சினிமா
Published:Updated:

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நீதியா?

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நீதியா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நீதியா?

உலக வங்கியில் வேலை பார்த்த சமயத்தில், ஆப்பிரிக்கா குறித்து நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறேன். அங்கிருக்கும் பல பிரச்னைகளுக்குப் போதிய மின்சாரம் இல்லாததுதான் மிகப்பெரிய காரணமாக இருந்தது.

காலநிலை மாற்றம் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருகிறோம். பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் என்பதாகத்தான் இதுவரையில் கார்பன் உமிழ்வு பற்றிய அமெரிக்காவின் பிரசாரங்கள் இருந்துவருகின்றன. காப்26 மாநாட்டில் வளர்ந்த நாடுகள் படிம எரிபொருள்கள் வெளியிடும் கார்பன் அளவு குறித்துப் பேசின. ஏழை நாடுகள் படிம எரிபொருள்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்காவும் ஐரோப்பிய தேசங்களும் கூட்டாக அறிவித்தன. சமீபத்திய ஆய்வு ஒன்று, இத்தகைய அரசுகளின் நயவஞ்சகத்தைத் தோலுரித்திருக்கிறது. ஆப்பிரிக்காவின் காங்கோவில் இருக்கும் ஒரு சராசரி ஆப்பிரிக்கரைவிட ஒரு சராசரி பிரிட்டன்வாசி வெளியேற்றும் கார்பன் டை ஆக்ஸைடு 200 மடங்கு அதிகம் என்கிறது இந்த ஆய்வு; அமெரிக்காவில் இருப்பவருடன் ஒப்பிட்டால் இது 585 மடங்கு அதிகம். இந்த முரண்பாடுகள் குறித்துத் தொடர்ச்சியாக எழுதிவரும் Breakthrough Institute-ன் இயக்குநரும், அமெரிக்க வாழ் தமிழருமான விஜயா ராமச்சந்திரனிடம் பேசியதிலிருந்து...

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நீதியா?

``ஏழை நாடுகளின் மீதான இந்த அடக்குமுறையை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“உலக வங்கியில் வேலை பார்த்த சமயத்தில், ஆப்பிரிக்கா குறித்து நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறேன். அங்கிருக்கும் பல பிரச்னைகளுக்குப் போதிய மின்சாரம் இல்லாததுதான் மிகப்பெரிய காரணமாக இருந்தது. அடிப்படையான மின்சார வசதிகூட இல்லாத தேசங்களே அங்கு அதிகம். கடந்த சில ஆண்டுகளாக காலநிலை மாற்றம் குறித்தும், ஆற்றலைத் திறன்படப் பயன்படுத்தும் விதம் குறித்தும் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது. காப்26 மாதிரியான மாநாடுகளுக்குப் பணக்கார நாடுகள் ஒருவித அஜெண்டாவோடுதான் வருகின்றன. ஆப்பிரிக்காவில் ஒருவர் ஓராண்டுக்குப் பயன்படுத்தும் மின்சாரத்தை, அமெரிக்கர் ஒருவர் ஒரு நாளிலேயே முடித்துவிடுவார்.

இந்தியாவின் அதிக அளவிலான கார்பன் வெளியேற்றம் குறித்துத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் பேசிவருகின்றன. ஒரு சராசரி அமெரிக்கர் மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் பத்தில் ஒரு பங்குதான் இந்தியர்கள் பயன்படுத்திவருகிறார்கள். ஆப்பிரிக்காவை விடுங்கள், இவர்கள் நிர்பந்திக்கும் இந்தியாவைவிடவே சூழலை மோசமாக்கியதில் அமெரிக்கர்களின் பங்கு அதிகம். இந்தியர்கள் தங்களின் ஆற்றல் (power) தேவைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நயவஞ்சகக் கருத்தாகவே பார்க்கிறேன். ஆப்பிரிக்கர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வதை அபத்தக் கருத்தாகவே பார்க்கிறேன்.

தொழிற்சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என ஆப்பிரிக்காவுக்கு இன்னும் அதிக அளவிலான ஆற்றல் தேவை. அங்கு அடிப்படைத் தேவையான தண்ணீரை எடுக்கக்கூட போதுமான மின்சார வசதிகள் இல்லை. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் நிலையும் இதுதான். புதைபடிவ எரிபொருள்களை ஆப்பிரிக்கர்கள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டுமென எல்லா விதங்களிலும் அரசியல் செய்துவருகின்றன ஐரோப்பிய தேசங்கள். பணக்கார தேசங்கள் தொடர்ச்சியாக நிலக்கரிச் சுரங்கங்களில் முதலீடு செய்துவருகின்றன. ஐரோப்பிய தேசங்கள் ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்குவதற்கு எந்தத் தயக்கமும் காட்டவில்லை. ஜெர்மனியும் ஒரு நிலக்கரிச் சுரங்கத்தை நிறுவியிருக்கிறது. அவர்களுக்கான ஆற்றல் தேவைகளுக்கு எந்தவிதச் சுணக்கமும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அதுகூடாது என ஒரு நாளும் நானும் சொல்லப்போவதில்லை. அதன் லாஜிக்கைப் புரிந்துகொள்கிறேன். ஆனால், ஏழை நாடுகள்மீது தடை கொண்டுவர வேண்டும் என இவர்கள் உள்ளடி வேலை பார்ப்பதை நயவஞ்சகம் என்கிறேன்.”

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நீதியா?

``இதுகுறித்தெல்லாம் பேச ஆப்பிரிக்காவில் யார் இருக்கிறார்கள்?’’

“மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் அதிபர்கள் இதுகுறித்து எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். எங்கள் மீது காற்றாலை, சூரிய ஒளி மின்சாரத்தை நீங்கள் திணிக்கிறீர்கள் என்றால், எங்கள்மீது வறுமையைத் திணிக்கிறீர்கள் என்று பொருள் எனப் பகிரங்கமாகவே குற்றம் சாட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், உலக வங்கியிடமிருந்துதான் இத்தகைய வசதிகளுக்காக ஏழை நாடுகள் நிதி பெற வேண்டிய சூழல் இருக்கிறது. உலக வங்கிகளின் பெருமளவிலான பங்குகள் பணக்கார தேசங்களிடம் இருக்கின்றன. அதனால், வெகு எளிதாகவே, பணக்கார தேசங்கள் அவர்களின் அஜெண்டாவை இதனுள் புகுத்தமுடிகிறது. ஆப்பிரிக்க தேசங்களுக்காகவும் சேர்த்து இந்தியா பேச வேண்டும்.”

``இந்தியாவின் குரல் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என நினைக்கிறீர்களா?’’

“இந்தியாவின் தேவை முன்னெப்போதையும்விட மேற்கத்திய நாடுகளுக்கு தற்போது அதிகம். இந்தியாவுக்கான ஆற்றல் தேவை என்பதும் அதிகம்தான். அடுத்த காப்27 மாநாடு ஆப்பிரிக்காவில் நடக்கிறது. இதற்கு முந்தைய காலங்களில், ஏழை தேசங்களுக்கான இழப்பீடுகள் குறித்து யாரும் பேசியதில்லை. இப்போது நிலைமை மாறத்தொடங்கியிருக்கிறது. மேற்கத்திய நாடுகள் வெளியேற்றிய கார்பனால், இத்தகைய தேசங்கள் பட்ட கொடுமைகள் சொல்லில் அடங்காதவை. அதுகுறித்தும் பேச வேண்டும். ஏழை மக்களை வெறுமனே கார்பன் வெளியேற்றுபவர்களாக இச்சமூகம் பார்த்துவருகிறது. அவர்களை மனிதர்களாகக்கூட இவர்கள் கருதுவதில்லை. இந்தியர்கள் குளிர்சாதன வசதிகளைப் பயன்படுத்துவதைத் தொடர்ச்சியாக ஏளனம் செய்துவருகிறார்கள். இந்தியாவில் இருக்கும் அனைவரும் ஏர் கண்டிஷனிங் பயன்படுத்தத் தொடங்கினால் கார்பன் வெளியேற்றம் எவ்வளவு நடக்கும் தெரியுமா எனக் கட்டுரைகளை எழுதிக் குவிக்கிறார்கள். இந்த உரையாடல்களின் அபத்தத்தை எப்படி எடுத்துக்கொள்வது. அமெரிக்கர்களைப் போலவே 24 மணி நேர மின்சாரம், ஏர் கண்டிஷனிங், போக்குவரத்து என எல்லா உரிமைகளும் இந்தியர்களுக்கும்தானே இருக்கிறது.”

``ஆனால், இதனால் சுற்றச்சூழல் மேலும் மாசடைந்து விடாதா?’’

“மேலே சொன்ன எல்லாவற்றையுமே பணக்கார தேசங்கள் செய்துகொண்டுதானே இருக்கின்றன. ஏழை தேசங்கள் இவற்றைப் பயன்படுத்துவதை ஏன் ஏதோ மகா குற்றமெனக் கருதவேண்டும்? பணக்கார தேசங்கள் புதுப்பிக்கத்தக்க தூய்மையான மாற்று எரிசக்தி வளங்களை நோக்கி நகர வேண்டும். எல்லோருக்கும் சுத்தமான பூமியை உருவாக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஏழை மக்களின் அடிப்படை வசதிகளை நிறுத்திவிட்டுத்தான் புவியைக் காப்பாற்றப்போகிறோம் என இவர்கள் பேசுவதே வேடிக்கையாக இருக்கிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வீடியோ கேமிங் தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மின்சாரமென்பது, ஒட்டுமொத்த ஆப்பிரிக்கக் கண்டத்தைவிடவும் அதிகம். பணக்கார தேசங்களுக்கு மின்சாரம் ஒரு பொழுதுபோக்கு, ஏழை தேசங்களுக்கு அது அடிப்படைத் தேவை. உள்நாட்டுத் தேவைகளை ஒருநாளும் அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் குறைத்துக்கொள்ளப்போவதில்லை. ஆனால், எளிதாக சர்வதேசத் தடைகளை அவர்களால் அறிவிக்க முடிகிறது.”

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நீதியா?

``அசைவ உணவு உட்கொள்ளுவதிலும் பணக்காரர், ஏழை முரண் இருக்கிறதா?’’

“பாதிக்கப்பட்ட குழுக்களையே குற்றவாளிக்கூண்டில் நிற்கவைக்கும் செயலைத்தான் தொடர்ந்து செய்துவருகிறார்கள். ஏழை நாடுகளில் இருப்பவர்களுக்கு அடிப்படையான ஊட்டச் சத்துகள் தேவை. அசைவ உணவுகளை உட்கொள்ளுவதிலும் இந்த முரண்கள் இருக்கத்தான் செய்கின்றன. இங்கு பணக்கார தேசம் என்பதால், அங்கிருக்கும் எல்லோரையும் நான் குறை சொல்லவில்லை. அங்கும் ஏழைகள் உண்டு. சமீபத்திய பேட்டி ஒன்றில், அமெரிக்க செனட்டரான எலிசபெத் வாரென் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 2018-ம் ஆண்டு கட்டிய ஃபெடரல் வரி என்பது பூஜ்ஜியம். ஏழை பணக்கார முரண்களும் ஏற்றத்தாழ்வுகளும் உலகம் முழுக்கவே இருக்கின்றன.

ஏழை நாடுகளுக்கு என்ன வேண்டும் எனப் பேச மறந்துவிட்டு, பணக்கார தேசங்களின் குரலாக எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறோம்.”