Published:Updated:

ஆழ்துளை மீட்புப் பணிகள் ஏன் சிக்கலாக உள்ளன? விளக்குகிறார் நிலவியல் பேரா.சுப்ரமணியன்

ஆழ்துளைக் கிணறு மிட்புப் பணி
News
ஆழ்துளைக் கிணறு மிட்புப் பணி

ஏதுமறியா அந்தப் பிஞ்சு உள்ளங்கள் அசைய முடியாத, இருள் சூழ்ந்த நரகக் குழிகளுக்குள் சிக்கித் தவித்துத் துடிதுடித்து இறக்கும் வகையில் உலகின் நீளமான சவக்குழிகளாக நிற்கும் இந்த ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுவது ஏன்?

Published:Updated:

ஆழ்துளை மீட்புப் பணிகள் ஏன் சிக்கலாக உள்ளன? விளக்குகிறார் நிலவியல் பேரா.சுப்ரமணியன்

ஏதுமறியா அந்தப் பிஞ்சு உள்ளங்கள் அசைய முடியாத, இருள் சூழ்ந்த நரகக் குழிகளுக்குள் சிக்கித் தவித்துத் துடிதுடித்து இறக்கும் வகையில் உலகின் நீளமான சவக்குழிகளாக நிற்கும் இந்த ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுவது ஏன்?

ஆழ்துளைக் கிணறு மிட்புப் பணி
News
ஆழ்துளைக் கிணறு மிட்புப் பணி

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, நாடே தீபாவளியை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்த நேரத்தில், சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். எத்தனையோ மனிதர்கள்... எத்தனையோ முயற்சிகள். பல்வேறு நிபுணர்கள், அதிகாரிகள், மக்கள் ஒன்றிணைந்து பல மணிநேரங்கள் போராடியும் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை. ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவதும் அவர்களைக் காப்பாற்றும் திராணியின்றி நம் அரசுகள் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்பதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன.

தொடரும் ஆழ்துளை மரணங்கள்
தொடரும் ஆழ்துளை மரணங்கள்
ஹாசிப் கான்

ஏதுமறியா அந்தப் பிஞ்சு உள்ளம் அசைய முடியாத, இருள் சூழ்ந்த நரகக் குழிகளுக்குள் சிக்கித் தவித்துத் துடிதுடித்து இறக்கும் வகையில் உலகின் நீளமான சவக்குழிகளாக நிற்கும் இந்த ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுவது ஏன்? தோண்டியபிறகு தண்ணீர் கிடைக்கவில்லையென்றால், அதை அப்படியே போட்டுவிடுவது எச்சரிக்கையின்மையாலா! எதிர்காலத்தில் நீர் ஊறும் என்ற நம்பிக்கையினாலா! இப்படிக் கைவிடப்பட்டுக் குழந்தைகளுக்கு எமனாகிக் கொண்டிருக்கும் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை என்ன செய்யலாம்... போன்ற நம் கேள்விகளுக்கு விடையளித்துள்ளார், ஓய்வுபெற்ற நிலவியல் பேராசிரியர் சுப்ரமணியன்.

ஆழ்துளை கிணறுகளைத் தோண்டுவது சரியா? ஒவ்வொரு நில அமைப்புக்கும் ஏற்றவாறு அதன் காரணங்கள், தேவைகள், தோண்டும் முறைகள் மாறுபடுமா?

மீட்புப் போராட்டம்
மீட்புப் போராட்டம்

கட்டுக்குள் அடங்காத மக்கள்தொகைப் பெருக்கத்தின் காரணமாக, நம் அன்றாடத் தேவைகளும் அதிகமாகிவிட்டன. தேவைகளை ஈடுகட்ட வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. அதன் பன்முக மாற்றத்தையே நாகரிக வளர்ச்சி என்றும் பொதுவாகக் கருதுகிறோம். இத்தகைய மாற்றங்களின் ஓர் அங்கம்தான் தண்ணீர் தேவையும்.

பெருகிவரும் தொழிற்சாலைகள், முறைப்படுத்தப்படாத விவசாயம், நகர விரிவாக்கம் போன்ற காரணங்களால், நாளுக்கு நாள் நீர்த் தேவைகள் அதிகமாகின்றன. மேலும், நதிநீர் பங்கீட்டில் நடைபெறும் குளறுபடிகள், தனிமனிதப் பேராசை போன்ற தவறுகளாலும் தண்ணீரின் தேவை கூடிக்கொண்டே போகின்றது. இந்த நெருக்கடிகளைத் தாண்டி நீர்த் தேவைகளைச் சமாளித்தாக வேண்டிய கட்டாயம் நிலவுவதாலேயே நாம் பூமியில் `குழாய்க் கிணறுகள்' அமைக்கின்றோம். இன்றைய சூழலில் இது தவிர்க்கமுடியாதது. எனவே, ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுவது சரியே.

ஆற்றுப் படுகைகளில் கிணறுகளின் தேவை இருக்காது என்றாலும், கடை நீர்ப்பாசன நிலங்களுக்கும், அதை ஒட்டியுள்ள நதியோரக் குடியிருப்புகளுக்கும் இந்தக் கிணறுகள் இன்றியமையாதது. சற்றே மேட்டுப்பாசனத்தில் அமைந்துள்ள இடங்கள் மற்றும் வானம் பார்த்த பூமிகளில் இன்றைய சூழலுக்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது தவிர்க்கமுடியாதது. மேலும், கடினமான பாறைகளிலும் மிருதுவான பாறைகளிலும் மணல் படுகைகளிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, தேவைகளுக்காக, பலவிதக் குறுக்களவுகளில் வேறுபட்ட ஆழங்களில் இவை தோண்டப்படும்.

மக்கள் ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் அப்படியே விட்டுவிடுவது எச்சரிக்கையின்மையால் மட்டும்தானா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? உதாரணத்துக்கு, மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதன்பிறகு அந்தக் கிணற்றைப் பயன்படுத்தலாம் என்பதுபோல் ஏதேனும் காரணம்?

பேரா.சுப்ரமணியன்
பேரா.சுப்ரமணியன்

பொதுவாக, நாம் தோண்டும் ஆழ்துளைக் கிணறுகள் எல்லாமே, நாம் எதிர்பார்க்கும் பலனை உடனடியாகத் தராது. பூமியிலுள்ள பாறைகளின் நீர் பிடிப்புத்தன்மையைப் பற்றிய நம்முடைய தவறான கணிப்பும் ஆழமாகத் தோண்டத் தோண்ட அதிக தண்ணீர் வரும் என்ற தவறான புரிதலுமே அப்படி எதிர்பார்க்க வைக்கின்றன. விவசாயமும் விஞ்ஞானமும் இணைந்து செயல்பட்டால், தண்ணீர் வராத ஆழ்துளைக் கிணறுகளே இருக்காது. ஆனால், தங்கள் வயல்களில் நிலத்தடி நீர் போதுமான அளவுக்கு 'இல்லை/இல்லவே இல்லை' என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சில விவசாயிகளிடம் இல்லாததால், போலியாகக் குறி சொல்பவர்களை நம்பி அதிக ஆழமான கிணறுகளைத் தோண்டிவிட்டுத் தண்ணீர் வராததால் அப்படியே விட்டுவிடுகின்றனர்.

அப்படி மூடாமல் விடுவதற்கு, ``என்றாவது ஊற்று கிடைக்காதா!" என்ற எண்ணமே முக்கியக் காரணம். இந்த எதிர்பார்ப்பு தவறல்ல. அதற்காக, அந்த ஆழ்துளைக் கிணறுகளை அலட்சியமாகப் பாதுகாப்பின்றி வைக்கக் கூடாது.

அவர்கள் எதிர்பார்ப்பதுபோல், அவற்றைத் திறந்து வைக்காமல் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யவைக்க வேறு வழிகள் ஏதேனும் உண்டா?

உடனடிப் பயன் தராத ஆழ்துளைக் கிணறுகளை, அப்படியே மூடிவிடாமல் வேறு வழிகளில் பயன்தர வைக்கலாம். நிபுணர்கள், அரசு நீர் மேலாண்மைத் துறை அதிகாரிகளின் அறிவுரைகளோடு மழைநீர் மூலம் நிலத்தடி நீர் மீள்நிரப்பு செய்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அதைப் பயன்படுத்தலாம்.
சுப்ரமணியன், ஓய்வுபெற்ற நிலவியல் பேராசிரியர்

பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணற்றின் தரைமட்டத்திலிருந்து ஐந்து அடி உயரத்துக்கு அந்தக் குழியை ஒரு குழாயோடு இணைத்துத் தூண் இருப்பதுபோல் செய்ய வேண்டும். அந்தக் குழாயைச் சுற்றி, சுமார் ஆறுக்கு ஆறு அடிகள் என்ற அளவில் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பைச் செய்து, அந்தத் தொட்டியையும் சல்லடை மூடி போட்டு மூடி வைத்துவிட வேண்டும். இப்படிச் செய்தால், அந்த இடத்தில் குழாய் வழியாகவும் ஆறுக்கு ஆறு அடியில் விடப்பட்டிருக்கும் மண்ணின் வழியாகவும் மழைநீர் உட்புகுந்து நிலத்தடி நீர் மீள்நிரப்பு நடைபெறும். சுற்றியும் தண்ணீர்த் தொட்டிபோல் சுவர் எழுப்பிவிடுவதால், குழி இருப்பது தெரியாமல் குழந்தைகள் தவறி விழமாட்டார்கள். தொட்டிக்கு மேலே சல்லடை மூடி போட்டுவிடுவதால், அதையும் தாண்டி விழுவதற்கான சாத்தியக்கூறுகளையும் குறைக்க முடியும்.

இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அவர்கள் மட்டுமின்றி, பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பயன் கிடைக்கும். குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

ரோபோட்டிக்ஸ் இயந்திரங்கள் ஏன் ஆழ்துளைக் கிணறுகளில் சரியாகச் செயல்படுவதில்லை. பாறைகள், மண்ணின் தன்மை போன்றவை காரணமா?

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு
தே.தீக்‌ஷித்

பூமிக்குள் ரோபோடிக் இயந்திரங்கள் சரியாக வேலை செய்யாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. பூமியிலுள்ள கனிமங்களின் தன்மையால், இயற்கையாகவே மின்னலைகளும் மின்காந்த அலைகளும் சுழன்றுகொண்டிருக்கும். அவற்றின் அளவு சிறிதாக இருந்தாலும், மின்-மென் இயந்திரங்களைப் பாதிக்கலாம். மேலும், பல கனிமங்கள் காந்த சக்தியை வெளியிடக் கூடியது. அதுவும் ரோபோடிக் இயந்திரங்களின் வேலைத்திறனைப் பாதிக்கக்கூடும். இவையன்றி, கதிரியக்க வெளியீட்டுக் கனிமங்கள் பூமிக்கடியிலுள்ள பாறைகளில், ஆற்று மண் குவியல்களில், களிமண் அடுக்குகளில், காணப்படும். இவையெல்லாம் ரோபோடிக் இயந்திரங்களைச் செயலிழக்கச் செய்ய வாய்ப்புகள் அதிகம் என்பதால்தான், ரோபோடிக் இயந்திரங்களின் பயன்பாடுகள் எல்லைக்கு உட்பட்டவையாக இருக்கின்றன.

கருவிகள் உதவும் என்பது நடைமுறைச் சாத்தியமா? சாத்தியமென்றால், அதற்குத் தகுந்த கருவியைத் தயாரிக்கையில் கவனிக்க வேண்டிய சிக்கல்கள் என்னென்ன? அனைத்து நிலப்பரப்புக்கும் ஏற்றவாறு ஒரே இயந்திரம் சாத்தியமா?

ஆழ்துளை மீட்புப் பணிகள் ஏன் சிக்கலாக உள்ளன? விளக்குகிறார் நிலவியல் பேரா.சுப்ரமணியன்
எல்லா நிலப்பகுதிகளுக்கும் ஏற்றாற்போல் ஒரே இயந்திரத்தை வடிவமைப்பது சாத்தியமல்ல. பூமியின் மையப்பகுதி 6,378 கிலோமீட்டர்கள். அதில் மனிதனால் செல்லமுடிந்ததே அதிகபட்சம் 17 கிலோமீட்டர் வரைதான். நிலத்துக்கு அடியில் செயல்படுவது அவ்வளவு எளிமையானதல்ல.

ஏற்கெனவே சொன்னதுபோல் அங்குள்ள மின்-காந்த அலைகளும் பல சிக்கல்களை உருவாக்கும். குழந்தை சுஜித் விழுவதற்குத் தோதாக இயற்கையாகவே பிளந்திருக்கும் ஆழ்துளைக் கிணறுகளின் வாய்ப்பகுதிதான் காரணம். ஆனால், குழந்தைகள் ஒருவேளை விழுந்தாலும்கூட அவ்வளவு ஆழத்துக்குச் சென்றுவிடாதவாறு தற்காத்துக்கொள்ள முடியும். ஆழ்துளை கிணறுபோடும்போதே, குழாய் அமைக்க ஓரிரண்டு அங்குலம் இடைவெளி விட்டு குழியைச் சுற்றி 10 அடி ஆழத்துக்குள் தரைமட்டத்தில் ஒன்று அதற்குக் கீழே மூன்றடியில், 6 அடியில் என்று மூன்று நான்கு கம்பி வளையங்களை அமைத்துவிட்டால், குழந்தைகள் விழுந்தாலும் சல்லடை போன்ற அந்தக் கம்பி வளையங்களின்மீதுதான் விழுவார்கள். முதல் வளையம் உடைந்தாலும், இரண்டாவது அல்லது மூன்றாவது வளையங்கள் அவர்களைத் தாங்கிப் பிடித்துவிடும். பின்னர் அங்கிருந்து உடனடியாக நாமே காப்பாற்றிவிடவும் முடியும்.

பிரச்னை வந்தபிறகு எப்படித் தற்காத்துக் கொள்ளலாம் என்பதைவிட, பிரச்னையே ஏற்படாதவாறு எப்படிச் செயல்படலாம் என்று சிந்திப்பதுதான் சரியாக இருக்கமுடியும். இதிலும், ஏதுமறியா குழந்தைகள் தவறி விழுந்துவிடாமல் இருக்க என்னென்ன செய்யவேண்டுமோ, அவை அனைத்தையும் செய்து வைத்துக்கொள்வதுதான் விபரீதங்களுக்கு இட்டுச் செல்லாமலிருக்க நாம் எடுத்து வைக்கவேண்டிய முதல்படி.