அலசல்
சமூகம்
Published:Updated:

“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை!”

“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை!”

தமிழக பட்ஜெட் அலசல்...

மிழக பட்ஜெட்டை “உதவாக்கரை பட்ஜெட்” என்று விமர்சித்துள்ளார், தி.மு.க தலைவர் ஸ்டாலின். “சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. மற்றவை ஏமாற்றம்” என்று சொல்லியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். “தமிழக பட்ஜெட் ஒரு கண்துடைப்பு” என்கிறது காங்கிரஸ். “பட்ஜெட் ஒரு வெற்றுக்காகிதம்” என்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. சரி இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை!”
“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை!”

ஆவடி குமார், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

“ப
ட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மூவாயிரம் பேருக்கு நான்கு சக்கர வாகனம் கொடுப்பது, சென்னையில் நீர்நிலைகளை ஓட்டி வசிக்கும் ஏழை மக்களுக்கு 38,000 வீடுகளைக் கட்டித்தரும் நடவடிக்கை, புயல் பாதித்த பகுதிகளில் ஒரு லட்சம் வீடுகளைக் கட்டித்தரும் முயற்சி, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பு, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை உருவாக்குவது, சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ.2,000 கோடி செலவில் நிலத்தடி வாகன நிறுத்தகம், காப்பீடு திட்டத்தின் கீழ் உயிரிழப்பு ஏற்பட்டால் நான்கு லட்சம் ரூபாய், நகராட்சிப் பகுதிகளில் குடிநீர்த் தேவைக்கு ரூ.18,700 கோடி, 20,000 பசுமைத் திட்ட வீடுகள் கட்டும் நடவடிக்கை போன்றவை மிக முக்கியமான அறிவிப்புகள். நம் நிதி நிர்வாகம் சிறப்பாக இருப்பதால், கடந்த ஆண்டைவிட நிதிப் பற்றாக்குறை குறைக்கப் பட்டுள்ளது. கடன் எல்லை அனுமதிக்கப்பட்ட 25 சதவிகிதத்துக்கு மிகாமல் 23 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.”

“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை!”

வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார நிபுணர்

“ஜி
.எஸ்.டி வந்தபிறகு, வரிகள் மூலமாக மாநில அரசு நிதி திரட்டுவதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு சுருக்கிவிட்டது என்கிற நிலையில், வரி அல்லாத பலன்களைத் திரட்டியிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யவில்லை. கஜா புயலால் தமிழகம் கடும் பாதிப்புகளைச் சந்தித்திருக்கிறது. மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய ரூ.15,000 கோடியில், ரூ.900 கோடிதான் வந்திருக்கிறது. ஜி.எஸ்.டி மூலமாக வரவேண்டிய தொகையும் வரவில்லை. ஒதுக்கீடுகளைப் பொறுத்தவரை, அரசின் வருவாயில் குறிப்பிடத் தகுந்தது எதுவும் இல்லை. கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் சென்ற ஆண்டுகளில் இருந்ததைவிட சற்று மாறியிருக்கிறது. தமிழகத்தில் விவசாயம் மிக முக்கியமானது. இங்கு மொத்த உற்பத்தியில் 35 சதவிகிதம் விவசாயத்தைச் சார்ந்துள்ளது. ஆனால், இடுபொருள்களின் விலை, விளை பொருளுக்கான விலை நிர்ணயம், வேளாண் ஆராய்ச்சி மையங்களை விரிவுபடுத்துவது ஆகியவற்றுக்காக எந்தவித முனைப்பும் பட்ஜெட்டில் இல்லை.”

“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை!”

ஜெயரஞ்சன், பொருளாதார ஆலோசகர்

“டா
ஸ்மாக் வருமானத்தைத் தவிர தமிழக அரசால், வேறு எந்த வழிகளிலும் நிதியைக் கொண்டு வந்து சேர்க்க முடியாது. பத்திரப் பதிவுத்துறையில் வரிகளை உயர்த்துவதுதான் ஒரே வழியாக இருக்கிறது. ஜி.எஸ்.டி-யில் மாநில வரி என்று வசூல் செய்கிறார்கள். இதன் மூலம் மாநில அரசுக்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதை ஜி.எஸ்.டி கவுன்சிலில்தான் முடிவுசெய்கின்றனர். இதனால், வருடத்துக்கு நமக்கு வந்துசேர வேண்டிய ரூ.10,000 கோடி வரப்போவதில்லை. மாநில அரசின் செலவுகளுக்காக மேலும் மேலும் கடன் வாங்கும் சூழல் உருவாகிறது. இந்நிலையில், வரும் காலத்தில் நலத்திட்டங்களைத் தொடர முடியுமா என்று தெரியவில்லை. மாநிலங்களுக்கு 32 சதவிகித நிதியைப் பகிர்ந்தளித்து வந்தது மத்திய அரசு. இதை, 42 சதவிகிதமாக 14-வது நிதிக் குழு உயர்த்தியது. `10 சதவிகிதத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்’ எனக் கூறிவிட்டு, `மக்கள் தொகை அடிப்படையில்தான் கொடுப்போம்’ எனக் கண்டிப்பான குரலில் தெரிவித்துள்ளனர். இதனால், மத்தியிலிருந்து வரவேண்டிய வருமானமும் குறைந்துவிட்டது. இப்போது, கையில் இருக்கும் நிதியை வைத்துக்கொண்டு செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.”

“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை!”

செந்தில்ஆறுமுகம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம்

“மு
தியோர், மாற்றுத் திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டோர் ஆகியோர் சமூகப் பாதுகாப்புத் தொகைக்காகப் பதிவுசெய்து காத்திருக்கின்றனர். இதில் பலன்பெறுகிற யாராவது இறந்தால்தான், புதியவரை உள்ளே சேர்க்க முடியும். கடந்த ஆண்டு இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.3,882 கோடி. இந்த ஆண்டு ரூ.3,958 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வெறும் ரூ.76 கோடிதான் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் அரசு போதிய கவனம் செலுத்த வில்லை. மதுவிலக்கைப் படிப் படியாக அமல்படுத்துவோம் என நீதிமன்றத்தில் அரசு கூறியிருந்தது. அதைப் பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை. தேர்தல் நெருங்கக்கூடிய சூழலிலும்கூட, வளர்ச்சித் திட்டங்களும் கவர்ச்சித் திட்டங்களும் இல்லாத பட்ஜெட்டாக வந்துள்ளது.”

“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை!”

எஸ்.ஆர்.சேகர், மாநிலப் பொருளாளர், பி.ஜே.பி

“ஜி.
எஸ்.டி மூலமாக ரூ.96,000 கோடி, மத்திய அரசின் மானியங்கள் மூலமாக ரூ.25,600 கோடி, மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு ரூ.30,600 கோடி என மொத்தம் ரூ.1.52 லட்சம் கோடி வருமானமாக வந்துள்ளது. பத்திரப்பதிவு, டாஸ்மாக், வாகனப்பதிவு உள்ளிட்ட இதர வருவாயாக ரூ.16,900 கோடி வந்துள்ளது. மொத்த வருவாயில் 10 சதவிகிதம் மட்டுமே மாநிலம் ஈட்டும் வருவாயாக உள்ளது. இனியும், `மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது’ என்று எதிர்க்கட்சிகள் சொல்ல மாட்டார்கள் என நம்புகிறேன்.”

- ஆ.விஜயானந்த்

• தமிழக பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்தே சட்டசபைக்குள் என்ட்ரி கொடுத்தனர்.

• பன்னீர்செல்வத்துடன் அவரின் மகன் ரவீந்திரநாத்தும் வந்தது பலரது பார்வையை உயர்த்தியது. பட்ஜெட் நகலுடன், முதல்வர் அறைக்கும் பன்னீர்செல்வத்துடன் சென்றார் ரவீந்திரநாத்.

“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை!”

• ஜெயலலிதா மறைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. ஜெயக்குமார் நிதி அமைச்சராக இருந்தபோது, பட்ஜெட் நகலை ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து வணங்கியதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த முறை அம்மாவின் ஆசியோடு பட்ஜெட் தாக்கல் செய்வதாகச் சொல்லி, சமாதிக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டார் பன்னீர்செல்வம்.

• திருக்குறளோடு பட்ஜெட் உரையை 10.07-க்கு வாசிக்க ஆரம்பித்த பன்னீர்செல்வம், இரண்டே கால் மணிநேரம் வாசித்தார். பட்ஜெட் உரை வாசித்து முடிக்கும் வரை பத்துக்கும் அதிகமான முறை தண்ணீர் குடித்தார் அவர்.

• பட்ஜெட் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துவிடுவார்கள் என ஆளும்கட்சி தரப்பில் நினைத்தார்கள். ஆனால், பட்ஜெட் உரை முடியும் வரை அவைக்குள் இருந்தது தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன், இதயப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டதால் அவர் ஆப்சென்ட்.

• கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்ட, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய் என்ற அறிவிப்பு, தமிழக அரசு அறிவித்தாலும் மக்களிடம் கவர்னர் அறிவித்த திட்டமாகவே பார்க்கப்பட்டது. அதனால், பட்ஜெட் உரையில் புதிதாக எந்தச் சலுகை அறிவிப்பும் இல்லாமல் பார்த்துக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. புதிய அறிவிப்புகளை ஜெயலலிதா பாணியில் 110 விதியின் கீழ் அவரே அறிவிக்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம் முதல்வர். திங்கள் அன்று நடைபெற்ற கூட்டத் தொடரில், தொழிலாளர்களுக்கு  தமிழக அரசின் சிறப்பு நிதியான ரூ.2,000 ரூபாய் 110- விதியின் கீழ் அறிவித்தது இப்படிதான் என்கிறார்கள். 

• 2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதியன்று, நிகர நிலுவைக்கடன் 3,97,495.96 கோடி ரூபாயாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த மாநில உற்பத்தியில் இந்தக் கடன் தொகை 23.02 சதவிகிதமாக இருக்கும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வரும் நிதி ஆண்டில் தமிழக அரசின் கடன் தொகை நான்கு லட்சம் கோடியைத் தொடப்போகிறது.

• கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் துறைக்கு, மத்திய அரசு ஒதுக்கும் நிதியான ரூ.4,412 கோடி நிதி தமிழக அரசுக்கு வரவில்லை.

ஜி.எஸ்.டி வரி வருவாயில் மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய தொகையை முழுமையாக வழங்கவில்லை என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- அ.சையது அபுதாஹிர்