Published:Updated:

பட்ஜெட் அறிவிப்பு... ஜவுளித் துறைக்கு என்ன நன்மை..? விருதுநகர், தூத்துக்குடிக்கு வாய்ப்பு

B U D G E T 2 0 2 1

பிரீமியம் ஸ்டோரி
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதும் அதில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக் கின்றன’ என்பதே தமிழகத்தில் பலரது கேள்வியாக இருந்தது.

மதுரை - கொல்லம் இண்டஸ்ட்ரியல் காரிடர், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட சில அறிவிப்புகள் அதில் கவனம் பெற்றன. இவை தவிர, இந்திய அளவில் ஏழு இடங்களில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. அதில் தமிழகத்துக்கு எத்தனை ஜவுளி பூங்காக்கள் கிடைக்கும், அது ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு எந்தளவுக்கு உதவும் என்பதே ஜவுளித் துறை சார்ந்தவர்கள் கேட்கும் கேள்வி. இது குறித்து தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (SIMA) செயலாளர் செல்வராஜிடம் பேசினோம்.

ஜவுளித் துறை
ஜவுளித் துறை

“ஜவுளித் துறையைப் பொறுத்த வரை, இரண்டு திட்டங்கள் தமிழகத்துக்குப் பயன்தரப் போகின்றன. முதலாவது, உற்பத்தியுடன்கூடிய சலுகை

(Production Linked Incentive Scheme- PLI) என்று ஒன்றை அறிவித்துள்ளனர். அதில் ஜவுளித் துறைக்கு 10,683 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கின்றனர்.

இதற்கான ஆய்வுக்காக 18 பேர் அடங்கிய நாடாளுமன்றக் குழு வேறெங்கும் செல்லவில்லை. கடந்த மாதம் நேராக கோயம்புத்தூருக்குத் தான் வந்தார்கள். கோவையில் இரண்டு நாள்கள் தங்கி, ‘இங்கு எந்தளவுக்கு மூலதனம் இருக்கிறது; இந்தச் சலுகையைப் பெற நாம் எந்தளவுத் தயாராக உள்ளோம்’ என்று ஒரு கலந்துரையாடல் நடத்திச் சென்றனர். அதன் பிறகுதான், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்த உற்பத்தியுடன்கூடிய சலுகை என்பது எல்லா ஜவுளிப் பொருள் களுக்கும் கிடையாது. செயற்கை இழையில் தயாரிக்கப்படக்கூடிய ஆயத்த ஆடைகளுக்கும் தொழில் நுட்பப் பொருள்களுக்கும்தான் இதைக் கொடுக்கவிருக்கின்றனர். 40 வகையான செயற்கை இழை ஆயத்த ஆடைகளும் 10 தொழில்நுட்பப் பொருள்களைப் பட்டியலிட்டுள்ளனர். அந்தப் பொருள் களின் விற்பனையில் அரசு நிர்ண யித்துள்ள இலக்கை அடைபவர் களுக்குத்தான் இந்தச் சலுகை கிடைக்கும்.

இதற்குக் காரணம், அரசு பட்டிய லிட்டுள்ள 50 பொருள்களின் வர்த்த கத்தின் மதிப்பு உலகளவில் 240 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளெல்லாம் முன்னேறக் காரணம், அவர்கள் இந்த 50 ஜவுளிப் பொருள்களைத் தயார் செய்கின்றனர். தேவை அதிகம் உள்ள அந்தப் பொருள்களை நாம் அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரூ.100 கோடியிலிருந்து ரூ.400 கோடி வரை விற்பனை செய்கிறவர்கள் இந்தத் திட்டத்தில் பயனடைய தகுதி பெறுவார்கள். ஐந்து வருடங்களுக்கு 4 சதவிகிதத்திலிருந்து 11% வரை ஊக்கத் தொகையை வழங்கவிருக்கின்றனர்.

இந்த ஊக்கத்தொகையைப் பெற வேண்டுமெனில் தங்களது விற்பனை யிலிருந்து முதல் வருடம் 50 சதவிகிதமும் இரண்டாவது வருடத்திலிருந்து 25 சதவிகிதமும் கூடுதலாக விற்பனை செய்திருக்க வேண்டும். இந்தக் கூடுதல் விற்பனை என்பது அரசு பட்டியலிட்டுள்ள பொருள்களில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். வேறு பொருள்களில் இந்த விற்பனை இலக்கை அடைந்தால் பயனடைய முடியாது.

உதாரணத்துக்கு, 400 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் செய்கிற ஒரு நிறுவனம் அதற்கடுத்த வருடம் 50% தங்களது விற்பனையை அதிகரித்து, 600 கோடி ரூபாயாகத் தங்களது டேர்ன் ஓவரை உயர்த்தி, அந்த விற்பனை உயர்வு என்பது அரசுப் பட்டியலில் உள்ள பொருள்களில் இருக்கும்பட்சத்தில், அந்த நிறுவனத்துக்கு 11% ஊக்கத்தொகை கிடைக்கும். இரண்டாவது வருடத்திலிருந்து 25% அதிகரித் தால், 11% தொடர்ந்து கிடைக்கும். அதன்படி பார்த்தால், இந்தத் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டால் ஒரு நிறுவனத்துக்கு 66 கோடி ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் எனக் கணக்கிட்டால் ரூ.100 கோடி விற்பனை செய்கிறவர்கள் கூடுதலாக ரூ.50 கோடி செய்ய வேண்டும். அப்படியானால் 4% ஊக்கத்தொகை கிடைக்கும்.

ஜவுளித் தொழிலில் சாதாரண மாக லாபமே 3 - 5% வருகிறது. இப்படியான சூழலில் அரசாங்கமே 4 - 11% ஊக்கத் தொகை வழங்குவது என்பது நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடிய விஷயம்.

செல்வராஜ்
செல்வராஜ்

சீனாவைப்போல நாம் வளர வேண்டுமெனில், ‘ஸ்கேல் ஆஃப் ஆபரேஷன்’ மிகவும் முக்கியம். ஏனெனில், வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து கடை போட்டிருக் கிறவர்கள் எனக்கு 20 லட்சம் ஃபீஸ் வேண்டும்; 50 லட்சம் ஃபீஸ் வேண்டும் எனக் கேட்கின்றனர். அப்படிப் பெரியளவில் உற்பத்தி செய்யும் வசதி ஒருசில நிறுவனங்களைத் தவிர, மற்ற நிறுவனங்களிடம் இல்லை. எல்லா நிறுவனங்களும் பெரிய நிறுவனங்களாக வளர வேண்டும் என்பதுதான் அரசினுடைய நோக்கம்.

வருகிற ஏப்ரல் 1-ம் தேதி யிலிருந்து நடைமுறைக்கு வரும் இந்தத் திட்டம் ஐந்து ஆண்டு களுக்கு நடைமுறையில் இருக்கும். புதிய முதலீட்டாளர்களுக்கு

2027 வரைக்கும் இந்தத் திட்டம் இருக்கிறது. ஆனால், புதிதாக மூலதனம் போடுகிறவர்கள் 400 கோடி ரூபாய் மூலதனம் போட வேண்டும். இதனால் தமிழ்நாடு 40-லிருந்து 50 சதவிகித மூலதனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்புள்ளது.

அடுத்தது ஜவுளிப் பூங்கா... இதை ‘மகா ஜவுளிப் பூங்கா’ என்று சொல்லலாம். தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ள ஏழு ஜவுளிப் பூங்காக்களிலும் ‘ப்ளக் & பிளே’ சிஸ்டத்தைக் கொண்டுவரப் போகின்றனர். அதாவது, நீங்கள் மெஷினை மட்டும் வாங்கிக் கொண்டு ஓட்டிக் கொள்ளலாம். இதுபோன்ற நடைமுறைகள் எல்லாம் வெளிநாடு களில்தான் இருக் கின்றன. அப்படியான வசதிகளை இங்கே அறிமுகப்படுத்தும் போது நிறைய பேர் இதற்குள் வருவார்கள்.

ஏழு ஜவுளிப் பூங்காக்களில் மூன்று ஜவுளிப் பூங்காக்கள் தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது. ஒரு ஜவுளிப் பூங்காவுக்கு குறைந்தபட்சம் 1000 ஏக்கர் இருக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தளவில் தூத்துக்குடி, விருதுநகர், தர்மபுரி இந்த மூன்று மாவட்டங்களில் ஜவுளிப் பூங்காவைக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்திலேயே ஆயிரம் ஏக்கர் இருக்கிறது. அங்கு ஒரு ஜவுளி பூங்கா அமைந்தால் உற்பத்தி செய்யப்படுகிற பொருள்களை உடனே ஏற்றுமதி செய்து விடலாம்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில் பெரிய கப்பலில்தான் ஏற்றுமதி செய்ய வேண்டும். அதை ‘மதர் வெசல்’ எனச் சொல்வார்கள். அந்தக் கப்பல் வருவதற்கு ஆழமான துறைமுகம் வேண்டும். அந்த வசதி தற்போதுவரை நம்மிடம் இல்லை. தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கோ, மலேசியாவுக்கோ கொண்டுசென்று அங்கிருந்து பெரிய கப்பலுக்கு ஏற்றுகிறோம். தூத்துக்குடி துறைமுகத்தை பெரிய கப்பல்கள் வந்து போகிற மாதிரி ஆழ்கடல் துறைமுகமாக மாற்றுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டது. அந்த வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஜவுளிப் பூங்கா வருவதற்குள் அந்த வேலைகள் முடிந்து விடும். அது நடந்துவிட்டால் எல்லாம் எளிதாகிவிடும்.

விருதுநகர், தர்மபுரி மாவட்டங்களில் ஜவுளிப் பூங்காக்களை அமைத்து, டெக்ஸ்டைல்ஸ் மெஷினரிஸ் தயாரிக்கிற நிறுவனங்களை அங்கு கொண்டு வரலாம் என்றும் அரசு உத்தேசிக்கிறது. சீனாவில் எல்லா இயந்திரங் களும் அவர்கள் நாட்டுக்குள்ளேயே தயாரிக்கின்றனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது 60 - 70% விலையில் தயாரிக்கிறார்கள். ஆனால், தையல் மெஷின், நாடா இல்லாத தறி உள்ளிட்ட சில மெஷின்கள் இந்தியாவில் தயாராவதில்லை. தொழில்முனை வோர்கள் அதில் கவனம் செலுத்தினால் அரசு நிறைய சலுகைகள் தரத் தயாராக இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறை யினர் இந்த வாய்ப்புகளை எல்லாம் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ள லாம்’’ என்றார் செல்வராஜ்.

இன்றைய இளம் தலைமுறை தொழில் முனைவோர்கள் இந்தத் தொழில் வாய்ப்புகளை எல்லாம் நிச்சயம் கவனிக்கலாமே..!

பிட்ஸ்

ஞ்சள் செடிகளில் பூச்சி அரிப்பு காரணமாக அதன் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு குவிண்டால் மஞ்சள் 8,000 ரூபாயை எட்டியுள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு