Published:Updated:

எப்படி போடப்படுகிறது இந்திய பட்ஜெட்...? #DetailedReport

பட்ஜெட் 2020
பட்ஜெட் 2020 ( vikatan )

பட்ஜெட்டில் அடங்கியுள்ள பணம் மொத்தமும் அரசுப் பணம் என்று நம்மில் சிலர் நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். உண்மை அதுவல்ல. அரசுப் பணத்துடன் பொதுமக்கள் பணமும் சேர்ந்ததுதான் பட்ஜெட்! பொதுமக்கள் பணம் அடங்கியதுதான் பொதுக் கணக்கு.

விடைபெற ஆயத்தமாகிவிட்டது, நடப்பு ஆண்டு பட்ஜெட். விரைந்து வரக் காத்திருக்கிறது புதிய பட்ஜெட். பிப்ரவரி 1-ம் தேதி, சனிக்கிழமை விடுமுறை நாள் என்றாலும் அன்றைய தினமே, 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. பொருளாதாரம் படித்தவர்களும் பெருந்தொழில் அதிபர்களும் மட்டுமே பட்ஜெட்டை எதிர்பார்த்த காலம் போய், பெட்டிக்கடைக்காரரும் உற்றுக் கவனிக்கிற காலம் இது. நிதி நிர்வாகம் பற்றிய விழிப்புணர்வு அவசியமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், அரசின் நிதி நிர்வாகத்துக்கு அடிப்படையாக விளங்கும் பட்ஜெட் பற்றிய அடிப்படைத் தகவல்களை ஓரளவு தெரிந்துகொள்வது நல்லது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
vikatan

பட்ஜெட்டுக்கு வயது 160

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படிதான், தற்போதைய மத்திய, மாநில பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. என்றாலும், அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, அதாவது 7.4.1860 அன்றே, ஜேம்ஸ் வில்சன் என்பவரால் இந்தியாவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட், அப்போதைய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்களால் 26.11.1947 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் சர்க்குலர்

மத்திய நிதி அமைச்சகத்தின் `பட்ஜெட் டிவிஷன்’தான் பட்ஜெட் தயாரிப்புக்குப் பொறுப்பு வகிப்பது. அதாவது, மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளிடமிருந்து வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளைப் பெற்று பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. இதற்கான முதல் நடவடிக்கை, பட்ஜெட் டிவிஷனலிருந்து அமைச்சகங்கள் அனைத்துக்கும் அனுப்பப்படும் `பட்ஜெட் சுற்றறிக்கைதான்.’

அடுத்த வருட பட்ஜெட்டுக்கு, நடப்பு வருட ஆகஸ்ட்/செப்டம்பர் மாதமே பட்ஜெட் சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள், கடைப்பிடிக்க வேண்டிய காலக்கெடு, பல்வேறு வகை வரவு - செலவு இனங்களைக் குறிப்பிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, பட்ஜெட்டுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்கிறது பட்ஜெட் டிவிஷன்.

வரி வருவாய்

அரசின் வருவாய் பலவகை என்றாலும், அவற்றுள் முக்கியமானது வரி வருவாய். அந்த வகையில், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின், வரிக் கொள்கை சட்டப்பிரிவு (Tax Policy Legislation) மற்றும் மத்திய எக்சைஸ் மற்றும் கஸ்டம்ஸ் வாரியத்தின், வருவாய் ஆய்வுப் பிரிவு (Tax Research Unit) ஆகியவை வரி வருவாய் தொடர்பான மதிப்பீடுகளை நிதியமைச்சகத்துக்குச் சமர்ப்பிக்கின்றன.

நிறைவு

துறை வாரியான அறிக்கைகளைப் பெற்று, பட்ஜெட்டுக்கு முந்திய கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி, நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் ஆற்ற வேண்டிய பட்ஜெட் சொற்பொழிவுக்கான (Budget Speech) தகவல்களைப் பெற்று, பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி பட்ஜெட் இறுதிசெய்யப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட் தாக்கல்
vikatan

ரகசியம், பரம ரகசியம்

* பட்ஜெட் தகவல்கள் மிகச் சரியாக இருக்க வேண்டும்.

* அவ்வப்போது வரப்பெறும் அரசின் கொள்கை முடிவு சார்ந்த அறிவுரைகள் பின்பற்றிட வேண்டும்.

* காலம் தவறாமை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதுடன், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, பட்ஜெட் பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியில் கசிந்துவிடக் கூடாது என்பது மிக மிக முக்கியம். இது எந்த அளவுக்கு முக்கியம் என்றால், பட்ஜெட் முழுவதையும் அச்சிடத் தேவையான அச்சகம் நிதியமைச்சகத்திடமே உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை, பட்ஜெட் அச்சிடப்படும் அச்சகம் தடை செய்யப்பட்ட இடமாக இருக்கும். அங்கு எவரும் செல்ல முடியாது. அது மட்டுமல்ல, அச்சக ஊழியர்களும் பட்ஜெட்களும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய ஏழு நாள்களுக்கு அச்சகத்தை விட்டு வெளியே வர முடியாது. அந்த அளவுக்கு பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் ரகசியமாக வைக்கப்படுகிறது.

சட்டப்படி மட்டுமே வரி

எந்த ஒரு வரியையும், சட்டம் இயற்றப்படாமல் வசூலிக்க முடியாது என்பது கவனிப்புக்குரிய அரசமைப்புச் சட்ட விதி.

நான்கு வகை வரிகள்

வரி விதிப்பும் வரி வசூலும் வரிப்பங்கீடும் நான்கு வகையாக உள்ளன.

1. மத்திய அரசு வரி (Duty) விதிக்கும். மாநிலங்கள் மட்டுமே வசூலிக்கும். மாநிலங்களே எடுத்துக் கொள்ளும். (ஸ்டாம்ப் டூட்டி போன்றவை)

2. மத்திய அரசே வரி விதிக்கும். மத்திய அரசே வரியை வசூலிக்கும். ஆனால், மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும். (சொத்துவரி, பங்குச் சந்தை வரி)

3. மத்திய அரசு வரி விதிக்கும். மத்திய அரசே வசூல் செய்யும். மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே பங்கிடப்படும். (வருமான வரி போன்றவை)

4. மேற்கண்ட மூன்று வகையான வரிப்பகிர்வு தவிர, நான்காவது வகை வரிப்பங்கீடும் உண்டு. அதாவது, மத்திய அரசின் பட்டியலில் உள்ளதும், மத்திய அரசால் வசூலிக்கப்படுவதுமான கலால் வரியில் ஒரு பகுதி மத்திய தொகுப்பு நிதியிலிருந்து மாநிலங்களுக்கும் தரப்படக்கூடும். இதற்கான சட்டத்தை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும்.

வரிகள்
வரிகள்
vikatan

சர்சார்ஜ்

சர்சார்ஜ் (Surcharge) எனப்படும் கூடுதல் வரி முழுவதும் மத்திய அரசுக்கே போய்ச் சேரும்.

பட்ஜெட் பிரிவுகள்

1. தொகுப்பு நிதி (Consolidated Fund)

2. அவசரகால நிதி ( Contingency Fund)

3. பொதுக் கணக்கு (Public Fund)

இந்த மூன்றும் தனித்தனி பிரிவுகள் கொண்டதுதான் பட்ஜெட். அரசுக் கணக்கு (Government Account) என்பதும் இந்த மூன்றையும் உள்ளடக்கியதுதான்.

தொகுப்பு நிதி

அரசின் வரி வருவாய், வட்டி வருவாய், வரியில் அடங்காத இதர வருவாய், கடன் வரவு, டிரசரியில் என அனைத்து இனங்களையும் கொண்டதுதான் தொகுப்பு நிதி. அரசின் செலவுகள் அனைத்தும் இந்தத் தொகுப்பு நிதியிலிருந்துதான் செய்யப்படுகின்றன.

அவசரகால நிதி

குடியரசுத் தலைவரின் பொறுப்பில் உள்ள நிதியம் (Imprest) இது. அதாவது, அரசின் எந்த ஒரு `புதிய செலவும்’, நாடாளுமன்ற ஒப்புதல் பெற்றே செய்ய வேண்டும். ஆனால், புயல், பூகம்பம் போன்ற இயற்கை இடர்பாடுகளின்போதும், அதைப் போன்ற இதர அவசர காலங்களிலும் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது அல்லவா!

இதற்குத் தருணங்களில், அவசரத் தேவையைச் சமாளிக்க, குடியரசுத் தலைவரின் பொறுப்பில் உள்ள அவசரகால நிதியிலிருந்து செலவு செய்யப்படும். பின்னர், நாடாளுமன்றம்கூடிய பிறகு, மேற்கண்ட செலவுக்கு ஒப்புதல் பெறப்படும். செலவுத் தொகையை, `தொகுப்பு நிதி’யிலிருந்து எடுத்து, `அவசரகால’ நிதிக்குத் திருப்பித் தரப்படும். இந்த நிதியின் தற்போதைய மதிப்பு ரூ.8,000 கோடி.

பொதுக்கணக்கு

பட்ஜெட்டில் அடங்கியுள்ள பணம் மொத்தமும் அரசுப் பணம் என்று நம்மில் சிலர் நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். உண்மை அதுவல்ல. அரசுப் பணத்துடன் பொதுமக்கள் பணமும் சேர்ந்ததுதான் பட்ஜெட்! பொதுமக்கள் பணம் அடங்கியதுதான் பொதுக் கணக்கு (Public Account).

இது எப்படி என்றால், அரசாங்க ஊழியர்களின் புராவிடண்ட் ஃபண்டை அரசு நிர்வாகம் செய்கிறது. ஆனால், பணம் அரசுப் பணமல்ல. அரசு ஊழியர்களின் பணம். இதுவும் பொதுக்கணக்கில்தான் அடங்கும்.

நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பவர் `டெபாசிட்’ கட்டுகிறார். இது அரசுப் பணமல்ல. அவர் ஜெயித்துவிட்டால் திருப்பித் தரவேண்டிய பணம். இந்தப் பணத்தை நிர்வகிப்பதும் அரசுதான். இதுவும் பொதுக்கணக்கில்தான் உள்ளது.

வரிகள்
வரிகள்
vikatan

பற்றாக்குறை பட்ஜெட்

பற்றாக்குறை பட்ஜெட் என்பது தொகுப்பு நிதிப் பற்றாக்குறை மட்டுமல்ல, தொகுப்பு நிதி அவசர கால நிதி மற்றும் பொதுக்கணக்கு ஆகிய மூன்றில் வந்துசேரும் வரவைவிட, இந்த மூன்று கணக்கிலிருந்தும் செலவு செய்யப்படும் செலவு அதிகமாக இருந்தால்தான் பற்றாக்குறை பட்ஜெட்.

செலவு முறை இரண்டு வகை

தொகுப்பு நிதியிலிருந்துதான் அரசின் செலவுகள் முழுவதும் செய்யப்படுகின்றன. செலவுகள் இரண்டு வகை.

1. சாட்டப்பட்ட செலவு (Charged Expenditure)

2. வாக்களிப்பட்ட செலவு (Voted Expenditure)

சாட்டப்பட்ட செலவு

நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமலே செய்யக்கூடிய செலவுகள் சாட்டப்பட்ட செலவுகள். உதாரணமாக,

* ஜனாதிபதி சபாநாயகர், துணை சபாநாயகர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சம்பளம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம், பென்ஷன் முதலானவை இவ்வகைச் செலவுகள்.

* கடன் செலவுகள் முதலானவை நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமலே செலவு செய்யப்படலாம்.

வாக்களிக்கப்பட்ட செலவு

சாட்டப்பட்ட செலவுகள் தவிர்த்து, இதர செலவுகளைச் செய்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவது அவசியம். இவ்வாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் செய்யப்படும் செலவுகள்தான் வாக்களிப்பட்ட செலவுகள் ஆகும்.

நாடாளுமன்ற ஒப்புதல்
நாடாளுமன்ற ஒப்புதல்
vikatan

செலவின் உட்பிரிவு

செலவுகளில் மேற்கண்ட இரண்டு வகைப்பாடு மட்டுமன்றி, பல வகையான உட்பிரிவும் உண்டு. அதாவது,

* வருவாய்ச் செலவு (Revenue Expenditure)

சம்பளம், பென்ஷன், நலத்திட்ட உதவிகள், வட்டிச் செலவு போன்றவை வருவாய் செலவுகள் ஆகும்.

* முதலீட்டுச் செலவு (Capital Expenditure)

கட்டடம் கட்டுதல், நிலம் கையகப்படுத்துதல், வாகனம் வாங்குதல் முதலியன முதலீட்டுச் செலவுகள் ஆகும்.

கணக்கு எண்

நமது சேமிப்புக் கணக்குக்கு, வங்கியில் கணக்கு எண் தரப்படுகிறதல்லவா! அதேபோல், அரசின் வரவு செலவுக்கும் கணக்கு எண் உண்டு. அதாவது, வேளாண்மை, கால்நடை, மீன்வளம் போன்ற ஒவ்வொரு துறைக்கும் கணக்கு எண் உண்டு.

கணக்கு எண்ணை வைத்து வரவு - செலவு எந்தத் துறை சார்ந்து எனத் தெரிந்துகொள்ளலாம்.

* 0020 முதல் 1999 வரை வரவுக்கான கணக்கு எண்.

* 2011 முதல் 3999 வரை செலவுக்கான கணக்கு எண்.

* 4001 முதல் 5999 வரை முதலீட்டுச் செலவு

* 6001 முதல் 7999 வரை கடனும் முன்பணமும்

* 8000 அவசரக் கால நிதி

* 8001 முதல் 8999 வரை பொதுக்கணக்கு.

யார் செலவு செய்யலாம் ?

அதிகாரம் வழங்கப் பெற்ற அதிகாரிகள் மட்டும்தான் அரசுப் பணத்தை செலவு செய்ய முடியும். அத்துடன், செலவு செய்வதற்கு பட்ஜெட்டிலிருந்தால்தான் அரசுப்பணத்தை செலவு செய்ய முடியும்.

நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகம்
vikatan

செலவில் கவனம்

* அரசுப்பணம் என்பது பொதுமக்கள் பணம். எனவே, ஒரு ரூபாய் செலவழிப்பது என்றாலும், தனது சொந்தப் பணத்தை செலவழிப்பதற்கு முன், செலவைப் பற்றி எப்படிப் பரிசீலனை செய்வாரோ, அவ்வாறு நன்கு யோசித்து செலவு செய்ய வேண்டும்.

* தனது சொந்த நன்மைக்கு செலவு செய்யக் கூடாது.

* (விதிவிலக்கு பெற்ற செலவினங்கள் தவிர்த்து) செய்யும் செலவானது, ஒரு குறிப்பிட்ட இனத்தினருக்கோ, மொழியினருக்கோ சாதகமாக இருக்கக் கூடாது. பொதுவாக, அனைவருக்கும் பயன்படும்படி இருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் நிறைய உண்டு, செலவு செய்ய!

தவறான செலவுகள்

நிதிவரையறைகளை மீறி செலவு செய்யப்பட்டால், அதனை இந்திய தலைமைக் கணக்காயர் (Comptroller Auditor General of India) கண்டுபிடித்து, குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்புவார். அறிக்கையானது நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்படும்.

பொதுக்கணக்குக் குழு

தலைமைக் கணக்காயர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட இனங்களை ஆய்வு செய்து, செய்யப்பட்ட செலவு வரையறைக்கு உட்பட்டதுதானா என்பதைக் கண்டறிவது இந்தக் குழுவின் பணி.

செய்யப்பட்ட செலவுகளில் நிதிவரையறை மீறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதனைச் சரிசெய்ய பொதுக் கணக்குக் குழு, தனது பரிந்துரையைச் சமர்ப்பிக்கும். அதன்படி தவறுகள் சரி செய்யப்படும். அதன்பிறகுதான் அந்த நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் முடிவுக்கு வரும்.

மக்களவையிலிருந்து 15 பேரையும், மாநிலங்கள் அவையிலிருந்து ஏழு பேரையும் உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படுவதுதான் ‘பொதுக்கணக்குக் குழு’.

பாராளுமன்றம்
பாராளுமன்றம்
vikatan

கொசுறுத் தகவல்...

* பட்ஜெட் (Budget) என்ற வார்த்தை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக வருடந்திர வரவு செலவு அறிக்கை (Annual Financial Statement) என்று தான் உள்ளது.

* மத்திய அரசு என்ற வார்த்தையும் கிடையாது. அதைக் குறிப்பிடும் வார்த்தை யூனியன் (Union)

* நாடாளுமன்றம் (Parliament) என்பது மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதுதான்.

- ப.முகைதீன் சேக்தாவூது

அடுத்த கட்டுரைக்கு