அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

காய்ச்சலுக்கு ஊசிபோட்டார்... பிள்ளையையே பறிகொடுத்துட்டோம்!

கவி தேவநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
கவி தேவநாதன்

- கதறும் குடும்பம்... தவறான சிகிச்சை காரணமா?

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் ஊசிபோடப்பட்ட 6 வயது சிறுவன், அடுத்த சில மணி நேரத்திலேயே உயிரிழந்த பரிதாப நிகழ்வு ராஜபாளையத்தைக் கலங்கடித்திருக்கிறது. செல்ல மகனைப் பறிகொடுத்த சோகத்தில் உண்ணாமல், உறங்காமல் துயரத்தில் ஆழ்ந்து கிடக்கிறார் வெல்டிங் தொழிலாளி மகேஸ்வரன்.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது மகேஸ்வரனின் வீடு. வீட்டின் முற்றத்தில் தன் 10 வயது பேத்தியை மடியில் வைத்துக்கொண்டு ஒடுங்கிப்போய் அமர்ந்திருக்கிறார் பாட்டி முனீஸ்வரி. “அச்சுவெல்லம்போல ஓடியாடிக்கிட்டு கிடந்த ஆம்பளைப் புள்ளையைப் பறிகொடுத்துட்டு, யாரோட பசிக்கு நான் சோறாக்கப் போறேனோ தெரியலையே” என்று புலம்பிக்கொண்டிருந்தார் முனீஸ்வரி. அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, குழந்தை கவி தேவநாதனுக்கு என்ன நடந்தது என்று மகேஸ்வரனிடம் விசாரித்தோம்.

காய்ச்சலுக்கு ஊசிபோட்டார்... பிள்ளையையே பறிகொடுத்துட்டோம்!

“வெள்ளிக்கிழமை பிள்ளைக்குக் காய்ச்சல் அடிக்குதேன்னு பக்கத்துல இருந்த ஒரு நர்ஸம்மாகிட்ட கூட்டிட்டுப்போய் காட்டினேன். அவங்க என் மகனுக்கு புட்டத்துல ஊசி போட்டாங்க. இரண்டு நாள் நல்லாதான் இருந்தான். மூணாவது நாள், ஊசிபோட்ட இடத்தில் வீக்கமாகி, மறுபடியும் காய்ச்சல் கொதிக்க ஆரம்பிச்சுட்டு. அதனால, சம்மந்தபுரத்துல இருக்குற கிரிசங்கர் மருத்துவமனைக்கு பிள்ளைங்களைக் கூட்டிட்டுப் போனேன். நாங்க போன சமயம் வெளியே கிளம்பிக்கிட்டிருந்த டாக்டர் பாஸ்கரன், எங்களைப் பார்த்ததும் ‘வாங்க’னு சொல்லிட்டு ரூமுக்குள் போனார்.

அவர்கிட்டே மகனோட வீக்கத்தைக் காண்பிச்சு மருத்துவம் பார்க்கச் சொன்னேன். சில மாத்திரை, மருந்துகளை டேபிள் மேலவெச்சுட்டு, மகனுக்கு எங்கே வீக்கம் இருந்ததோ அதே இடத்துல ஒரு ஊசி போட்டார். அப்பவே என் பிள்ளை, `வலி தாங்க முடியலைப்பா’னு அழுதான். `ஒண்ணுமில்லப்பா சரியாகிடும்’னு ஆறுதல் சொல்லி தோள்ல சாய்ச்சுக்கிட்டேன். எல்லாம் சரியாகிடும்னு நம்பித்தான்‌ அங்கருந்து வீட்டுக்குக் கிளம்பினோம். வழியில ரயில்வே கிராஸிங்ல நிற்கும்போதே பிள்ளை கிறுகிறுன்னு ஆகிட்டான். வீட்டுக்கு வந்தப்பவும், `காலை தரையில ஊன முடியலை’னு அழுதான். என்னன்னு பார்த்தா ஊசிபோட்ட இடம் இன்னும் பெருசா வீங்கியிருந்துச்சு. மனசு குழப்பத்துலேயே அவனுக்கு கஞ்சி கரைச்சுக் கொடுத்தேன். ஒரு வாய்தான் வாங்கியிருப்பான். வாந்தி எடுத்து, கண்ணுல்லாம் சொருகி நிலைகுலைஞ்சுட்டான்” எனச் சொல்லும்போதே அவருக்கு அழுகை பீறிட்டது.

காய்ச்சலுக்கு ஊசிபோட்டார்... பிள்ளையையே பறிகொடுத்துட்டோம்!
காய்ச்சலுக்கு ஊசிபோட்டார்... பிள்ளையையே பறிகொடுத்துட்டோம்!

ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தவர், “பக்கத்து வீட்டுக்காரரைத் துணைக்கு அழைச்சுக்கிட்டு மறுபடியும் பாஸ்கரன் டாக்டர்கிட்ட மகனைக் காண்பிக்கத் தூக்கிட்டுப் போனேன். தெருமுனை தாண்டுறதுக்குள்ள கை காலெல்லாம் தளர்ந்து என் மேலயே சாய்ஞ்சுட்டான் புள்ளை. டாக்டர்கிட்ட போயி காண்பிச்சப்போ, பிள்ளை கையைப் புடிச்சு பார்த்துட்டு `உடனே ஜி.ஹெச்சுக்கு போங்க’ன்னு சொன்னார் அவர். பதறியடிச்சு ஜி.ஹெச்-க்கு வந்தா, என் புள்ளை செத்து அரை மணி நேரம் இருக்கும்னு சொல்லி என் தலையில இடியை இறக்கிட்டாங்க சார்” எனக் கதறினார்.

பாட்டி முனீஸ்வரி பேசுகையில், “இவங்க அம்மா, மூணு வருஷத்துக்கு முன்னாடியே இறந்துட்டா. பிள்ளைங்க தாய்ப் பாசத்துக்கு ஏங்கிடக் கூடாதுனு என் மகன்தான் ரெண்டு பிள்ளைங்களையும் மார்லயும் தோள்லயும் போட்டு வளர்த்தான். இந்த தீபாவளிக்குக்கூட அவ்வளவு டிரெஸ் எடுத்துக் கொடுத்தான். சாவுறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடிகூட மகன் சைக்கிள் கேட்டான்னு புது சைக்கிள் வாங்கிக் கொடுத்தான். அதை என் பேரன் இங்கிட்டும் அங்கிட்டும் ஓட்டிக்கிட்டு இருந்தது இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு...” என்றார் கண்ணீரோடு.

காய்ச்சலுக்கு ஊசிபோட்டார்... பிள்ளையையே பறிகொடுத்துட்டோம்!
காய்ச்சலுக்கு ஊசிபோட்டார்... பிள்ளையையே பறிகொடுத்துட்டோம்!

குற்றச்சாட்டுக்குள்ளான டாக்டர் பாஸ்கரனிடம் பேசுகையில், “என் மீது குற்றம்சாட்டப்படும்போது, நான் அமைதியாக இருப்பதே நல்லது. எனக்கு இப்போது நேரம் சரியில்லை என எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். வெறும் காய்ச்சலுக்கு ஊசிபோட்டு இறப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. எனவே, உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் விசாரணை முடிவுகள் வரட்டுமே” என்று முடித்துக்கொண்டார்.

காய்ச்சலுக்கு ஊசிபோட்டார்... பிள்ளையையே பறிகொடுத்துட்டோம்!

மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் முருகவேல் பேசுகையில், “சிறுவன் மரணம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் முறையற்ற வைத்தியம் பார்த்துவந்த பெண் நர்ஸ் ஆக்னெஸ்ட் கேத்ரின் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அரசு டாக்டர் பாஸ்கரன் மீதும் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம். விசாரணைக்குழுவினர் தரும் அறிக்கை, சிறுவனின் உடற்கூறாய்வு அறிக்கை, வேதியியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கும் முக்கிய உறுப்புகள் குறித்த அறிக்கை ஆகியவற்றின் மூலம் இறப்பின் காரணங்கள் தெரிந்துவிடும்” என்றார்.

புகாருக்குள்ளான அரசு மருத்துவர் பாஸ்கரன்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று போலீஸாரிடம் கேட்டோம். “சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து இப்போது சந்தேக மரணமாக (174) வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. தவறான மருத்துவம் சிறுவனின் இறப்புக்குக் காரணமாகச் சொல்லப்படுவதால் அதை உறுதிப்படுத்த ஆவணங்கள் தேவையாக இருக்கின்றன. மருத்துவத்துறையின் அனைத்து அறிக்கைகளும் வந்த பிறகு, சிறுவனின் மறைவுக்குக் காரணமானவர்கள் மீது நிச்சயம் வழக்கு பதிவுசெய்யப்படும்” என்றனர்.

“அரசோ, தனியாரோ... உயிர் காக்கும் மருத்துவம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்” என்கிறார்கள் பொதுமக்கள். மக்களின் சந்தேகங்களைத் தீர்த்துவைக்குமா அரசு?