Published:Updated:

பட்ஜெட் எதிரொலி... எந்தெந்தத் துறைக்கு சாதகம்..? - ஆரூடம் சொல்கிறார் ஷேருச்சாமி...

BUDGET 2021 - பட்ஜெட் 2021

பிரீமியம் ஸ்டோரி
ட்ஜெட் என்றதுமே ஷேருச்சாமியின் நினைவு எனக்கும் செல்வத்துக்கும் வந்தது. போன வருஷம் பட்ஜெட்டுக்குப் பார்த்தோம். அப்புறம் கொரோனா அது, இதுன்னு ஒரு வருஷம் போனதே தெரியவில்லை. இதுதான் சரியான தருணம் என்று நினைத்து சாமியின் பங்களாவுக்கு போன் செய்தால், ஷேருச்சாமியின் உதவியாளர், ‘‘சாமி, பண்ணை வீட்டுக்குப் போய்விட்டார். மொபைலில் பேசுங்கள்’’ என்று சொல்லிவிட்டார். கொஞ்சம் பயந்து கொண்டே மொபைலில் ஷேருச்சாமி யின் செல்போன் நம்பரை அழுத்த, ‘‘என்ன பசங்களா, பட்ஜெட் வந்ததும் என் ஞாபகம் வந்துடுச்சா’’ என்று டிரேட் மார்க் வெடிச் சிரிப்புடனேயே பேச ஆரம்பித்தார்.

‘‘சாமி, கொரோனா கட்டுப்பாடு உங்களைச் சந்திக்கவிடாம பண்ணிடுச்சு. மற்றபடி எப்பவும் உங்க ஞாபகம்தான்’’ என்று நான் சொல்ல, ‘‘அறிவு, ஐஸ் வைக்கிறதுல மன்னன்டா நீ. சரி, நாளைக்கு காலையில என் டிரைவர் பண்ணை வீட்டுக்கு வருவார். உங்களை பிக் அப் பண்ணி கூட்டிட்டு வரச் சொல்றேன்.ஓகேயா’’ன்னு சொல்லிவிட்டு போனை வைத்தார்.

செவ்வாய்க்கிழமை காலை அவர் சொன்ன நேரத்துக்கு சிவப்பு நிற இ-க்ளாஸ் ஆல் டெரைன் பென்ஸ் கார் வந்தது. நானும் செல்வமும் காரை சுற்றி வந்து வியந்து பார்த்து விட்டு ஏறினோம். அடுத்த முக்கால் மணி நேரத்தில், சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ இருந்த ஒரு பண்ணைக் குள் கார் நுழைந்தது.

காரை விட்டு இறங்கிப் பார்த்தால், மூலைக்கு மூலை செக்யூரிட்டி கேமரா, சோலார் மின்சாரம், யூனிபார்ம் போட்ட செக்யூரிட்டி, ஆட்டோமேட்டிக் சானிடைசர் டிஸ்பென்ஸர் என ஹைடெக்குடன் கிராமத்து வாசனையும் மாறாமல் இருந்தது சாமியின் பண்ணை வீடு. தூரத்தில் ஒரு மரத்தடியில் சாமி அமர்ந்திருந்ததைப் பார்த்தோம். பொடிநடையாக நடந்துபோய் அவருக்கு பெரிய வணக்கம் ஒன்றை வைத்தோம்.

ஐபேடில் ஃபைனான்ஷியல் டைம்ஸைப் படித்துக் கொண்டிருந் தவர், நம்மைப் பார்த்தவுடன், ‘‘பசங்களா, முதல்ல டிபன் சாப்பிட்டுட்டு வாங்க’’ என்று அனுப்பினார்.

பட்ஜெட் எதிரொலி... எந்தெந்தத் துறைக்கு சாதகம்..?  - ஆரூடம் சொல்கிறார் ஷேருச்சாமி...

டிபனை ஒரு கட்டு கட்டிவிட்டு, சாமியின் முன்பு உட்கார்ந்தோம். சொந்தக் கதைகளை எல்லாம் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்து விட்டு, சப்ஜெக்ட்டுக்கு வந்தோம். ‘‘இந்த பட்ஜெட் எப்படி இருக்கிறது சாமி’’ என்று பொதுவாக ஒரு கேள்வி கேட்டேன். நடந்துகொண்டே பேசலாமா என்று எழுந்த சாமி (சோஷியல் டிஸ்டன்ஸை மெயின்டெயின் செய்ய இப்படி ஒரு வழி!) பட்ஜெட் குறித்து அவருடைய கருத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘பட்ஜெட்டை பற்றிப் பேசறதுக்கு முன்னாடி இந்த பட்ஜெட் வந்திருக்க சூழ்நிலையை நீ நல்லா மனதில் உள்வாங்கிக்கொள்ளணும். கொரோனாவோட பாதிப்பால போன வருஷம் உலகமே அல்லோலகல்லோலப்பட்டது. அதனால நம்ம நாட்டையும் சேர்த்து உலக நாடுகள் அத்தனையோட பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்த பேக்ரவுண்டில போடப் பட்டிருக்கிற பட்ஜெட் இது. இதை நீ சாதாரண சூழ்நிலையில போடப்பட்டிருக்கிற பட்ஜெட் மாதிரி பார்க்கக் கூடாது.

இந்த பட்ஜெட்ல முக்கிய அம்சமாய் கேப்பிடல் எக்ஸ்பென்டிச்சர் (capex) இருக்குது. ரயில்வே, சாலைகள் மற்றும் போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு, பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் குடியிருப்பு போன்ற துறைகளுக்கு அதிகமா மூலதனச் செலவு செய்யணும்னு மனசுல வச்சு போட்டிருக்காங்க. இது நிச்சயமா வரவேற்கத்தக்க விஷயம். இதனால ஏற்படப் போற நன்மைகள் நாளைக்கே நமக்கு கண்ணுல தெரிஞ்சுடாது. ஆனா, சில வருஷம் கழிச்சுப் பார்த்தா, நாம இந்தியாவிலதான் இருக்கோமா, இல்லை வேற ஏதாவது ஒரு வெளிநாட்டுல இருக்கோமான்னு சந்தேகப்பட்ற அளவுக்கு நிலைமை மாறும்னு எதிர்பார்க்கலாம். இந்த மாற்றத்தை மனக்கண்ணால ஷேர் மார்க்கெட் முதலீட்டாளர்கள் பார்த்த தால்தான் சென்செக்ஸ் பட்ஜெட் அனைக்கே மிகப் பெரிய அளவுல ஏற்றம் கண்டிருக்கு. ஒரு முதலீட்டாளாரா இந்த விஷயத்தை நீங்க கட்டாயம் புரிஞ்சுக்கணும்’’ என நீண்ட விளக்கம் தந்தார் சாமி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாமியின் பாசிட்டிவ் பார்வையைப் புரிந்துகொண்ட செல்வம், ‘‘ஆனா சாமி, நிதிப் பற்றாக்குறை (Fiscal deficit) கொஞ்சம் அதிகமாயிருக்கே’’ என்று இழுத்தான். அவனைக் கொஞ்சம் ஏற, இறங்கப் பார்த்த சாமி, ‘‘செல்லு, இன்றைய சூழ்நிலையில் இதைத் தவிர்க்கவே முடியாது. செலவைப் பார்த்தா வளர்ச்சி வராது. வளர்ச்சி தேவைன்னா செலவு செஞ்சாகணும். அப்ப பற்றாக்குறை பத்தி கவலைப்பட்டா வேலைக்காகாது’’ என்று ஒரே போடாகப் போட்டார் சாமி.

‘‘ஆனா, கிராமப்புற வளர்ச்சிக் கான முன்னெடுப்புகள் குறைவா இருக்கிற மாதிரி இருக்கே’’ என்றேன் நான். ‘‘ஆரம்பத்திலேயே என்ன சொன்னேன்? போன வருஷ பட்ஜெட்டோட இந்த வருஷ பட்ஜெட்டை ஒப்பிட்டுக் குழப்பிக்காதீங்க. போன வருஷம் விவசாயத்துக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் முதல் மரியாதை கொடுத்தாங்க. அதுக்காக நிறைய ஒதுக்கீடு செஞ்சாங்க. ஆனா, இந்த வருஷம் அதையே செய்ய முடியாதுங்கிறதை நீ புரிஞ்சுக்கணும். மற்றபடி வரிகளில் பெரிய அளவிலான மாறுதல்கள் எதுவும் கொண்டு வரப்படல. அஃபர்டபிள் ஹவுஸிங் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு நன்மை செஞ்சிருக்காங்க. அதெல்லாம் நல்ல விஷயம்தானே?

மேலும், செக்யூரிட்டீஸ் மார்க்கெட் கோட் போன்ற புதிய நடைமுறைகள் குறித்த முயற்சிகள் செய்யப்போறதா சொல்லி யிருப்பதால, பிசினஸ் நடை முறைகளை சிம்ப்ளிஃபை பண்றதுக்கான முயற்சியும் தொடருது’’ என்று சாமி பேசிக் கொண்டே போனதைப் பார்த்து பதற்றமானான் செல். சாமி, எப்போது வேண்டுமானாலும் ‘‘சாப்பிட்டுட்டு கிளம்புறீங்களா தம்பிகளா?’’ என்று சொல்லி விடுவார். அதற்குள் பங்குச் சந்தை இனி எப்படி இருக்கும், எந்தெந்த செக்டார்கள் கவனிக்கத்தக்கவை என்பது பற்றி எல்லாம் கேட்டுவிட வேண்டும் என்று துடித்தான் செல். தூரத்தில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டிக்கு சாமி சிக்னல் காட்ட, கிளாசில் சில்லென்று இளநீர் வந்தது. அதைக் குடித்தபடியே நடக்க ஆரம்பித்தார்.

‘‘சாமி, செக்டார் வாரியா பட்ஜெட்டின் தாக்கம் எப்படி இருக்கும்’’ என்று செல் கேட்க, ‘‘தம்பி, நீ எங்க வர்றேன்னு புரியுது’’ என்று வெடிச் சிரிப்பு சிரித்தபடி பதில் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘விவசாயத்துக்கான இடு பொருள்கள் துறைக்கு இந்த பட்ஜெட் ஆதரவளிப்பதாகவே இருக்குது. விவசாயத்துக்கான கடன் (குறிப்பாக, கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன்வளத்துறை), பாசனம் மற்றும் விவசாய விளைபொருளை மார்க்கெட்டிங் செய்தல் (ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்டிகள் இ-நாம் - National Agricultural Market) வசதியுடன் இணைத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டிருக்கு.

ஆட்டோ மொபைல் துறைக்கும் இந்த பட்ஜெட் சாதகமாத்தான் இருக்கு. வாலண்டரி ஸ்க்ராப்பேஜ், சாலைகள் அமைத்தல், ஒரு சில உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு போன்றவை இந்த செக்டாருக்கு உதவியாக இருக்கும்.

பேங்கிங் மற்றும் ஃபைனான் ஷியல் துறைக்கும் சாதகம்தான். என்.பி.எஃப்.சி, வங்கிகள் மற்றும் ஹவுஸிங் ஃபைனான்ஸ் கம்பெனிகள் பலனடைய வாய்ப்பிருக்கு. ஹைவே இன்ஃப்ராஸ்ட்ரக்சர், அர்பன் இன்ப்ராஸ்ட்ரக்சர் போன்ற வற்றில் கவனம் செலுத்தப் படுவதால், அது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்து வங்கிகள் அதிக கடன் வழங்கு வதற்கான வாய்ப்பை உருவாக் கும்னு எதிர்பார்க்கலாம். வாலண்டரி வெகிக்கிள் ஸ்க்ராப்பேஜ் பாலிசி வரும்போது வாகனத்துக்கான கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வியாபாரம் விருத்தி யாகும். அஃபர்டபிள் ஹவுஸிங்குக்கான டாக்ஸ் இன்சென்டிவ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் துறையில் இயங்கும் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்.

இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறைக்கு அதிக கவனம் தொடர்ந்து செலுத்தப்படுவதாலும் அஃபர்டபிள் ஹவுஸிங் துறைக்கான சாதகமான அறிவிப்பினாலும் சிமென்ட் உற்பத்தித் துறைக்கு பட்ஜெட் சாதகமாத்தான் இருக்குது. அதிலும் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் இருக்கும் சிமென்ட் உற்பத்தி நிறுவனங் களுக்கு கூடுதல் சாதகம் என்று கூடச் சொல்லலாம்’’ என்று சாமி சொல்ல, அதைத் தன் மூளையில் அடிக்கோடிட்டு குறித்துக்கொண்டான் செல்.

‘‘எஃப்.எம்.சி.ஜி துறை எப்படி இருக்கும் சாமி’’ என்று கேட்டேன் நான். ‘‘ஏன், அந்த செக்டார் பங்குகளாப் பார்த்து வாங்கி வச்சிருக்கேயோ!’’ என்று நக்கலாகக் கேட்ட சாமி, இளநீரை முழுக்கக் குடித்துவிட்டு, செக்யூரிட்டியிடம் கிளாசைக் கொடுத்தார். நாமும் அப்படியே செய்தோம்.

‘‘எஃப்.எம்.சி.ஜி துறையைப் பொறுத்தவரை சாதகமும் இல்லை, பாதகமும் இல்லேன்னே சொல்லலாம். நீ என்னென்ன பங்குகள் வச்சிருக்கே’’ என்று சாமி கேட்க, நான் நம்பி முதலீடு செய்திருக்கும் இரண்டு பங்குகளைச் சொன்னேன். ‘‘கவலைப்படாதே, அந்தப் பங்குகள் நல்ல வருமானம் கொடுக்கும்’’ என்று சொல்லி அவன் வயிற்றில் பாலை வார்த்தார்.

‘‘நேரமாகுது, மடமடன்னு முடிப்போமா...’’ என்ற அவரே தொடர்ந்து பேசினார். ‘‘ஹெல்த்கேர் துறைக்கு பாசிட்டிவ்வாக இருக்குன்னு சொல்ல லாம் என்றாலும் அந்தத் துறையில் முதலீடு செய்திருக்கும் பங்கு முதலீட்டாளர்களுக்கு சொல்லிக் கொள்ளும்படி தற்போதைக்கு செய்தி ஏதும் இல்லை. ஏற்கெனவே சொன்னதைப்போல் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் துறைக்குத்தான் அதிக சாதகம். சாலைகளுக்கு கிட்டத்தட்ட 16% அளவிலான அதிக பட்ஜெட் ஒதுக்கீடு (Y-o-Y), என்.ஹெச்.ஏ.ஐ-க்கு கிட்டத்தட்ட 17% வளர்ச்சிக்கான திட்டம் (Y-o-Y) என எக்கச்சக்க சாதகம்தான். என்ன நீங்க ஏதும் இந்தத் துறை பங்குகளில முதலீடு செஞ்சிருக்கீங்களா’’ என்று சாமி கேட்க, நாம் உதட்டை பிதுக்கினோம்.

‘‘மொதல்ல ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் பங்களிப்பு பத்தி படிச்சு தெரிஞ்சுக்குங்க. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதுதான் அடிப்படை. நாம் அதுல ரொம்பவே வீக்கா இருக்கோம் என்கிறதை நீங்க புரிஞ்சுகிட்டீங்கன்னால போதும், உங்களுக்கு இந்தத் துறை பத்தி நல்லா புரிஞ்சிகிட்டாதான் நீங்க ஒரு சக்ஸஸ்ஃபுல்லான முதலீட்டாளரா இருக்க முடியும்’’ என்றவர், லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு பாசிட்டிவ் வாகவும், உலோகம் மற்றும் சுரங்கத் துறைக்கு நியூட்ரலாகவும், ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் துறைக்கு சற்றே பாசிட்டிவ்வாகவும் இந்த பட்ஜெட் இருக்கு’’ என்றார்.

துறை பத்தியே பேசிக்கொண்டிருந்த சாமியிடம் ஒரு கேள்வி கேட்டேன். ‘‘சாமி, மிட்கேப் பங்குகளுக்கு இந்த பட்ஜெட்ல சாதகமா, பாதகமா”’ என்றேன். ‘‘ரயில், ரோடு, மின்சாரம், பாசனம், அஃபர்டபிள் ஹவுஸிங்ன்னு பட்ஜெட்டில குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் நல்ல மிட்கேப் பங்குகளுக்கு சாதகமாத்தான் இருக்கு. அதே மாதிரி, மொத்த செலவில கிட்டத்தட்ட 18% அளவுக்கு கேப்பிட்டல் எக்ஸ்பென்டிச்சருக்கு செலவிடப் போறதால லார்ஜ்கேப் கேப்பிடல் குட்ஸ் நிறுவனங்களுக்கு நிறைய சாதகமா இருக்கும்’’ என்றவரிடம், ‘‘சூப்பர் சாமி, மிட்கேப், லார்ஜ்கேப் பங்குகள்ல எதையெதை வாங்கலாம்ன்னு சொல்லிட்டா இன்னும் சூப்பரா இருக்கும்’’னு நான் கேட்க, ‘‘அடேய், என்னை மாட்டிவிடப் பார்க்குறியா?’’ என்று கேட்டுவிட்டு, பெரிதாகச் சிரித்தார்.

‘‘சாமி, ஆக மொத்தத்துல இந்த வருஷமும் பங்கு முதலீட்டாளர் களுக்கு ரொம்ப சூப்பரா இருக்கு முன்னு சொல்றீங்களா சாமி?’’ என்று கேட்டான் செல்வம். ‘‘தம்பி, அவசரப்படாதே. பட்ஜெட்ல சொல்லியிருக்கிற திட்டங்களை எல்லாம் பார்த்தா சூப்பராத்தான் இருக்கும். ஆனால், இது ஒரு முக்கியமான நிகழ்வு மட்டும்தான். இது மாதிரி பல விஷயங்கள் உலகம் முழுக்க இருக்கு. அதையும் நாம கவனிச்சுக்கிட்டே இருக்கணும்.

உதாரணமா, கொரோனான்னு ஒரு நோய் வரும். அது நம்மல பல மாசத்துக்கு வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போட்டுரும்ன்னு போன வருஷம் நாம் நினைச்சோமா என்ன? நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் நல்ல நிறுவனங் களைத் தேர்ந்தெடுத்து வாங்கப் பழகிக்கணும்.

பட்ஜெட் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு எல்லா நிறுவனங்களிலும் முதலீடு செஞ்சுடக் கூடாது. நம்மளோட முதலீட்டுப் பயணத்துல சில சூப்பர் வருடங்களும் வரும்; சில சுமார் ரக வருடங்களும் வரும்; சில மோசமான வருடங்களும் வரவே செய்யும். நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்து வாங்கினா சராசரி யாக பெட்டர் வருமானத்தை நம்மளால ஈட்ட முடியும். இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காம மனசுல வச்சுக்கிடுங்க’’ என்று சொல்லிவிட்டு, வாட்சைப் பார்த்தார். ‘‘அடடே, சாப்பாட்டு நேரமாயிடுச்சு. சாப்பிட்டுட்டு நீங்க கிளம்புங்க. எனக்கு முக்கியமான வேலை இருக்கு” என்று நம்மை சாப்பிட அழைத்துச் சென்றார் ஷேருச்சாமி.

பிட்ஸ்

ர் இந்தியா நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.15,000 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பட்ஜெட் எதிரொலி... எந்தெந்தத் துறைக்கு சாதகம்..?  - ஆரூடம் சொல்கிறார் ஷேருச்சாமி...

யில், ரோடு, மின்சாரம், பாசனம், அஃபர்டபிள் ஹவுஸிங்ன்னு பட்ஜெட்டில சொல்லி இருக்கிற விஷயங்கள் நல்ல மிட்கேப் பங்குகளுக்கு சாதகமா இருக்கு. மூலதனச் செலவு அதிகம் செய்யப் போறதால லார்ஜ் கேப் பங்குகளுக்கும் நன்மை கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு