
சென்ற ஆண்டு தமிழகத்தில் வீசிய கஜா புயலின் துயரச் சுவடுகள் நம் மனத்திரையை விட்டு இன்னும் அகலவில்லை.
சில மணி நேரத்தில் ஒட்டுமொத்த வாழ்வும் உருக்குலைந்து நின்றனர் எளிய மக்கள். இறந்த மாடுகள், சிதைந்த வீடுகள் என தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்ட கிராமங்கள் சிதைந்துகிடந்தன. வாசகர்களின் பங்களிப்போடு உடனடியாகக் களத்தில் இறங்கி நிவாரணப் பொருள்கள் வழங்கியது விகடன். தொடர்ந்து பல்வேறு மீட்புப்பணிகளை மேற்கொண்ட விகடன், வீடின்றித் தவித்த மக்களுக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டும் பணியை வாசகர்கள், விகடன் ஊழியர்கள், விகடன் குழுமத்தின் வாசன் அறக்கட்டளை பங்களிப்புகளோடு உடனடியாகத் தொடங்கியது.
சென்ற வாரம் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியிலுள்ள முதலியார் தோப்பு, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு முதலிய கிராமங்களைச் சேர்ந்த, வீடிழந்த 10 ஏழைக் குடும்பத்தினருக்குப் புதிய கான்கிரீட் வீடுகளின் சாவியை வழங்கினார் ஜூனியர் விகடன் ஆசிரியர் ச.அறிவழகன். மஞ்சள், குங்குமம், காமாட்சி விளக்குடன் வீட்டின் சாவியைப் பத்து குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர். விகடன் குழும முதன்மைப் பொறுப்பாசிரியர்கள் கா.பாலமுருகன், வெ.நீலகண்டன், விகடன் குழும நாகை மாவட்ட நிருபர் மு.இராகவன் மற்றும் வாசன் அறக்கட்டளையின் திட்ட அலுவலர் ச.மணிகண்டன் ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
புயலால் தன் குடிசை வீட்டை இழந்து பிளாஸ்டிக் தார்ப்பாயை வைத்துத் தற்காலிகக் குடிசையில் தங்கியிருந்தனர் புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரா குடும்பத்தினர். இப்போது வீடு பெற்ற மகிழ்ச்சியில் இருந்தவரோடு பேசினோம்.

“நானும் என் வீட்டுக்காரரும் கூலிவேலை செஞ்சுதான் பிழைக்கிறோம். ரெண்டு புள்ளைங்க. வாயைக்கட்டி வயித்தக்கட்டி பணத்தைச் சேர்த்துவச்சு ஒரு குடிசை வீட்டைக் கட்டினோம். அந்த நேரத்துலதான் புயல் வந்தது. புயலுக்கு பயந்து பக்கத்துல இருக்கிற மாடி வீட்டுலபோய் தஞ்சமடைஞ்சோம். எங்க தெரு ஜனங்களே அங்கதான் இருந்தாங்க. அந்த ராத்திரி அடிச்ச பேய்க்காத்தும், சத்தமும் இப்ப நெனச்சாலும் உடம்பு பதறுது. பொழுது விடிஞ்சு பார்த்தப்ப வீட்டைக் காணோம். கூரையெல்லாம் நாலா பக்கமும் சிதறிக் கெடக்கு. மடேர் மடேர்னு நெஞ்சுல அடிச்சுக்கிட்டு அழுதோம். 20 நாள் முகாம்ல தங்கிட்டு எங்க இடத்துக்கு வந்தோம். என்ன பண்றதுன்னே தெரியலை. பிளாஸ்டிக் படுதாவைக் கூரையா போட்டு, அதில் வயசுக்கு வந்த பொண்ணை வச்சிகிட்டு, சோறு பொங்கவும் வழியில்லாம, பாய் போட்டுப் படுக்கவும் வசதியில்லாம நாங்க பட்டபாடு அந்த ஆண்டவனுக்கே அடுக்காது. விகடன் குழுமமும் வாசகர்களும், நாங்க எங்க வாழ்நாள்ல நெனச்சுப் பார்க்க முடியாத கான்கிரீட் வீடு கட்டித் தந்திருக்காங்க. இதுபோதுங்க. சாகுறவரைக்கும் மறக்கமாட்டோம்” என்று நெகிழ்ந்து கரம் கூப்பினார்.
தன் வீட்டை இழந்த முதலியார் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த தேவி, குடிசை வீடு கட்ட முடியாத பொருளாதார சூழலில் இருந்தார். அவருக்கும் கான்க்ரீட் வீடு வழங்கப்பட்டது.
“அகஸ்தியம்பள்ளி உப்பளத்துலதான் என் கணவர் வேலை செய்றார். கோடையில ஆறு மாசம் வேலை இருக்கும். அந்த வருமானத்தை வச்சு மழைக்காலம் ஆறு மாசத்தை ஓட்டணும். இதுல பள்ளிக்கூடம் போற ரெண்டு மக இருக்காங்க. பசி, பட்டினியோடதான் பாதி நாள் கடந்துச்சு. இந்தச் சூழ்நிலையிலதான் புயல் எங்களை நடுத்தெருவுல நிறுத்திருச்சு. எல்லாத் தையும் இழந்த எங்களால ஓலைக்குடிசைகூடக் கட்டமுடியாது. எங்களுக்கு கான்கிரீட் வீடு இலவசமா கட்டித் தந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்படி நன்றி சொல்றதுன்னு தெரில...” என்றார் கண்ணீர் மல்க.
அடுத்தகட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களில், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான கான்கிரீட் வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
விகடன் வாசகர்களோடு வாசன் அறக்கட்டளையின் சேவைப் பயணம் தொடர்கிறது, எல்லோரும் இன்புற்றிருக்க..!
கஜா நிவாரணப் பணிகளுக்காக வாசகர்கள் வழங்கிய நன்கொடை விவரங்களைக் காண இந்த Q.R Code-ஐ ஸ்கேன் செய்யவும் அல்லது http://bit.ly/2qBqLCn என்ற லிங்கில் செல்லவும். மேலும் ரசீது பெறாத வாசகர்கள் help@vikatan.com ஐ தொடர்பு கொள்ளவும்.