கால்பந்து உலகின் ஜாம்பவான் என போற்றப்படுபவர் பீலே. இவர் பிரேசில் நாட்டு அணிக்காக பல சாதனைகளை செய்த இவர் அந்நாட்டின் அடையாளமாக இருந்து வருகிறார். கால்பந்து வரலாற்றில் 1958, 1962, 1970- களில் நடந்த மூன்று உலகக்கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். உலக அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றிருக்கிறார். 22 ஆண்டு கால்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களை அடித்து சாதனையையும் புரிந்துள்ளார் பீலே. பின் பிரேசில் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

இதனிடையே 82 வயதாகும் பீலேவுக்கு குடல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் அவை அகற்றப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இதய செயழிப்பு மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சையை அவ்வப்போது அவர் மருத்துவமனையில் பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று (30.11.2022) காலை திடீரென பீலே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மகள் கெலி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், ``தற்போது அப்பா நலமாக உள்ளார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. விரைவில் அவருடனான புகைப்படத்தை வெளியிடுவேன்" என்று தெரிவித்துள்ளார். ஆனால் பீலேவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வரும் நிலையில், பீலேவின் உடல்நிலை மோசமாகியுள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.