அலசல்
Published:Updated:

‘கவுன்சிலர் பெயரைச் சொல்லி லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்...’ -

சிவகாசி
பிரீமியம் ஸ்டோரி
News
சிவகாசி

கட்டுக்கட்டாய்ப் பணம்... கப்பலேறிய சிவகாசி மானம்!

‘‘என் வார்டு பொதுமக்கள் 11 பேரின் கோரிக்கை மனுவை நிறைவேற்ற அதிகாரிகள் கேட்ட லஞ்சப் பணம் மொத்தத்தையும் நானே தர்றேன்” என ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை நீட்டி சிவகாசி மாமன்றக் கூட்டத்தையே அதிரவைத்தார் ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் இந்திராதேவி. நிறைமாத கர்ப்பிணியாக, கையில் 500 ரூபாய்க் கட்டுடன் அதிகாரிகளிடம் துணிச்சல் காட்டிய 5-வது வார்டு கவுன்சிலரான இந்திராதேவி குறித்து சமூக வலைதளங்கள் எல்லாவற்றிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்துகொண்டு அதிகாரிகளை எதிர்த்து நின்ற அந்தப் பெண் கவுன்சிலர் யார்... அவரின் பின்புலம் என்னவென்பதை அறிய நேரில் சந்தித்தோம். பேறுகாலம் முடிந்து சிகிச்சையி‌ல் இருந்ததால் சந்திப்பு சற்று தள்ளிப்போயிருந்தாலும், பல தகவல்களுடன் பேச ஆரம்பித்தார் இந்திராதேவி. “என் கணவரின் குடும்பத்தினர் பல தலைமுறையாக தி.மு.க-வில் பயணிப்பவர்கள். என் அப்பா ரமேஷ் 6-வது வார்டு தி.மு.க வட்டச் செயலாளர். கணவர் மாரீஸ்வரன், திருத்தங்கல் தி.மு.க மாணவரணிச் செயலாளர். உள்ளாட்சித் தேர்தலில், சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட எங்களின் 5-வது வார்டு பெண் வேட்பாளர்களுக்கானது என அறிவிக்கப்பட்டது. நான் தி.மு.க‌ வேட்பாளராகக் களமிறங்கினேன். எங்கள் வார்டில் இருக்கும் 950 குடும்பங்களைச் சேர்ந்த வாக்காளர்களிடம் வாக்கு கேட்டுச் செல்லும்போதே 10 ரூபாய் உறுதிமொழிப் பத்திரத்தில், ‘லஞ்சம் வாங்காமல் நேர்மையாக உழைப்பேன்’ எனக் கையொப்பமிட்டு வழங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு. இதனால், திருத்தங்கல் நகர்ப் பகுதியில், `அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கவுன்சிலர்’ என்ற பெருமையும் கிடைத்தது.

 இந்திராதேவி
இந்திராதேவி

நான் ஒன்றும் சண்டைக்காரி இல்லை. இதுவரை ஒன்பது முறை சிவகாசி மாமன்றக் கூட்டம் நடந்திருக்கிறது. முதல் ஐந்து கூட்டங்களிலும் மற்றவர்களைப்போல் எந்தக் கேள்வியும் கேட்காமல், வாசிக்கப்படும் தீர்மானத்துக்குக் கையெழுத்து போட்டுவிட்டு வந்துவிட்டேன். ஆனால், ஒன்பது மாதங்களாகியும் மாநகராட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எந்த வேலையும் நடக்கவில்லை. எனது வார்டுக்குட்பட்ட காளிமுத்துநகரில் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்ததாரருக்கு வேலைக்கான ஆர்டரும் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஏழு மாதங்களாகியும் அந்தப் பணி நடைபெறவில்லை. திருத்தங்கலில் வீடுகளுக்குத் தண்ணீர் இணைப்பு கொடுப்பதில் மோசடி நடப்பது தெரிந்து மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பேர் மீது ‘தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவ’த்தில் வழக்கு தொடர்ந்தேன். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மாநகராட்சிப் பணியாளர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

‘கவுன்சிலர் பெயரைச் சொல்லி லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்...’ -

சிவகாசியில் வீட்டுத்தீர்வை பெயர் மாற்றம், காலிமனை பெயர் மாற்ற வரி, தண்ணீர் இணைப்பு, குழாய் சீர்செய்தல், பிளான் அப்ரூவல், பிறப்பு- இறப்பு சான்றிதழ் உட்பட ஒவ்வொரு கோரிக்கைக்கும் லஞ்சம் கேட்கிறார்கள். எல்லாம் ஃபிக்ஸடு ரேட். வீட்டுத்தீர்வை, காலிமனை பெயர் மாற்றத்துக்கு 10 ஆயிரம், தண்ணீர் இணைப்புக்கு 25 ஆயிரம், பிளான் அப்ரூவலுக்கு சதுர அடி அளவைப் பொறுத்து ஒரு லட்சம் வரை லஞ்சம் கேட்கிறார்கள். ‘லஞ்சம் பெறப்படாத எந்த கோப்பும் உயரதிகாரிகளின் மேசைக்குப் போகக் கூடாது’ என்பது மாநகராட்சியில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. எனது வார்டைச் சேர்ந்த 11 பேரின் வீட்டுத் தீர்வை பெயர் மாற்ற விண்ணப்பங்களை நானே மாநகராட்சியில் சமர்ப்பித்தேன். ஆனால், அதிகாரிகளுக்கு லஞ்சம் தரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கோரிக்கை மனுக்கள் ஏழு மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து என் வார்டைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்டு அதிகாரிகளிடம் முறையிட்டபோது, கோரிக்கை மனு ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டிருக்கின்றனர். கூடவே, ‘அந்த லஞ்சத்தில் வார்டு கவுன்சிலர், பில் கலெக்டர், வருவாய் ஆய்வாளர், ஆணையாளர் ஆகிய நான்கு பேருக்கும் பங்கு இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது எனக்கே தெரியாமல், என் பெயரைப் பயன்படுத்தி அதிகாரிகள் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள். அதனால்தான் மாமன்றக் கூட்டத்தில், ‘அதிகாரிகள் கேட்ட லஞ்சப் பணம் மொத்தத்தையும் நானே தர்றேன்’ என்று பேசினேன். அதிகாரிகள் செய்யும் தவறுகளால் ஆட்சிக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படக் கூடாது என்பதே என்னுடைய நோக்கம்” என்றார் விரிவாக.

கிருஷ்ணமூர்த்தி, சங்கீதா இன்பம்
கிருஷ்ணமூர்த்தி, சங்கீதா இன்பம்

கவுன்சிலர் இந்திராணியின் குற்றச்சாட்டு குறித்து மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரித்தோம். “கவுன்சிலரின்‌ பேச்சு குறித்து மேலிடம் வரைக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. அவர் குற்றம்சாட்டுவதுபோல மாநகராட்சியில் எந்தப் பணிக்கும் லஞ்சம் கேட்டுத் தாமதப்படுத்தப் படுவதில்லை. கோப்புகள் நிலுவையில் இருந்தால் அவற்றைக் கண்காணித்து, துறையின் உயர்மட்ட அதிகாரிகளே எங்களைக் கேள்வி கேட்கும் அளவுக்கு, எல்லாம் வெளிப்படையாகத்தான் நடக்கின்றன. அரசியலில் ஆதாயம் தேட வேண்டும் என்பதற்காக மாமன்றக் கூட்டத்தில் அவ்வாறு அவர் நடந்து கொண்டிருக்கிறார்” என்றார்.

மாநகராட்சி மேயர் (தி.மு.க) சங்கீதா இன்பம் பேசும்போது, “பொதுமக்களின் மனுக்கள் நிலுவையில் இருப்பதையும், அதிகாரிகள் லஞ்சம் கேட்டதையும் எனது கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தால் உடனே நடவடிக்கை எடுத்திருப்பேன். இப்போதும் சொல்கிறேன்... மாநகராட்சிப் பணிகளைப் பொறுத்தவரை யார் தவறு செய்தாலும், அது அதிகாரிகளாகவே இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

போன மானம் போனதுதானே..?!