உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் திடீரென உயிரிழந்துள்ளது, பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் நகரில் தன் நண்பர்களுடன் 16 வயது சிறுவன் அனுஜ் பாண்டே, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். மைதானத்தில் ரன் எடுப்பதற்காக ஓடியபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள அனுஜ் பாண்டேவின் உறவினர்கள் மறுத்ததால் பிரேத பரிசோதனை செய்யாமலே அனுஜின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
அனுஜின் தந்தை அமித் குமார் பாண்டே, திரிவேணி கஞ்ச் என்ற பகுதியில் உள்ள சந்தையில் விதை ஏஜென்சியில் பணிபுரிகிறார். இவருக்கு சுமித் என்ற இன்னொரு மகனும் உண்டு. அமித் பாண்டே கூறும்போது, புதன்கிழமை காலை தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதற்காக அனுஜ் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், விளையாடிக் கொண்டிருந்தபோது தலைசுற்றல் காரணமாக அனுஜ் மயங்கி விழுந்ததாக அவரின் நண்பர்கள் தனக்குத் தகவல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

மரணத்திற்கான காரணம் மாரடைப்பாக இருக்கலாம் என்று, சமூக சுகாதார மையத்தின் (CHC) மருத்துவர் கணேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவனின் இறப்புக்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியிருப்பது, அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.