Election bannerElection banner
Published:Updated:

`திருநங்கைகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் வேண்டும்' மக்களின் பட்ஜெட் எதிர்பார்ப்பு! பகுதி 4 #Budget2020

இன்றைய நிலையில், மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள், தங்களின் சொந்த முயற்சியால் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, ஆட்டோமொபைல் என மற்ற தொழில்துறையினர்கள் எதிர்பார்ப்பதுபோல, ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டிலிருந்து மக்களும் பல திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள். வரவிருக்கும் பட்ஜெட் 2020-லிருந்து என்னென்ன விஷயங்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, விகடனின் மாணவ நிருபர்கள் படை களமிறங்கியது. காஞ்சிபுரம், கோவை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்களின் தொகுப்பு இங்கே.

கார்ப்பரேட்களின் கடன் தள்ளுபடியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்! #Budget2020
2
கார்ப்பரேட் வரி

கார்ப்பரேட் வரிச்சலுகையைப் பொதுவானதாக்குங்கள்!

மணிமாறன், தலைவர், தமிழ்நாடு பாரத் பெட்ரோலியம் டீலர்ஸ் அசோஷியேசன்

"சென்ற ஆண்டு பட்ஜெட்டில் 250 கோடி வரை வருமானம் கொண்ட சிறிய அளவிலான தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் கார்ப்பரேட் வரி 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பானது அனைத்து விதமான பார்ட்னர்ஷிப், புரோப்ரைட்டர் நிறுவனங்களுக்கும் அளித்தால் நன்றாக இருக்கும்.

பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி-க்கு கீழ் கொண்டுவர வேண்டும். அப்படிச் செய்தால் பெட்ரோல் பொருள்களின் விலை குறையும். உபயோகப்படுத்தப்பட்ட (Second hand) அனைத்து வாகனங்களுக்கும் 5% என்ற ஒரே சீரான வரியை அமல்படுத்த வேண்டும்.  வாகனங்களை BS-VI மாற்றுவதின் மூலம் ஏற்படும் விலை உயர்வைக் குறைக்க தற்போது அமலில் உள்ள 28% ஜி.எஸ்.டி-யை 18% ஆகக் குறைக்க வேண்டும்."

3
ஏற்றுமதி

வேளாண் பொருள்களுக்கான ஏற்றுமதி விதிமுறைகளை எளிதாக்குங்கள்!

தொல்காப்பியன், நிர்வாக இயக்குநர், மேன்வின் ஃபார்மர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பெனி. 

"ஒவ்வொரு வருடத்துக்கான பட்ஜெட் அறிக்கை தயார் செய்வதற்கு முன்பும் மிகப் பெரிய தொழில் அதிபர்களின் தேவைகளை அறிய ஓர் ஆலோசனை கலந்தாய்வை மத்திய அரசு நடத்தும். ஆனால் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் நலன்களை அறிய எந்தவித முயற்சியையும் அரசு வெகுகாலமாக மேற்கொள்ளவில்லை. வாஜ்பாய் ஆட்சியில்தான் விவசாயிகளையும் தொழிலதிபர் என்னும் வகைக்குள் கொண்டுவர விவசாயிகள் இணைந்து `Farmers Producers company' என்ற ஒன்றை நிறுவ வழி செய்து அதற்காக அதிக அளவிலான மானியங்களையும் அளிக்கத் தொடங்கியது. இந்த வகை நிறுவனங்களில் இருந்து விவசாயிகளின் தேவைகள் மேலிடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டாலும் இதில் இன்னும் முன்னேற்றம் தேவை."

பட்ஜெட் 2020: மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்குமா? #Budget2020 #VikatanPhotoCards

பொதுவாகப் பருத்தி, வெங்காயம் போன்ற வேளாண் பொருள்களின் விளைச்சல் குறைவாக இருந்தால் அதன் இறக்குமதியில் எந்தவொரு பிரச்னையும் இருக்காது. இதே விளைச்சல் மிக அதிகமாக ஏற்படும்போது தகுந்த நடவடிக்கைகளை அரசு சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்வதில் இன்று வரை இடைத்தரகர்களே அதிக லாபம் கண்டு வருகின்றனர். இது மாற வேண்டும். பொருள்களை விளைச்சல் செய்யும் விவசாயிகள் அவர்களாகவே ஏற்றுமதி மேற்கொள்ள இந்தப் பட்ஜெட்டில் ஏதேனும் திட்டம் கொண்டுவர வேண்டும். அப்படி ஏற்றுமதி விதிமுறைகளை அரசு எளிதாக்கினால் விளைச்சல் அதிகமாக இருக்கும் காலத்தில் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக அமையும்.

4
நிர்மலா சீதாராமன்

திட்டங்களை அறிவிப்பதோடு நின்றுவிடக் கூடாது!

அகிலானந் மணிவேலன், கல்லூரி மாணவர்.

"வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் நான் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். ஒவ்வோர் ஆண்டும் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் அரசு அதற்காக மிகப்பெரிய அளவிலான நிதியையும் ஒதுக்குகிறது. ஆனால், அந்த மொத்த நிதியும் அத்திட்டத்துக்காகச் செலவிடப்படுகிறதா என்பது கேள்விக்குறி! மேலும், நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பட்ஜெட் அறிக்கையில் இவ்வாறு நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாமலே இருக்கின்றன. இதை அரசு நிச்சயம் கவனிக்க வேண்டும். இதோடு வாகனங்களுக்கு வரியைக் குறைத்தல் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும்."

5
மெட்ரோ போக்குவரத்து

மெட்ரோ போக்குவரத்துக்கு அதிக நிதி ஒதுக்குங்கள்!

துரைசாமி, பனியன் கம்பெனி உரிமையாளர்

"2020 பட்ஜெட்டில் தொழில் செய்வோர்க்கு முக்கியமாகக் குறுந்தொழில் முன்னேற்றத்துக்கு நிதி உதவி செய்யலாம். இறக்குமதியைவிட ஏற்றுமதியில் கூடிய கவனம் செலுத்தினால் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த முடியும். சென்னையில் தற்போது கொண்டுவந்திருக்கும் மெட்ரோ ரயில் போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், ரயில்தடங்கள் போதுமானதாக இல்லை. இந்த ஆண்டில் அதை அதிகப்படுத்துவதற்கான நிதியை மத்திய அரசாங்கம் ஒதுக்க வேண்டும். அரசுத் துறைகளை அரசே சரியான முறையில் நடத்தும்பட்சத்தில் தனியாராக மாற்றவேண்டிய நிலை இருக்காது. இதைக் கருத்தில் கொண்டும், மத்திய அரசு இந்த பட்ஜெட்டை வெளியிட வேண்டும்".

6
மூன்றாம் பாலினம்

மாற்றுப் பாலினத்தை ஆதரிக்கும் பட்ஜெட் வேண்டும்!

ஆ.சங்கிலிதுரை, மத்திய அரசு ஊழியர்

"2020 மத்திய பட்ஜெட்டில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அரசுடைமை துறைகள் தனியாருக்குக் கொடுக்காமல் இருப்பதே. விமானத் துறை, ONGC, BSNL போன்ற அரசுத் துறைகளை அரசே நடத்த சில திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். கடந்த ஆண்டு பல திட்டங்களைச் செயல்படுத்துவற்காக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. அமல்படுத்தக்கூடிய திட்டத்துக்காக நிதி ஒதுக்கிச் செயல்படுத்துவது நல்லது.  

பட்ஜெட் 2020: நிதி அமைச்சரைத் தேடிவந்த 19,000 பரிந்துரைகள்! #Budget2020 #VikatanPhotoCards

திருநங்கை சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக முக்கிய அறிவிப்புகளை இந்த 2020 பட்ஜெட்டில் நான் எதிர்பார்க்கிறேன். தற்போதைய நிலையில் பெரும்பாலான திருநங்கைகள் சொந்த முயற்சியால் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு அரசு உதவிகள் கிடைக்கும்போது, அவர்களின் திறமையை அவர்களும் நிரூபிக்க முடியும். கல்வித் திட்டங்கள், பெண்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு மேம்பாட்டுக்கு நிதிகள் ஒதுக்கினால் சிறப்பாக இருக்கும்."

7
மூலப்பொருள் இறக்குமதி

மூலப்பொருள் இறக்குமதியை அதிகரிக்கும் நடவடிக்கை வேண்டும்!

அகமது ஜான், தனியார் ஷிப்பிங் நிறுவன உரிமையாளர்

"இறக்குமதி ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை எனில், அதற்கான கால தாமதக் கட்டணமாக (late filing charge) ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள். இது நேரடியாக வாடிக்கையாளர்களைப் பாதிக்கிறது. எனவே, வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, இறக்குமதி தாமதக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.

`விவசாயிகள் உதவித் தொகையை அதிகரிக்கணும்' மக்களின் பட்ஜெட் எதிர்பார்ப்பு!  பகுதி -1 #Budget2020

எளியமுறை கட்டணம் ஏற்றுமதி, இறக்குமதி உற்பத்தியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதைத் தொடந்து செயல்படுத்த வேண்டும். மேலும், பரிவர்த்தனை செலவைக் (transaction cost) குறைப்பதற்கான நடவடிக்கை எடுத்தால், நன்றாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருள்களின் அளவை அதிகரிப்பதன் மூலம், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கலாம்."

8
மானியத் தொகை

மத்திய அரசு மானியத் தொகையைத் தொடர்ந்து வழங்க வேண்டும்!

வரதராஜன், கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் 

"விவசாய நகைக் கடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தினால், மத்திய அரசிடமிருந்து 3 சதவிகிதமும், மாநில அரசிடமிருந்து 4 சதவிகிதமும், மொத்தம் 7 சதவிகிதம் மானியம் கிடைக்கும். கடந்த இரண்டு மாதங்களாக, மத்திய அரசு தரும் மூன்று சதவிகித மானியம் வராததால், மாநில அரசே 7 சதவிகித மானியத்தைக் கொடுத்து வருகிறது. விவசாய நகைக் கடனுக்கான 3 சதவிகித மானியத் தொகையை சரிவரக் கிடைக்க, மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.

``ஜி.எஸ்.டி குறைவு...
கல்விக்கு அதிகம்!" - மக்களின் பட்ஜெட் எதிர்பார்ப்பு - பகுதி-2 #Budget2020

`பிரதம மந்திரி உழவர் பாதுகாப்புத் திட்டத்தை' அறிமுகப்படுத்தி, அனைத்து விவசாயிகளும் பயன்பெறக்கூடிய வகையில் அத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். பயிர் செய்யும் அனைத்து மகசூலுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயம் செய்ய இயந்திரங்கள் வாங்கும்போது, சிறு, குறு விவசாயிகள் மற்றும் இட ஒதுக்கீட்டுக்கு முன்னுரிமை அளிக்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கும் அறிவிப்பை இந்தப் பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறேன்!"

9
இட ஒதுக்கீடு

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துங்கள்!

கௌசல்யா, வழக்கறிஞர்

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வினால், குடும்பத்தை நிர்வகிப்பதில் பெண்களுக்கு மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிதியாண்டில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தவிர்க்க, முன்னுரிமை அளித்து அதிக நிதியை ஒதுக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுவுக்கான கடன் தொகையை அதிகரிப்பதுடன், திருப்பிச் செலுத்தும் கால வரம்பினை நீட்டிக்க வேண்டும். மத்திய அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்குகான இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

10
தீப்பெட்டித் தொழில்

சிறு தொழில் பட்டியலில் தீப்பெட்டித் தொழிலைச் சேர்க்க வேண்டும்!

சேதுரத்தினம், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர்.

"அட்டைக்குச்சி, புளுமேச் பேப்பர், மெழுகு, குளோரேட், பாஸ்பரஸ் உள்ளிட்ட 14 மூலப்பொருள்களைக் கொண்டு தீக்குச்சி, தீப்பெட்டி தயாரிக்கப்படுகிறது. இந்த மூலப்பொருள்களுக்கான, ஜி.எஸ்.டி 12 சதவிகிதமாக உள்ளது. ஆனால், தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி 18 சதவிகிதமாக உள்ளது. ஜி.எஸ்.டி-யின் அளவைக் குறைத்தால் மட்டுமே தீப்பெட்டித் தொழிலையும், இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், காப்பாற்ற முடியும்.

பட்ஜெட்டுக்கு முன் ஏன் அல்வா கிண்டப்படுகிறது..? #Budget2020

7 சதவிகிதமாக இருந்த வெளிநாட்டு ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை காங்கிரஸ் கட்சி 4 சதவிகிதமாகவும், பா.ஜ.க‌ ஆட்சிக்கு வந்ததும் 1.5 சதவிகிதமாகவும், குறைத்துவிட்டனர். வெளிநாட்டு ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையினை மீண்டும் 7 சதவிகிதமாக வழங்கிட வேண்டும். சிறுதொழில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தீப்பெட்டித் தொழிலை சிறு தொழில் பட்டியலில் சேர்க்க வேண்டும்."

  • முடிந்தது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு