Published:Updated:

பட்ஜெட் 2022-23: யாருக்கெல்லாம் ஏற்றம், யாருக்கெல்லாம் ஏமாற்றம்? விரிவான அலசல்

பட்ஜெட் 2022-23
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் 2022-23

கவர் ஸ்டோரி

பட்ஜெட் 2022-23: யாருக்கெல்லாம் ஏற்றம், யாருக்கெல்லாம் ஏமாற்றம்? விரிவான அலசல்

கவர் ஸ்டோரி

Published:Updated:
பட்ஜெட் 2022-23
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் 2022-23

கொரோனா பெருந்தொற்று நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு தனிநபரின் பொருளாதார நிலையிலும் ஓயாத ருத்ர தாண்டவத்தை ஆடிவரும் நிலையில், 2022-23-ம் நிதி ஆண்டுக் கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொழில், வர்த்தகம் முடக்கம், வேலை இழப்பு, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம் இல்லாமை, வருமானம் பாதிப்பு, வறுமை, விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஏழை-பணக்கார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு இப்படி பல்வேறு சவால்களைத் தொடர்ந்து சந்தித்து வரும் சூழலில், பட்ஜெட் என்றதுமே எல்லோருக்குமே சலுகைகள் குறித்த எதிர் பார்ப்புகள் அதிகமாகவே இருந்தன. ஒருபக்கம் தொழில்துறையினர், மறுபக்கம் சாமானியர்கள் தங்களுக்கு இந்த பட்ஜெட்டில் புதிதாக என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். அதே சமயம், நிதிப் பற்றாக்குறை, வர்த்தகப் பற்றாக்குறை, கடன் சுமை அதிகரிப்பு போன்ற சவால்களும் அரசுக்கு இருந்தன.

இப்படி பலத்த எதிர்பார்ப்புகள், சவால்கள் மத்தியில்தான் மத்திய பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் இந்த பட்ஜெட்டை இளைஞர்கள், பெண்கள், ஏழை களுக்கான பட்ஜெட் என்றும், அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொருளாதாரப் போக்கை தீர்மானிக்கக்கூடிய பட்ஜெட் என்றும் சொன்னார்.

உண்மையில் இந்த பட்ஜெட் யாருக்கானது, யாருக்கெல்லாம் இந்த பட்ஜெட் ஏற்றம் தந்திருக்கிறது, யாருக்கெல்லாம் ஏமாற்றம் தந்திருக்கிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.

பட்ஜெட் 2022-23
பட்ஜெட் 2022-23

உள்கட்டமைப்பு, போக்குவரத்து

2022-23 பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு, போக்குவரத்துத் துறைகள் சார்ந்து அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக மொத்த ஜி.டி.பி-யில் 4.1% நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. 2,000 கி.மீ தொலைவுக்கு ரயில்வே திட்டங்களும், 20,000 கி.மீ தொலைவுக்கு நெடுஞ்சாலை திட்டங்களும் திட்டமிடப் பட்டுள்ளன. போக்குவரத்து, சாலைகள் போன்ற திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் துரித மாகும் என்பதுடன் புதிய வேலைவாய்ப்பு களையும் அந்தத் துறைகளில் உருவாக்கும். மேலும், போக்குவரத்து சிறப்பாக மாறும்போது சுற்றுலா துறைக்கும் அது சாதகமாக மாறும். கொரோனா காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்று. சுற்றுலாத் துறைக்கு இதனால் நல்ல பலன் கிடைக்கும். உள்கட்டமைப்பு சார்ந்த துறை நிறுவனங்கள், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சுற்றுலாத்துறை நிறுவனங்கள் இதனால் பலன் அடையும்.

மின்சார வாகனத்துறை...

கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காகவும், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டும் சமீப ஆண்டுகளில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால், அதில் உள்கட்டமைப்பு சார்ந்த சவால்கள் அதிகமாக இருந்ததால், பெரிய அளவில் மக்களிடம் சென்று சேரவில்லை. நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான முயற்சிகளும் வெற்றியடையவில்லை. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் மாற்று ஏற்பாடாக, சார்ஜிங் செய்வதற்குப் பதிலாக பேட்டரி மாற்றிக்கொள்ளும் மையங் களை நாடு முழுவதும் அமைக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார வாகனத் துறை வளர்ச்சியடைய வாய்ப் புள்ளது. பேட்டரி உற்பத்தி துறையும் முன்னேற்றத்தை எட்டும்.

மெட்டல் துறை

விவசாயத்துக்கான நீர்ப் பாசனத் திட்டங்கள், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டங்கள், நதிகள் இணைப்பு திட்டங்கள் போன்றவற்றுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மெட்டல் உற்பத்தி துறைகளுக்குச் சாதகமாக உள்ளன. இதனால் மெட்டல் சார்ந்த நிறுவனங்கள் ஸ்டீல் உற்பத்தியாளர்கள், குழாய் உற்பத்தியாளர்கள் நல்ல பலன் அடைவார்கள்.

கட்டுமானத்துறை

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், பரவலாக அனைவராலும் வாங்கும் திறன் கொண்ட வீடுகள் திட்டங்கள் போன்றவற்றுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் கட்டுமானத்துறை வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்கள் நிறுவனங்களும், கட்டுமான நிறுவனங்களும் பலனடையும்.

டெலிகாம், மொபைல் துறை

2022-ல் 5ஜி அலைக்கற்றைக் கான ஏலம் நடத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், மொபைல், இணையம் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டிலேயே இவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்க கேமரா லென்ஸ், சார்ஜர் உள்ளிட்ட மொபைல் உதிரி பாகங்களின் இறக்குமதி வரியில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் டெலிகாம் மற்றும் மொபைல் துறை நிறுவனங்களின் தொழில் வாய்ப்புகள் பெருகும். இதனால் கணிசமான வேலை வாய்ப்புகளும் உருவாகும்.

பாதுகாப்புத்துறை

பாதுகாப்புத் துறைக்கான மொத்த தளவாட உற்பத்திக்கு ஒதுக்கப்படும் மூலதன நிதியில் 60 சதவிகிதம் உள்நாட்டு நிறுவனங்களுக்காக ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி சாத்தியமாகும். பாதுகாப்பு துறை சார்ந்த கொள் முதல்களில் இறக்குமதியைக் குறைக்க இது உதவியாக இருக்கும்.

வேளாண்துறை

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நேரடியாக வழங்குவதற்காக ரூ.2.37 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரிசி, கோதுமைப் பயிர்களுக்கு மாற்றாக எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் துறையில் தொழில்நுட்பரீதியான வசதிகள் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ட்ரோன்கள் மூலம் விவசாய நிலங்களை அளப்பது மற்றும் விளைச்சல்களைக் கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகள் திட்டமிடப் பட்டுள்ளன. மேலும், நதிநீர் இணைப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட உள்ளன. இதனால் வேளாண் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கலாம். இந்தத் திட்டங்கள் மூலம் சுமார் 9 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் பலன் தரும் பட்சத்தில் விவசாயிகள் மட்டு மல்லாமல், வேளாண் துறை சார்ந்த நிறுவனங்களும் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும்.

யாருக்கெல்லாம் ஏமாற்றம்?

தனிநபர்கள், சம்பளதாரர்கள். கார்ப்பரேட் நிறுவனங் களுக்கான கூடுதல் வரி 12 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தனிநபர் வருமான வரி விகிதங் களில், உச்சவரம்புகளில் எந்தவித மாற்றமும் இந்த பட்ஜெட்டில் கொண்டுவரப்படவில்லை. விலைவாசி உயர்வு, வருமான குறைவு போன்றவற்றால் பெரும்பான்மை நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் நிதி சார்ந்து பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறார்கள். எனவே, வரிச் சலுகைகள், வருமான வரி உச்ச வரம்பு உயர்த்துதல் போன்றவை பட்ஜெட்டில் எதிர்பார்க்கப் பட்டன. ஆனால், முற்றிலும் ஏமாற்றமே மிஞ்சியது. ஜி.எஸ்.டி வரி விகிதங்களிலும் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்பட வில்லை. இதனால் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற வற்றின் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகளே சாமான்யர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

ஆட்டோமொபைல் துறை

கொரோனா காலத்தில் பெரும் நெருக்கடியைச் சந்தித்த துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்று. கொரோனா பரவலால் பொதுப் போக்கு வரத்து இல்லாத சமயத்தில் தனியார் வாகனங்களுக்கான தேவை அதிகரித்த நிலையிலும், சர்வதேச அளவில் செமி கண்டக்டர் பற்றாக்குறை ஏற்பட்டதால் தேவைக்கேற்ப வாகனங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை உண்டானது. இந்த நிலையில், இந்தத் துறையின் முன்னேற்றத்துக்காகவும், நெருக்கடிகளிலிருந்து மீளவும் பட்ஜெட்டில் சலுகைகள் இருக்கும் எனப் பல்வேறு எதிர் பார்ப்புகளுடன் காத்திருந்தன. ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவில் அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.

பொதுத்துறை வங்கிகள்

வழக்கமாக, பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு கணிசமான நிதித் தொகுப்பு அறிவிக்கப்படும். ஆனால், இந்த பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு எந்தவித நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட வில்லை. அதுமட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதால் பரிவர்த்தனைகள், பாரம்பர்ய வங்கி நடைமுறைகள் போன்றவற்றில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். டிஜிட்டல் கரன்சியின் பயன்பாடும் ஆதிக்கமும் அதிகரிக்கும் பட்சத்தில் வங்கிகளுக்கான தேவையும் அதன் முக்கியத்துவமும் குறைந்துவிடும் என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

ஆக மொத்தத்தில், இந்த பட்ஜெட்டில் தனிநபர்களுக்குப் பெரிய லாபம் எதுவும் இல்லாவிட்டாலும், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கக்கூடிய திட்டங்கள் பலவும் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேசமயம், பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் எத்தனை சிறப்பாக இருந்தாலும் சரி, அவை செயல்படுத்தும் விதத்தில்தான் அவற்றின் வெற்றி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் பலரும் விமர்சிப்பதுபோல் அலங்கார வார்த்தைகள் கொண்ட அறிவிப்புகளுடன் நின்றுவிடாமல் திட்டங்கள் அனைத்தையும் திறம்பட செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்.

வ.நாகப்பன்
வ.நாகப்பன்

“வரவேற்கத்தக்க இரண்டு அறிவிப்புகள்..!”

வ.நாகப்பன், பொருளாதார நிபுணர்

“பட்ஜெட்டில் வழக்கமான அறிவிப்புகள், திட்டங்களுக்கு மத்தியில் வரவேற்கத்தக்க இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, ‘கிரீன் பாண்ட்’ வெளியீடு; இரண்டாவது, நிதிசார் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை உள்நாட்டிலேயே உருவாக்கும் முயற்சிகள்.

கிரீன் பாண்ட் வெளியீடு முதலீட்டாளர்கள் பார்வையிலும், அதே சமயம், சுற்றுச்சூழல் சார்ந்தும் சிறப்பான முன்னெடுப்பாகும். இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அது சார்ந்த திட்டங்களுக்குத் தேவையான முதலீடுகளைத் திரட்ட இந்த பாண்டுகள் உதவியாக இருக்கும். கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வகையிலான சுற்றுச்சூழல் சார்ந்த மாற்று முயற்சிகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், இது சரியான முன்னெடுப்பாகப் பார்க்கலாம். முதலீட்டாளர்களுக்கும் இது கணிசமான பலனைத் தரும். அதேபோல், டிஜிட்டல் ஃபைனான்ஷியல் சேவைகள் வழங்கும் கட்டமைப்புகளை மேலும் விரிவுபடுத்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதனால் வெளிநாடுகளில் செய்யப்பட்டுவந்த முதலீடுகள் இனி உள்நாட்டில் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதனால் டிஜிட்டல் ஃபைனான்ஷியல் சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.

எல்லோரும் தனிநபர் வருமான வரிச் சலுகைகளை எதிர்பார்த்தார்கள். ஆனால், ஒவ்வொரு வருடமும் வருமான வரியைக் குறைத்துக்கொண்டே இருக்க முடியாது. ஏற்கெனவே ரூ.7.5 லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் முழுவதுமாக வரிச் சலுகை பெறுவதற்கான அம்சங்கள் நிறையவே உள்ளன. இதற்கு மேல் இன்னும் என்ன சலுகை தர முடியும்? வரிச் சலுகைகளை அனுபவிக்கும் சம்பளதாரர்களும், ஏழை எளிய மக்களும் எந்தப் பொருள், சேவைகள் நுகர்ந்தாலும் ஒரே விதிமான ஜி.எஸ்.டி வரிகளைத்தான் செலுத்த வேண்டியிருக்கிறது. உண்மையில் வருமான வரிச் சலுகைகளுக்குப் பதிலாக, ஜி.எஸ்.டி வரி விகிதங்களைக் குறைக்கலாம். அது மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அரசுக்கு உள்ள சவாலே நிதிப் பற்றாக்குறையை எப்படிச் சமாளிக்கப்போகிறது என்பதில்தான் இருக்கிறது. 4% என்கிற அளவில் இருக்க வேண்டிய இலக்கு தற்போது 6.9 சதவிகிதமாக உள்ளது. வரும் 2022-23-ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு 6.4 சதவிகிதமாக வைத்துள்ளது. ஒவ்வொரு முறையும் அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே ஒதுக்கீடுகளை அதிகரித்து அறிவித்துவிடுகிறது. ஆனால், அவற்றையெல்லாம் செயல்படுத்தத் தேவையான நிதி ஆதாரம் எங்கே இருக்கிறது என்பதுதான் கேள்வி?”

சி.கே.ரங்கநாதன்
சி.கே.ரங்கநாதன்

“நீண்டகால அடிப்படையிலான பட்ஜெட்!”

கவின்கேர் சி.கே.ரங்கநாதன், இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவர்

‘‘இந்த பட்ஜெட்டில் பொதுவான பேரியல் பொருளாதார அறிவிப்புகளே பெரும்பான்மையாக இடம்பெற்றுள்ளன. வரி சார்ந்த விஷயங்களில் பெரிய அளவில் மாறுதல்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு வருடமும் வரி விகிதங்களை மாற்றங்களை எதிர்பார்ப்பதும் சரியானதாக இருக்காது. நடப்பு ஆண்டிலேயே நிதிப் பற்றாக்குறை 6.9% என்கிற அளவில் இருக்கிறது. இதை மீண்டும் பழையபடி 4% என்கிற அளவுக்குக் கொண்டு வர வேண்டியது அவசியம். நிதிநிலையை சமநிலையில் வைத்திருக்கவே வரி விகிதங்களில் பெரிய மாறுதல்களை அரசு மேற்கொள்ளவில்லை. அடுத்தடுத்த வருடங்களில் வேண்டுமானால் வரி விகிதங்களில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

இந்த பட்ஜெட் நீண்டகால அடிப்படையிலான பார்வையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்புகளுக்கான முதலீடு பெரிய அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால், நீண்ட காலத்தில் பொருளாதாரத்துக்கு வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். வேகமாக வளர்ந்த நாடுகளில் அரசு முதலீடுகள் அதிகமாக இருந்ததே இதற்குக் காரணம். இந்தியாவும் அரசு செலவினங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா கால நெருக்கடிகளிலிருந்து மீண்டு வர ரூ.20 லட்சம் கோடி அளவிலான திட்டங்கள், ஊக்கத் தொகை திட்டங்கள், சலுகைகள், முதலீடுகள் அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதனுடைய பலனால்தான் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் சிறப்பாக மீண்டுவந்துள்ளது. 2019-20 இருந்ததைவிட தற்போது 9.2% என்ற அளவில் ஜி.டி.பி நன்றாக வளர்ச்சி கண்டுள்ளது. சுற்றுலா, விடுதிகள் போன்ற சில துறைகளில் இன்னும் அழுத்தங்கள் உள்ளன.

கொரோனா முழுமையாக முடிவுக்கு வந்த பிறகு, இந்தத் துறைகளும் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். ஜி.டி.பி வளர்ச்சியில் அனைத்துத் துறைகளும் பங்களிக்கும். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறை என்பதால், பட்ஜெட்டில் எம்.எஸ்.எம்.இ துறைக்கு சலுகைகள், ஆதரவுகள் இருக்குமென்று எதிர்பார்த்தோம். ஒரு சில அறிவிப்புகள் இருந்தாலும் இன்னும்கூட கூடுதலாக சலுகைகளை அறிவித்திருக்கலாம். எஃப்.எம்.சி.ஜி துறைக்கு கடந்த சில ஆண்டுகளாகவே எந்தவித சலுகைகளும் இல்லை. ஆனால், கொரோனா நெருக்கடியிலிருந்து எஃப்.எம்.சி.ஜி துறை நன்றாகவே மீண்டுள்ளது. நுகர்வு அதிகரித்துள்ளது. அதிக வால்யூமில் விற்பனைகள் நடக்கின்றன. வேலைவாய்ப்புகள் குறைந்திருந்தாலும் நுகர்வு அதிகரித்திருக்கிறது. நுகர்வு அதிகரித்திருப்பதால்தான் ஜி.எஸ்.டி வசூலும் அதிகரித்துள்ளது."

கிரிப்டோகரன்சிக்கு 30% வரி..!

கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைத் தடை செய்வதா, அனுமதிப்பதா என்ற சர்ச்சைக்கு இடையில், கிரிப்டோகரன்சிக்குத் தடை என்பது சாத்தியமில்லை என்பதை இந்த பட்ஜெட் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறது மத்திய அரசாங்கம். கிரிப்டோகரன்சியில் பணம் போடலாமா, வேண்டாமா எனக் குழப்பத்தில் இருந்தவர்கள் இனி தாராளமாக இறங்கலாம். கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கும் லாபத்துக்கு 30% வரி விதிக்கப்பட்டுள்ளது நெகட்டிவாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கிரிப்டோகரன்சி களில் ஏற்ற, இறக்கம் தாறுமாறாக உள்ள நிலையில் வருமானத்தின் மீது 30% வரி விதிப்பு என்பது வருகிற லாபத்தையும் குறைக்கவே செய்யும். மேலும், கிரிப்டோ பரிமாற்றத்துக்கு 1% டி.டி.எஸ் பிடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருப்பதும் பாதகமான விஷயம்தான்.

ஜி.கார்த்திகேயன்
ஜி.கார்த்திகேயன்

வருமான வரியில் என்ன மாற்றம்..?

- ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்

“இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு மற்றும் வரிச் சலுகையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, வருமான வரி அடிப்படை உச்ச வரம்பு மாற்றமன்றி ரூ.2.5 லட்சமாகத் தொடர்கிறது. மேலும், 80சி உள்ளிட்ட எந்த வரிச் சலுகை முதலீட்டிலும் மாற்றம் செய்யப்படவில்லை. திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வோருக்கு இரண்டு ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, கூடுதல் வருமானத்தைக் கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்குத் திருத்தப்பட்ட கணக்கைத் தாக்கல் செய்ய இரண்டு ஆண்டுக் கால அவசாகம் வழங்கப்படும். இது கோவிட் பாதிப்பு மற்றும் புதிய வருமான வரி இணையத்தின் இயக்க பிரச்னை போன்றவற்றால் அளிக்கப்பட்டிருக்கிறது.

நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு விதிக்கப்படும் கூடுதல் வரி (சர்சார்ஜ்) அதிகபட்சம் 37% என்பது 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.”

- சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism