Published:Updated:

பட்ஜெட் 2019 - 20 : கவனிக்க வேண்டிய துறைகளும் பங்குகளும்!

பட்ஜெட் ஃபாலோஅப்

பிரீமியம் ஸ்டோரி

நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராகப் பதவியேற்றபின் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. இந்த பட்ஜெட்டின் தாக்கத்தால் எந்தெந்தத் துறைகள் சிறப்பாக இருக்கும், அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், பங்குச் சந்தையில் எந்தெந்த நிறுவனப் பங்குகளில் ஏற்றத்தை எதிர்பார்க்கலாம் எனப் பார்ப்போம்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரவேற்பு...

நடப்பு 2019-20 பட்ஜெட்டில் கவனிக்கத்தக்க அம்சம், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கிலான அரசின் அறிவிப்பாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெட்ரோல், டீசல் பயன்பாடுகளைக் குறைப்பது போன்ற தொலைநோக்குப் பார்வையுடன் இந்த பட்ஜெட்டைக் கையாண்டிருக்கிறார் நிதி அமைச்சர்.

பட்ஜெட் 2019 - 20 : கவனிக்க வேண்டிய துறைகளும் பங்குகளும்!

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்க ஜி.எஸ்.டி கவுன்சிலுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எலெக்ட்ரிக் கார்கள் மலிவு விலையில் விற்கப்படும். எலெக்ட்ரிக் வாகனங்களைக் கடன்மூலம் வாங்கினால் திரும்பக் கட்டும் வட்டியில் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெற முடியும். இந்த வகையில், ஒருவரது வருமான வரியில் ரூ.2.5 லட்சம் மிச்சமாகும். இதுவும் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்கும். இந்த இரண்டு மாற்றங்களும் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பாளர்களுக்குச் சாதகமான செய்திகள் ஆகும்.

ஏ.கே.பிரபாகர், ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல், ரிசர்ச் ஹெட்
ஏ.கே.பிரபாகர், ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல், ரிசர்ச் ஹெட்

லித்தியம் ஸ்டோரேஜ் பேட்டரி, சோலார் எலெக்ட்ரிக் சார்ஜிங் கட்டமைப்புகள் உருவாக்கத்துக்கான தொழிற்கூடங்களை அமைப்பதற்கான ஏலத்தில் கலந்துகொள்ள உலகளவிலான பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு வருமான வரிச் சட்டம் 35 AD செக்‌ஷன்படி வருமான வரிச் சலுகைகளும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நீண்டகால நோக்கில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு உறுதி செய்யப்படுகிறது. இது அமரராஜா, எக்ஸைட் போன்ற பேட்டரி தயாரிப்பாளர்களுக்கு நல்ல செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனத்துக்குத் தேவையான இ-டிரைவ் அசெம்பிளி, போர்ட் சார்ஜர், இ-கம்ப்ரஸர், சார்ஜிங் கன் ஆகியவற்றுக்கான சுங்க வரி நீக்கப்படுகிறது. இதன்மூலம் ஒரிஜினல் உபகரணத் தயாரிப் பாளர்களுக்கு வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குள் கொண்டுவருவதற்கான வரிச்சுமை குறையும். இதுவும் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பாளர்களுக்குச் சாதகமான அம்சமாகும். கிளாஸ் மிரர், மோட்டார் வாகன லாக்குகள், மோட்டார் வாகன லைட்டுகள், வைபர் போன்றவற்றுக்கான சுங்க வரியை 10 சதவிகிதத் திலிருந்து 15 சதவிகிதமாகவும் இன்டெர்னல் கம்பூஷன் இன்ஜினில் பயன்படுத்தப்படும் ஆயில் அல்லது பெட்ரோல் ஃபில்டர், இன்டேக் ஏர்ஃபில்டர் போன்றவற்றுக்கான சுங்க வரியை 7.5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகவும், முழுக் கட்டுமானம் முடிந்த வாகனத்துக்கான சுங்கவரி 25 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாகவும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மோட்டார் வாகனங்களுக்கான விலை அதிகரிக்கக்கூடும். இதனால் எலெக்ட்ரிக் வாகனத்துக்கு மாறும் எண்ணம் பலருக்கும் ஏற்படும்.

பொதுத்துறை & வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ஆதரவு...

இந்த பட்ஜெட், பொதுத்துறை மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங் களுக்குச் சாதகமானதாகப் பார்க்கப்படுகிறது. வாராக் கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் பொதுத்துறை வங்கிகள் மீண்டுவர ரூ.70,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு ரூ.30,000 - 50,000 கோடி என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைவிடக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், பொதுத்துறை வங்கிகள் பயன்பெறக்கூடும்.

பட்ஜெட் 2019 - 20 : கவனிக்க வேண்டிய துறைகளும் பங்குகளும்!

நல்ல நிலையில் இயங்கும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் குரூப் அஸெட்களில் ஒருபகுதியை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பொதுத்துறை வங்கிகள் வாங்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதி கிடைக்கக்கூடும். இந்த அறிவிப்புகளால் ஹெச்.டி.எஃப்.சி, சுந்தரம் ஃபைனான்ஸ், சோழமண்டலம் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எல்&டி ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் பயனடையக்கூடும்.

பட்ஜெட் 2019 - 20 : கவனிக்க வேண்டிய துறைகளும் பங்குகளும்!

நடப்பு 2019-20-ம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கை 3.4 சதவிகிதத்திலிருந்து 0.1 சதவிகிதமாகக் குறைத்து, 3.3% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் வெளிச்சந்தையிலிருந்து வாங்கும் கடனை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. இதனால் பொதுத் துறை வங்கிகள் அதிக பலன் பெறுவதால், வட்டி விகிதம் குறையக்கூடும்.

வங்கிசாரா நிதி நிறுவனங் கள் வழங்கும் வீட்டுக் கடன்களுக்கு ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பலப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி நிறுவனங்கள் பரந்துபட்டப் பார்வை யுடன் செயல்படவும் நிதிப் பிரச்னைகளைத் தவிர்க்கவும் இது உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அறிவிப்புகள் வீட்டுக் கடன் நிறுவனங் களுக்கு நீண்டகால நோக்கில் பயனுள்ளதாக இருக்கும். வங்கியிலிருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் எடுத்தால், 2% டி.டி.எஸ் பிடித்தம் செய்யப் படும் என கூறப்பட்டுள்ளது. இது ஆன்லைன் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும்.

பட்ஜெட் 2019 - 20 : கவனிக்க வேண்டிய துறைகளும் பங்குகளும்!

இன்ஷூரன்ஸ் துறையில் வெளிநாட்டு முதலீடுகள் 49 சதவிகிதமாக இருந்ததை 74 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார்கள். இந்தத் துறைக்கு மிகவும் தேவைப்படும் மூலதனத்தை உருவாக்க இது உதவக்கூடும் என்பதால், இது இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்குப் பயனுள்ள அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.

மலிவு விலை வீடுகளுக்கான வீட்டுக் கடன் வட்டியில் கழிவு 2 லட்சம் ரூபாயிலிருந்து 3.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இத்தகைய அறிவிப்புகளின்மூலம் பொதுத்துறை வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய அளவிலான வீட்டுக் கடன் இன்னும் பெரிய அளவில் வளர்ச்சியடைய உதவும். இது அனைத்து வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் பயனுள்ள அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.

உள்கட்டமைப்புத் துறையில் வளர்ச்சி

பிரதம மந்திரியின் மலிவு விலை வீடு திட்டத்தின்படி, 1.5 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 1.95 கோடி வீடுகள் கட்டப்படவுள்ளன. வீடு கட்டி முடிப்பதற்கான சராசரி நாள்கள், 314 என்பதிலிருந்து 114 நாள்களாகக் குறைந்துள்ளது. உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சி சிமென்டுக்கான தேவைப் பாட்டை அதிகரிக்கும். எனவே, சிமென்டுக்கான தேவை மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மலிவு விலையில் வீடு கட்டுவதற்கான வீட்டுக் கடனில் மேலும் ரூ.1.5 லட்சம் வரை வரிக்கழிவு அனுமதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகைத் திட்டம் மற்றும் வாடகைதாரர் சட்டவிதிமுறை இறுதியாக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வீடுகள் கட்டும் பணிக்காக மட்டும் மொத்த சிமென்ட் உற்பத்தியில் 40% பயன்படுத்தப்படுகிறது. எனவே, முன்னணி சிமென்ட் நிறுவனங்கள் அதிக அளவில் பயன்பெறக்கூடும்.

வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் தயாரிப்பு...

செராமிக் டைல்ஸ் மற்றும் சானிடரி பொருள் களில் குறைந்த விலையில் உற்பத்தி செய்வோருக்குப் பயனளிக்கும் பட்ஜெட்டாக இது உள்ளது. இறக்குமதி செய்யப்படும் செராமிக் மேற்கூரைத் தகடுகளுக்கும் செராமிக் தளக் கற்களுக்கும் சுங்கவரி 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் குறைந்த விலை செராமிக் பொருள்களை இறக்குமதி செய்வது குறையும். எனவே, கஜாரியா செராமிக், சீரா செராமிக், ஹெச்.எஸ்.ஐ.எல் போன்ற நிறுவனங்கள் பயனடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

பிரதம மந்திரியின் மலிவு விலை வீடு திட்டத்தின் இரண்டாவது கட்டப்படி, 1.95 கோடி வீடுகள் (கழிவறை வசதியுடன்) கட்டப்பட்டு, தகுதியுள்ள பயனாளர்களுக்குத் தரப்பட உள்ளன. எனவே, வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களின் தேவை அதிகரிப்பதால் அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியடையக்கூடும்.

சாலைக் கட்டமைப்புத் துறை வளர்ச்சி

சாலை, ரயில்வே, கிராம வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித் துறைகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரதம மந்திரி கிராமப்புற சாலை வசதித் திட்டத்தை முடிப்பதற் கான காலக்கெடுவை 2022-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டுக்கு மாற்றியமைத்துள்ளார்கள். எனவே, இந்தப் பணிகள் துரிதப்படுத்தப்படும். அடுத்த கட்டமாக 1.25 லட்சம் கிலோ மீட்டர் சாலை வசதி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை வாங்கியுள்ள கடன் தொகை 62,000 கோடி ரூபாயிலிருந்து 75,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலச் சாலைகளை மேம்படுத்த பாரத் மாலா -2 திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டுக்கான நிதியை அதிகரிப்பதற் கான வேலை நடந்துகொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் 11,000 கிலோமீட்டர் அளவுக்குச் சாலை போடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 4,000 கிலோ மீட்டருக்கு பாரத் மாலா திட்டத்தில் போடப்படும். மொத்த மூலதனமாக ரூ.65,000 கோடியை ஒதுக்கியுள்ளது. இதனால் பிபிஎல், கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ், பி.என்.சி இன்ஃப்ராடெக், எல்&டி உள்ளிட்ட சாலை கட்டமைப்பு நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி அடையக் கூடும்.

ரயில்வே துறையில் வளர்ச்சி

புதிய இருப்புப்பாதைகள், மீட்டர் பாதையை அகலப்பாதையாக மாற்றுவது, மின்பாதை அமைப்பது போன்ற பணிகளுக்காக ரூ.80,000 கோடி தேவைப்படுகிறது. 2018-2030 ஆண்டுகளுக்குள் ரயில்வே துறைக்கு 50 டிரில்லியன் ரூபாய் முதலீடு தேவைப்படுவதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கம் மற்றும் தனியாரின் பங்களிப்புடன் திட்டங்கள் நிறைவேற்றப்படக்கூடும். இதன் காரணமாக எல்&டி, சீமன்ஸ், எ.பி.பி, பி.இ.எம்.எல் ஆகிய நிறுவனங்கள் பெரிதும் பயனடையக்கூடும்.

பட்ஜெட் 2019 - 20 : கவனிக்க வேண்டிய துறைகளும் பங்குகளும்!

உலோகங்கள் & சுரங்கத் துறை

ஸ்டீல் மற்றும் குழாய் தயாரிப்பு நிறுவனங் களுக்குச் சாதகமான பட்ஜெட்டாக இது உள்ளது. ரயில்வே கட்டமைப்புத் துறை வளர்ச்சியில் தனியார் நிறுவனங்களுடன் கைகோத்துச் செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்டீல் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரிக்கும். செயில், டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் போன்ற நிறுவனங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மேலும், 300 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதால், ஸ்டீல் சேனல், ஆங்கிள்கள், ஹாலோ பைப்புகள் தயாரிப்பு அதிகரிக்கும். ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ், சூர்ய ரோஸ்னி அண்டு ஹைடெக் பம்ப்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்குச் சாதகமானதாக இருக்கும்.

காகிதத் தயாரிப்புத் துறை

இந்த பட்ஜெட், உள்நாட்டு காகிதத் தயாரிப்புத் துறைக்கு உதவிகரமாக இருக்கும். செய்திப் பத்திரிகை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நியூஸ் பிரின்ட், அன்கோட்டெட் பேப்பர் உள்ளிட்ட வற்றுக்கு 10% சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட நியூஸ் பிரின்ட், அன்கோட்டெட் பேப்பர் உள்ளிட்டவற்றின் விலை உயரக்கூடும். எனவே, உள்நாட்டு காகிதத் தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்திக்கான தேவை அதிகரிக்கும். இந்த அறிவிப்பால் ஓரியன்ட் பேப்பர், ஜே.கே பேப்பர், வெஸ்ட்கோஸ்ட் பேப்பர் மற்றும் டி.என்.பி.எல் நிறுவனங்கள் பயனடையக்கூடும்.

இந்த பட்ஜெட்டில் மேற்சொன்ன துறைகள் நல்ல முறையில் பயனடையக்கூடும். எனவே, இந்தத் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளும் நல்ல வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த பட்ஜெட்டில் அந்நிய முதலீட்டாளர்கள் தனிநபர்களாக முதலீடு செய்யும்போது அதற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பங்குச் சந்தை சற்று இறக்கமாகக் காணப்படுகிறது. இந்த இறக்கத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, நல்ல பங்குகளில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்தால், கணிசமான லாபத்தைப் பார்க்க முடியும்.

சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம்!

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை மற்றும் சென்னை பங்குச் சந்தையின் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் நிறுவனம் இணைந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் வணிகம் மற்றும் பொருளாதார மாணவர்கள் பயன்பெறும் விதமாக பட்ஜெட் 2019-20 சிறப்புக் கூட்டத்தை நடத்தின.

பட்ஜெட் 2019 - 20 : கவனிக்க வேண்டிய துறைகளும் பங்குகளும்!

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், அதன் துணை வேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இதில், பங்குச் சந்தை எழுத்தாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், சென்னை பங்குச் சந்தையின் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் ஆலோசகர் வ.நாகப்பன், வரித்துறை நிபுணர் கே.கே.சேகர் ஆகியோர் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.

இந்தக் கூட்டத்துக்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் கே.ஜோதி சிவஞானம் மேற்கொண்டிருந்தார். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னையிலுள்ள இதரக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று பலன் அடைந்தனர். மாணவர்களின் கேள்விகளுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் உதவி பேராசிரியர் கே.மாலதி நன்றி கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு