Published:Updated:

பட்ஜெட் 2019 - எந்தெந்தப் பொருள்கள் விலை குறையும், கூடும்?!

மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன், தனது முதல் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார்.

மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்

பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பு விகிதங்கள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இதனால், பெட்ரோல், டீசல், தங்க நகைகள் உள்ளிட்ட பல பொருள்கள் விலை உயரும். அதேபோல், மின்சார வாகனங்கள், மின்சாதனங்கள் உள்ளிட்டவைகள் விலை குறையும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

எந்தெந்தப் பொருள்களின் விலை குறையும்?

உள்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாதனப் பொருள்கள். அந்தப் பொருள்கள் மீதான சுங்க வரியைத் திரும்பப் பெறுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் விலை குறையும். அந்தவகை வாகனங்களின் சில உதிரிபாகங்களுக்கு சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வாங்குவதற்காகக் கடன் பெறுவோருக்குக் கூடுதலாக ரூ.1.5 லட்சம் வரையில் வருமான வரியிலிருந்து விலக்கு பெற முடியும். மேலும், மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

மின்சார வாகனம்
மின்சார வாகனம்

ஒரு நிறுவனத்தின் பொருள்கள் மட்டுமே விற்கப்படும் சில்லரை வணிக விற்பனையகம் உள்ளிட்டவைக்காக அந்நிய நேரடி முதலீட்டு விதிகளைத் தளர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். இதனால், ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.

விலை அதிகரிக்கும் பொருள்கள்:

சாலை பராமரிப்புக்காகப் பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்குக் கூடுதல் வரியாக ஒரு ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் ரூ.2 வரை விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்
பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்

தங்கம் மற்றும் ஆபரணக் கற்கள் மீதான சுங்க வரி 10 சதவிகிதத்திலிருந்து 12.5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அவற்றின் விலை அதிகரிக்கும்.

புகையிலைப் பொருள்கள் மீதான அடிப்படை சுங்க வரியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

உள்நாட்டில் புத்தகங்களை பிரின்ட் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புத்தகங்கள் மீது 5 சதவிகிதம் சுங்க வரி விதிக்கப்பட இருக்கிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருள்களுக்கான வரியும் 5 சதவிகிதத்திலிருந்து 7.5 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.

சார்ஜர், சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவற்றின் பவர் அடாப்டர், ஐபி கேமரா உள்ளிட்டவை மீதான வரி 5 சதவிகிதம் அதிகரிப்பட்டுள்ளது. ஸ்ப்ளிட் ஏ.சிக்கள் மீதான வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலையும் 10 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா

மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டோ மொபைல் உதிரிபாகங்களுக்கான வரிவிகிதமும் அதிகரிக்கப்படுகிறது.

அதேபோல், ஜவுளிப் பொருள்கள், இறக்குமதி செய்யப்படும் கார்கள், இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக், சோப் தயாரிப்பின் மூலப் பொருள்கள், ஆப்டிகல் பைபர், செராமிக் மற்றும் சுவர்களில் ஒட்டப்படும் டைல்ஸ் கற்கள், செட்டாப் பாக்ஸ், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்புத் தளவாடங்கள் உள்ளிட்டவைக்கும் விலை அதிகரிக்கும்.