Published:Updated:

பட்ஜெட் 2020 பாசிட்டிவ் பங்குகள்!

Nirmala Sitharaman
பிரீமியம் ஸ்டோரி
Nirmala Sitharaman

நிபுணரின் பரிந்துரைகள்

பட்ஜெட் 2020 பாசிட்டிவ் பங்குகள்!

நிபுணரின் பரிந்துரைகள்

Published:Updated:
Nirmala Sitharaman
பிரீமியம் ஸ்டோரி
Nirmala Sitharaman

ங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்திருந்த மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். பட்ஜெட் அறிவிப்புகள் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்வதாக இல்லை. என்றாலும், பாதகமான அம்சங்கள் பெரிதும் இல்லை. சில குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன; சில துறைகள் கண்டுகொள்ளப் படாமல் விடப்பட்டுள்ளன. எனவே, பட்ஜெட்டுக்குப் பிறகு எந்தெந்தத் துறைகளில் ஏற்றம் ஏற்படும், அதனால் எந்தெந்தப் பங்குகளின் விலை உயரும் என்பது குறித்த ஆர்வம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

``பட்ஜெட்டின் தாக்கம், பங்குச் சந்தையில் துறைவாரியாக எப்படி இருக்கும்?’’ என்று ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின், ஈக்விட்டி ரிசர்ச் பிரிவின் தலைவர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். விரிவாவாக விளக்கினார் அவர்.

உள்கட்டமைப்புத்துறை

‘‘பட்ஜெட் 2020-21 அறிவிப்புகளால் உள்கட்டமைப்புத்துறையில் நல்ல வளர்ச்சிக்கான வாய்ப்பிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானம் தொடங்கி, கிராமப்புறச் சாலைகள், வாங்கக்கூடிய விலையிலான வீடுகள் எனப் பல்வேறு உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களுக்கு நிறையவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புத்துறையில், சாலைப் போக்குவரத்துக்கான ஒதுக்கீடு மட்டும் 10% அதிகரித்து, ரூ.91,300 கோடியாக உள்ளது. உள்கட்டமைப்புத்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு விரைவாக அனுமதி தர ‘இன்வெஸ்ட்மென்ட் கிளியரன்ஸ் செல்’ அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, சாவரின் வெல்த் ஃபண்ட் மூலமாக உள்கட்டமைப்புத்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு வரி, டிவிடெண்ட் மற்றும் மூலதன ஆதாயம் அனைத்துக்கும் 100% வரிச் சலுகை தரப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், உள்கட்டமைப்புத்துறையில் முதலீடுகள் பெருமளவு குவிவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் இந்தத் துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்துமே பெரிதும் பலனடையக்கூடும். சாலைகளின் தரம் மேம்படுவதால், வணிக வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கலாம். எனவே, டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் பலனடையக்கூடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கான ஒதுக்கீடு 9% அதிகரித்து, ரூ.27,500 கோடியாக உள்ளது. வாங்கக்கூடிய விலையிலான வீடுகளுக்கு வழங்கும் வீட்டுக் கடன் வட்டிக்கான சலுகை மேலும் ஓராண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை உருவாக்கும் டெவலப்பர்களுக்கான சலுகையும் ஓராண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வரும் நிதியாண்டிலும் இந்தத் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டுவது அதிகரிக்கும். சிமென்ட் விற்பனைக்கான தேவையும் அதிகரிக்கும். இதன் பலனாக அம்புஜா சிமென்ட், ஸ்ரீசிமென்ட் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் வளர்ச்சியடையக்கூடும்.

கிராமப்புறப் பொருளாதாரம்

நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உதவித்தொகைக்கான நிதி ஒதுக்கீட்டை வரும் நிதியாண்டில் மேலும் ரூ.20,000 கோடி அதிகரித்து, ரூ. 75,000 கோடியாக அறிவித்திருக்கிறார்கள். இதனால் கிராமப்புறங்களில் மக்கள் செலவழிப்பது அதிகரிக்கும்.

2024-ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் 18 கோடி வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் `ஜல்ஜீவன்’ திட்டத்துக்கு 2020-21 பட்ஜெட்டில் ரூ.11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்தை அதிகரிக்க ரூ.2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் நீர்ப்பாசனக் குழாய்கள் திட்டத்தின் காரணமாக பி.வி.சி குழாய்களுக்கான தேவை அதிகரிக்கும். இவற்றைத் தயாரிக்கக்கூடிய ஃபினோலக்ஸ், சக்தி பைப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பலன்பெறக்கூடும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டெக்னிக்கல் டெக்ஸ்டைல் துறை

இந்த பட்ஜெட்டில் டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்துறை குறித்து விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. இந்தத் துறையின் வளர்ச்சிக்காக, `தேசிய டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் மிஷன்’ அமைக்கப்படுகிறது. அதற்கு 2020-21 பட்ஜெட்டில் ரூ.1,148 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நான்காண்டு காலத்துக்கான திட்ட ஒதுக்கீடு.

பட்ஜெட் 2020 பாசிட்டிவ் பங்குகள்!

இந்தத் துறையில் சீட் பெல்ட், ஏர் பேக், விமான இருக்கை, தீ பாதுகாப்பு உடை, டயபர், நாப்கின், ஸ்டெரிலைசேஷன் பேக்கிங், பேண்டேஜ், மற்றும் மீன் வலை உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் துறை சார்ந்த பொருள்கள் பெரும்பாலும் இறக்குமதியைச் சார்ந்தே இருக்கின்றன. சுமார் 16 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் இந்தத் துறையில் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது இந்தப் பொருள்களுக்கான இறக்குமதி மீதான கூடுதல் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் இறக்குமதிப் பொருள்கள் குறைந்த விலையிலேயே கிடைக்க வாய்ப்பிருப்பதால், இதை நம்பியிருக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன.

மேலும், பட்ஜெட் உரையில் உள்நாட்டிலேயே இந்தப் பொருள்களைத் தயாரிப்பது குறித்தும் நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் துறையின் மூலம் அதிக அளவிலான வேலைவாய்ப்புக்கும் வாய்ப்புள்ளது. இந்தத் துறைசார்ந்த அர்விந்த், கார்வார் (Garware Technical Fibre Ltd) உள்ளிட்ட நிறுவனங்கள் பலன் அடையக்கூடும்.

ரயில்வே

ரயில்வேதுறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்புடன் 150 பயணியர் ரயில்களை இயக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ரயில்வே கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்கள் பி.இ.எம்.எல் (BEML), எஸ்கார்ட்ஸ் மற்றும் கே.இ.சி இன்டர்நேஷனல் (KEC International) ஆகியவை இதன் மூலம் பலனடையக்கூடும்.

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்துறையைப் பொறுத்தவரை, எலெக்ட்ரிக் வாகனங்கள் உட்பட பெரிதாக வேறு எந்த அறிவிப்பும் வெளியிடப் படவில்லை. சென்ற பட்ஜெட்டில் அத்தகைய அறிவிப்பு வெளியிடப் பட்டதால் பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. எனவே, அது குறித்த அறிவிப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

நிதிச் சேவை நிறுவனங்கள்

வங்கி, நிதி நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் துறைகளைப் பார்க்கும் போது தனிநபர் வருமான வரிக் கணக்கீடு முறையில் செய்யப்பட்ட அதிரடி மாற்றத்தால் இன்ஷூரன்ஸ் துறை நிறுவனங்கள் பாதிப்படையக்கூடும். வங்கி எஃப்.டி-க்கான காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது. இது வங்கி டெபாசிட்டுகள் அதிகரிக்க உதவும். டிவிடெண்ட் விநியோக வரி நிறுவனங்களுக்கு நீக்கப்பட்டிருப்பதால், அவற்றின் லாப வரம்பு அதிகரிக்கக்கூடும். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் பொதுத்துறை வங்கிகளுக்குப் பலனளிப்பவை.

பட்ஜெட்டைப் பொறுத்தவரை நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கிறது. எனவே, சந்தையின் செயல்பாடு நன்றாகவே இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மின் உற்பத்தி

எரிசக்தித்துறையைப் பொறுத்தவரை, 2023-ம் ஆண்டு வரை எரிசக்தி நிலையங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு வரியில் 15% சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது மின்சக்தித்துறையின் வளர்ச்சிக்கும், அது சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உதவும். எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான நிதி ஒதுக்கீடு 6% அதிகரித்து, ரூ.13,200 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் மீட்டர்கள் அனைத்தையும் ப்ரீபெய்டு மீட்டர்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும். இவற்றால் ப்ரீபெய்டு மீட்டர் தயாரிப்பு சார்ந்த நிறுவனம் வளர்ச்சியடையக்கூடும்.

பட்ஜெட் 2020
பட்ஜெட் 2020

நுகர்பொருள் சேவைத்துறை

நுகர்வோர் பொருள்கள் தயாரிப்பு துறையில் காலணிகளுக்கு 10%, மரச் சாமான்களுக்கு 5% சுங்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக `மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு ஊக்கம் தரப்படும். பாட்டா, காதிம் உள்ளிட்ட நிறுவனங்கள் பலனடையக் கூடும். 2025-ம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. இது பால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நல்ல செய்தி.

தகவல் தொழில்நுட்பத்துறை

தகவல் தொழில்நுட்பத்துறையில், பாரத்நெட் திட்டத்தின்கீழ் ஃபைபர்நெட் மூலம் கிராமப்புறங்களில் இணைய வசதிஉருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது இணையத் தொடர்பு நிறுவனங்களுக்குப் பலனளிக்கும். சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரை, `உதான்’ திட்டத்தின் மூலம் 2024-ம் ஆண்டுக்குள் 100 விமானநிலையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்த ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொல்லியல்துறை சார்பில் இந்தியா முழுக்க ஐந்து இடங்களில் ஆய்வு நடத்தவும், மியூசியம் அமைக்கவும் ரூ.3,150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றால் உள்நாட்டுச் சுற்றுலா உணவகங்கள் பெரிதும் பலனடையக்கூடும்” என்றவர் இறுதியாக, அடுத்த சில மாதங்களில் பங்குச் சந்தையின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதையும் விளக்கினார்.

பங்குச் சந்தை எப்படி இருக்கும்?

“பட்ஜெட்டைப் பொறுத்தவரை நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கிறது. எனவே, சந்தையின் செயல்பாடு நன்றாகவே இருக்கும். நிறுவன வரி, வங்கிகளுக்கான நிதி ஒதுக்கீடு உட்பட பங்குச் சந்தையைத் தூண்டக்கூடிய சலுகைகள் அனைத்தும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, `5,000 ரூபாய்க்கு அதிகமாக டிவிடெண்ட் தொகை பெறும்போது 10% டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்டுகளுக்கு மட்டுமே இனி டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்படும் என்பதால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு இது நல்ல செய்தி.

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, இந்த பட்ஜெட்டைவிட, அடுத்து வரவிருக்கும் டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவு முக்கியமானது. டெல்லி தேர்தல், குறுகியகால முதலீட்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே வர்த்தகர்கள், தேர்தல் முடியும்வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, இறக்கங்களின்போது முதலீடு செய்யலாம்’’ என்றார்.

முதலீட்டு வாய்ப்புகளைச் சொல்லிவிட்டோம். முதலீட்டாளர்கள் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்கலாமே!

கவனிக்க வேண்டிய பங்குகள்!

உள்கட்டமைப்புத்துறை: டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், அம்புஜா சிமென்ட், ஸ்ரீ சிமென்ட்.

கிராமப்புறப் பொருளாதாரம்: ஃபினோலக்ஸ், சக்தி பைப்ஸ்.

டெக்னிக்கல் டெக்ஸ்டைல்துறை: அர்விந்த், கார்வார் டெக்னிக்கல் ஃபைபர் லிமிடெட் (Garware Technical Fibre Ltd).

ரயில்வே: பி.இ.எம்.எல் (BEML), எஸ்கார்ட்ஸ் மற்றும் கே.இ.சி இன்டர்நேஷனல்.

நுகர்பொருள் சேவைத்துறை: பாட்டா, காதிம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism