Published:Updated:

கார்ப்பரேட்களின் கடன் தள்ளுபடியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்! #Budget2020

பட்ஜெட் 2020
பட்ஜெட் 2020 ( vikatan )

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரம்பே இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. வங்கிக்கடன் பெற்ற நிறுவனம் திவாலாகும்போது அதற்கு கடன் வழங்கிய வங்கியும் திவாலாகும் சூழல் நிலவுகிறது. இதற்கான தீர்வை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம்.

2020-21 பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் விவசாயிகள், அரசு ஊழியர்கள், சிறுதொழில்முனைவோர்கள், வங்கித்துறை, வங்கிசாரா நிதித்துறை என அனைத்து மட்டங்களிலும் பெருகியுள்ளன. இந்த நிலையில், வங்கித்துறை மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தரப்பில் இந்த பட்ஜெட்டில் எத்தகைய அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து இந்தத் துறைசார்ந்தவர்களின் கருத்துகளை அறிய முற்பட்டோம்.

தாமஸ் ஃப்ராங்கோ
தாமஸ் ஃப்ராங்கோ

வங்கித்துறைக்கு பட்ஜெட்டில் என்ன மாதிரியான எதிர்பார்ப்பு இருக்கிறதென்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் ஃப்ராங்கோவிடம் கேட்டபோது, ``பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனப் பற்றாக்குறை இருக்கிறது. எனவே, வங்கிகளுக்கு மத்திய அரசு கூடுதல் மூலதனம் வழங்குவதற்கு வழிவகை செய்யவேண்டும். வங்கிகளின் வாராக்கடன் அதிகமாக இருக்கும்சூழலில், வாராக்கடனில் முக்கியப் பங்கு வகிக்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். ஆனால், எந்தெந்த நிறுவனங்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரத்தை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதை வெளிப்படையாக அறிவிக்கவேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் மற்ற வங்கிகளிடம் மீண்டும் கடன் வாங்கி அவர்கள் ஏமாற்ற முடியாது. எனவே, இதில் வெளிப்படைத்தன்மை குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடப்பட வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் தருவதற்கான வரம்பை, ரூ.25,000 கோடியிலிருந்து, படிப்படியாகக் குறைத்து, 2016ம் ஆண்டில் ரூ.10,000 கோடி என்று ரிசர்வ் வங்கி நிர்ணயித்தது. ஆனால், அந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரம்பே இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. வங்கிக்கடன் பெற்ற நிறுவனம் திவாலாகும்போது அதற்கு கடன் வழங்கிய வங்கியும் திவாலாகும் சூழல் நிலவுகிறது. இதற்கான தீர்வை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு மட்டுமே ரூ.2,87,500 கோடி அளவுக்கு வங்கிகள் கடன் வழங்கியுள்ளன. இதில் எஸ்.பி.ஐ வங்கிதான் அதிக அளவு கடன்வழங்கியுள்ளது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
vikatan

பொதுத்துறை வங்கிகள் நிறைய கடன் வழங்கவேண்டுமென்று கூறுகிறார்கள். ஆனால், அதற்கான கட்டமைப்பு தற்போது இல்லை. பிரதமர் அறிவித்த 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்டவேண்டுமென்றால், 2024ம் ஆண்டுக்குள் வங்கிகள் ரூ.300 லட்சம் கோடி அளவுக்குக் கடன் வழங்க வேண்டுமென்று கணிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு கடன் வழங்குமளவிற்கு வங்கிகளில் ஊழியர்களின் எண்ணிக்கை கிடையாது. கட்டமைப்பும் போதுமானதாக இல்லை. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட வேண்டும்.

வங்கி ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை 2017ம் ஆண்டிலேயே முடிய வேண்டியது. ஆனால் இன்னமும் ஊதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் வரும் ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் 2 தேதிகளில் மூன்று நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். அதற்கு முன்னதாக தீர்வு எட்டப்பட வேண்டும். வங்கிக்கிளைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தினால்தான் வங்கிச்சேவை அனைத்துக் கிராமங்களையும் எட்டும். கிராமப்புறங்கள் வளர்ச்சியடைந்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். எளிய மக்களையும் வங்கிக்கடன் சென்றடைய வேண்டும். விவசாயக்கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். விவசாயக்கடனுக்கான ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும். இவற்றுக்கான அறிவிப்புகளை பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

சொக்கலிங்கம் பழனியப்பன்
சொக்கலிங்கம் பழனியப்பன்
vikatan

வங்கிகளுக்கான எதிர்பார்ப்பே மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில், வங்கிகளுக்கு அடுத்தபடியாக பொதுமக்களுக்குக் கைகொடுக்கக்கூடிய வங்கிசாரா நிதி நிறுவனங்களின் தேவையைப் பார்த்தாக வேண்டியிருக்கிறது. வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்து, ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com) நிறுவனத்தின் டைரக்டர் சொக்கலிங்கம் பழனியப்பன் கூறுகையில், ``வங்கிசாரா நிதி நிறுவனங்களைப் பொறுத்தவரை, தங்கள் வசமுள்ள நிதியிலிருந்து கடன் வழங்கியதுபோக, பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றும், பொதுமக்களுக்கு வங்கிக்கடன் வழங்குவார்கள்.

சமீபகாலமாக ஐ.எல் & எஃப்.எஸ் பிரச்னை, டி.ஹெச்.எஃப்.எல் பிரச்னைகள் காரணமாக வங்கிசாரா நிதி நிறுவனங்கள்மீது வங்கிகளுக்கு எதிர்மறைப்பார்வை இருக்கிறது. எனவே, சிறிய அளவிலான வங்கிசாரா நிதி நிறுவனங்கள், வங்கிக்கடன் பெறமுடியாமல் சிரமப்படுகிறார்கள். வங்கிசாரா நிதி நிறுவனங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை. வங்கிகள் கால்பதிக்காத கிராமப்புறங்களிலெல்லாம் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் பெருமளவு கடன் வழங்கி, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகின்றன. பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்கின்றன. வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் வழங்கும்படி அரசுதரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டாலும்கூட அதை வங்கிகள் பெரிதும் பொருட்படுத்தவில்லை. எனவே, ரிசர்வ் வங்கி கடன் கொடுப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும். அதனால் சிறிய அளவிலான நிதி நிறுவனங்கள் பயனடையக்கூடும். வங்கிகள் கடன்கொடுக்க முன்வரும்பட்சத்தில், வட்டி விகிதம் கூடுதலாக இருந்தாலும் தருவதற்கு நிதி நிறுவனங்கள் தயாராக உள்ளன. அரசாங்கம்தான் இதுகுறித்து பட்ஜெட்டில் நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும்" என்றார்.

கிராமப்புற வேலைவாய்ப்பு
கிராமப்புற வேலைவாய்ப்பு
vikatan

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை, மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிப்பது. பணப்புழக்கம் அதிகரிப்பது, வங்கிகள் வழங்கும் கடன்களை அதிகரிப்பதில்தான் இருக்கிறது. எனவே வங்கிகளும் சரி, வங்கிசாரா நிதி நிறுவனங்களும் சரி, நன்முறையில் அதிக மூலதனத்துடன் இயங்க வேண்டியது அவசியம். அதற்கான வழிமுறையை இந்த பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என்பதே இந்தத் துறைகளைச் சேர்ந்தவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு