
பட்ஜெட்
- வாசு கார்த்தி
மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிற பா.ஜ.க அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. இதில் தொழில் துறைக்குச் சாதகமாக பல அறிவிப்புகள் இருக்கும் எனத் தொழில் துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால், தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான பெரிய அறிவிப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

இந்த பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25% என்பது மாற்றப்படவில்லை என்றாலும், இதைக் கட்டவேண்டிய நிறுவனங்களின் ஆண்டு டேர்ன்ஓவர் ரூ.250 கோடியிலிருந்து ரூ.400 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதைத் தொழில் நிறுவனங்கள் வரவேற்கவே செய்திருக்கின்றன.
இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல விஷயங்கள் தொழில் துறையின் வளர்ச்சிக்குக் கைகொடுக்குமா, இந்த பட்ஜெட்டில் உள்ள சாதகமான அம்சங்கள் என்ன, பாதகமான அம்சங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) தலைவர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்கள் சொன்னதாவது...

பணப்புழக்கத்தை அதிகரிக்கும்
சஞ்சய் ஜெயர்வர்த்தனவேலு, நிர்வாக இயக்குநர், லஷ்மி மெஷின் வொர்க்ஸ்
‘‘இந்த பட்ஜெட் சிறப்பான பட்ஜெட் எனலாம். அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்கிறமாதிரி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பணப்புழக்கத்தை உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏஞ்சல் வரி சிக்கலில் இருந்தன. அந்த நிறுவனங்களின் பிரச்னை இப்போது தீர்க்கப்பட்டிருக்கிறது. ரூ.400 கோடிக்கும் குறைவான வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி 25 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
தவிர, கிராமபுறப் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல வரவேற்கத்தக்க நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் எடுக்கப் பட்டிருக்கின்றன.”
தொழில்முனைவுக்கான மேம்பாடு
எஸ்.மகாலிங்கம், முன்னாள் தலைமை நிதி அதிகாரி, டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்.

“தொழில்முனைவுக்கான சூழலை மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டி ருக்கிறது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வரிப் பிரச்னை, பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பது, பிரத்தியேக சானல் உள்ளிட்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.
80 பிசினஸ் இன்குபேட்டர்களையும், 20 தொழில்நுட்ப இன்குபேட்டர்களையும் உருவாக்கவிருப்பது நல்ல விஷயமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.’’
என்.பி.எஃப்.சி துறையில்...
சந்திரமோகன், சி.எஃப்.ஓ, டாஃபே

‘‘சில மாதங்களுக்குமுன்பு என்.பி.எஃப்.சி துறையைச் சேர்ந்த ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனம் சிக்கலுக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து இந்தத் துறையில் பணப்புழக்கம் குறைந்தது. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு என்.பி.எஃப்.சி நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது. இதனால் இந்தத் துறையில் உள்ள பணப்புழக்கம் குறையும். என்.பி.எஃப்.சி துறையில் மாற்றம் ஏற்படும்போது, ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் இதன் நேரடித் தாக்கம் நல்லவிதமாக இருக்கும்.
ஜீரோ பட்ஜெட் இந்தியாவுக்குப் புதிதல்ல என்றாலும், இதன்மூலம் விவசாய உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கக் கூடிய விஷயம்.’’
உற்பத்தித் துறைக்கு முக்கியத்துவம் இல்லை
கமல்பாலி, நிர்வாக இயக்குநர், வோல்வோ

‘‘ஒட்டுமொத்தமாக அனைத்துத் துறை யினரை யும் கருத்தில்கொண்டே இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டிருக் கிறது. மின் வாகனங்களுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு துறைக்கும் கணிசமான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவின் ஒட்டுமொத்த ஜி.டி.பி-யில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய உற்பத்தித் துறைக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. சவால் நிறைந்த இந்தத் துறைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும்போது சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும்.’’
நீண்ட காலத்தில் வளர்ச்சி
வினய் லக்ஷ்மன், நிர்வாக இயக்குநர், ரானே குழுமம்.

“தொழிலாளர் சீர்திருத்தங்கள் செய்யப்படும் எனக் கூறியிருப்பது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் சிக்கல்களைத் தீர்த்திருப்பது வரவேற்கத்தக்க விஷயங்கள். அதேபோல, வான்வெளி ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நியூ ஸ்பேஸ் இந்தியா (New space India) என்னும் நிறுவனத்தைத் தொடங்குவது முற்றிலும் புதுமையான நடவடிக்கையாகும். நீண்ட கால இலக்குகளைக் கருத்தில்கொண்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.”
இடைக்கால பட்ஜெட்டிலேயே தொழில் துறைக்குத் தேவையான பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப் பட்டுவிட்டதால், இப்போது பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. தொழில் துறையின் வளர்ச்சிக்கு வாய்ப்பினைத் தரும் பல அறிவிப்புகளை அடுத்த பட்ஜெட்டில் எதிர்பார்ப்போம்!
விமானப் போக்குவரத்து அதிகரிக்கும்!
சுனில் பாஸ்கரன், எம்.டி, ஏர் ஏசியா.

‘‘சுற்றுலாவை ஊக்கப்படுத்த 17 உள்நாட்டு மையங்கள் உருவாக்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. இதன்மூலம் உள்நாட்டு விமானப்போக்குவரத்து உயரும். இதேபோல, விமானங்களைக் குத்தகைக்கு எடுப்பதற்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்படும் என அறிவித்திருக்கிறது. இதன்மூலம் கட்டணம் குறையும்.’’