் குறைத்திருக்கின்றனர். ஏற்கெனவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதுகூட குஜராத்தில் இது போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது மலிவான அரசியல்” என்றார்.

எல்லை என்றாலே தொல்லைதானோ!