Published:Updated:

மத்திய பட்ஜெட்... கைகொடுக்கும் ‘ஆறு முகங்கள்!’ - பின்னணி விவரங்கள்

BUDGET

பிரீமியம் ஸ்டோரி

சித்தார்த்தன் சுந்தரம்

இந்தியப் பொருளாதாரம் உள்பட உலகப் பொருளா தாரத்தை உலுக்கிப் பார்த்த கோவிட்-19 என்ற பெருந்தொற்றின் பரவல் குறைந்து, உருமாறிய வைரஸ் தலையெடுக்க ஆரம்பித்திருக்கும் இந்தக் கால கட்டத்தில் வரவிருக்கிறது மத்திய அரசின் 2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்.

ஒரு பக்கம் பங்குச் சந்தைக் குறியீடு 48000-ஐ தொட்டாலும் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி) 23 சதவிகித அளவுக்கு வீழ்ச்சி அடைந்து மெதுவாகத் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த மாதிரியான சூழலில் வரக்கூடிய பட்ஜெட் எப்படியிருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினருக்கும் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதில் ஆச்சர்யமில்லை.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

இந்த ஆண்டு பட்ஜெட், இந்திய நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கவிருக்கும் மூன்றாவது பட்ஜெட் ஆகும். கோவிட்-19 உருவாக்கிய அதிர்ச்சி யிலிருந்து நமது பொருளாதாரம் மீண்டெழுவதற்கு அவர் பலதரப் பினரையும் சந்தித்து யோசனைகளைக் கேட்டு வருகிறார். யோசனைகளைப் பரிசீலிப்பதோடு, நாட்டின் பொருளாதார நிலையையும் அலசி ஆராய்ந்து நிதிநிலை அறிக்கைக்கு முறையான வடிவம் கொடுக்க அவருக்கு உதவ `ஆறு நபர்கள் ஆலோசகர்களாக இருந்து செயல் பட்டு வருகிறார்கள். இந்த ஆறு முகங்கள் யார் யார் என்பதை இப்போது பார்ப்போம்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

நிதித்துறை செயலாளர் ஏ.பி.பாண்டே

கோவிட்-19 பெருந்தொற்றால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தியப் பொருளாதாரம் போராடிவரும் வேளையில் நிதித்துறை செயலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டவர் அஜய் பூஷண் பாண்டே. இந்தக் கால கட்டத்தில் நிதி அமைச்சர் அறிவித்த மூன்று பொருளாதார நிதித் தொகுப்புத் (stimulus package) திட்டங்களை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தவர். நிதித் துறையில் வருவாய் செயலாளராகச் சேர்வதற்கு முன்பாக மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசின் பல்வேறு துறைகளில், பலவிதமான பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2016-ம் ஆண்டு மே மாதம் ‘UIDAI’-யின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தார். குடிமைப் பணிப் பிரிவில் 1984-ம் ஆண்டைச் சேர்ந்த இவர் வருமான வரி செலுத்துவோரின் சிரமங்களை மனதில் கொண்டு இணக்கச் (compliance) சுமையை எளிதாக்கும் விதமாக வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்தவர். அதோடு ஜி.எஸ்.டி செலுத்துவதில் நடைபெற்று வருகிற ஏமாற்று வேலைகளைத் தடுக்கும் விதமாக பதிவு செய்வதிலும், இ-இன்வாய்ஸிங் சம்பந்தப்பட்ட நடைமுறையிலும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தவர். இந்த ஆண்டு பட்ஜெட் இவர் ஓய்வு பெறுவதற்கு முன்பான கடைசி பட்ஜெட்டாக இருக்கும்.

ஏ.பி.பாண்டே, தருண் பஜாஜ், டி.வி.சோமநாதன்
ஏ.பி.பாண்டே, தருண் பஜாஜ், டி.வி.சோமநாதன்

பொருளாதாரத் துறை செயலாளார் தருண் பஜாஜ்

நிதி அமைச்சகத்தில் பழுத்த அனுபவம் கொண்டவர். இந்தியப் பொருளாதாரம் பெருந்தொற்றால் சிரமத்தின் உச்சத்தில் இருந்தபோது கடந்த மே மாதம் இவர் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பாக பிரதமரின் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் குடிமைப் பணியில் 1988-ம் ஆண்டு ஹரியானா பிரிவைச் சேர்ந்தவர். நிதி அமைச்சகத்தில் இது இவருக்குக் கொடுக்கப்பட்ட மூன்றாவது பொறுப்பாகும்.

மத்திய ரிசர்வ் வங்கி வடிவமைத்த பல கொள்கை முடிவுகளை (கடன் மறுசீரமைப்பு, பணவியல் கொள்கை) ஏற்றுக்கொண்டு அதோடு ஒத்துப் போனவர். இவருக்கு கீழ் இயங்கி வரும் பொருளாதாரத்துறை பல முக்கியமான கொள்கை முடிவுகள் சம்பந்தமாகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது இதில் குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.

செலவுப்பிரிவு துறைச் செயலாளார் டி.வி.சோமநாதன்

கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஊரடங்கு அறிவித்தபோது வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க எடுக்கப் பட்ட நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகித்தவர். இவர் குடிமைப் பணியில் 1987-ம் ஆண்டு தமிழ்நாட்டு பிரிவைச் சேர்ந்தவர்.

நிதிநிலையில் நெருக்கடி இருந்தாலும் கோவிட்-19 தொற்றுடன் நாடே போராடி வரும்போது மருத்துவ வசதிக் காகச் செலவிடுவதிலும், தொழிலாளர்களின் வேலை களைப் பாதுகாக்கும் பொருட்டு உள்கட்டமைப்பு சார்ந்தவற்றில் முதலீடு செய்வதிலும் அக்கறை செலுத்தினார்.

உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசு அறிவித்த துறை சார்ந்த பொருளாதார நிதி தொகுப்புத் திட்டங்களுக்குப் பின்னால் செயல்பட்ட சிலரில் முக்கியமான பங்கு வகித்தவர்.

பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்த நிதிநிலை அறிக்கையில் இவரின் பங்கு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம் கோவிட்-19 பெருந்தொற்று சம்பந்தமான செலவுகள் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். குறிப்பாக, தடுப்பூசி போடுவதற்கு ஆகும் செலவு. இவர் தமிழக அரசின் முதன்மைச் செயலாள ராகவும் பணியாற்றியவர்.

தூஹின் காந்தா பாண்டே ,  தெபாசிஷ் பாண்டா, கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்
தூஹின் காந்தா பாண்டே , தெபாசிஷ் பாண்டா, கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்

முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை (Department of Investment and Public Asset Management – DIPAM) செயலாளர் தூஹின் காந்தா பாண்டே

குடிமைப் பணியில் ஒடிசா பிரிவைச் சேர்ந்த இவர் பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க முனைப்போடு செயல் படும் மத்திய அரசின் கொள்கை யாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். இது சம்பந்தமான புதிய கொள்கை தனியார்மயமாக் கலுக்கு புதிய உத்திகளுடனான வழித்தடத்தை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தவர். இவருடைய இன்னொரு சவால் இழுபறியாக இருந்துவரும் ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவ னத்தின் விற்பனையை முடிவுக்குக் கொண்டு வருவதாகும்.

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதன் மூலம் நிர்ணயித்த இலக்கான ரூ.2.1 லட்சம் கோடியை இந்த ஆண்டு தவற விட்டாலும் அடுத்த நிதியாண்டில் குறிப் பிடத்தக்க அளவுக்கு இதன் மூலம் வருமானம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டி ருக்கிறது மத்திய அரசு. அதோடு எல்.ஐ.சி நிறுவனத்தை பட்டிய லிடுவதும் இதில் அடங்கும்.

இவற்றுக்கான முன்னெடுப்பு களைச் செய்து வரும் இவர் கேபினட் செயலகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றியவர். ஒடிசா மாநில அரசுத் துறை களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர்.

நிதிச் சேவை செயலாளர் தெபாசிஷ் பாண்டா

யெஸ் பேங்க், லக்ஷ்மி விலாஸ் பேங்க் சம்பந்தமான பிரச்னைகள் மீதான தீர்வையெட்டுவதில் மிகவும் முக்கியப் பங்கு வகித்தவர் பாண்டா. நிதிச் சேவை செயலாளராக இவர் மேற்பார் வையிடும் முதல் பட்ஜெட் இது. உ.பி மாநிலப் பிரிவைச் சேர்ந்த இந்த அதிகாரி கடன் வளர்ச்சியை அதிகரிப்பது பற்றியும், கோவிட்-19 பிரச்னையால் நலிவுற்றிருக்கும் சிறு தொழில்களுக்குக் கடன் கொடுத்து உயிர்பிப்பதும் தலை யாய வேலையாக இருக்கும். இவருக்கு இருக்கும் இன்னொரு முக்கியமான வேலை வாராக் கடன் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு மீதான தடை நீங்கியபின் பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் நிலைமையைச் சமாளிப்பதும், அதற்குத் தேவையான அரசின் ஆதரவை எந்த அளவுக்குக் கொடுப்பது என்பது மாகும்.

இந்தப் பிரச்னைகளோடு எல்.ஐ.சி நிறுவனப் பங்கை பட்டியி லிடுவது, ஐ.டி.பி.ஐ வங்கியின் பங்கு விற்பனை, வங்கிகளைத் தனியார் மயமாக்குவதற்கான அரசின் புதிய கொள்கை வெளியான வுடன் பொதுத்துறை வங்கி களுக்கிடைய இணைப்பு, தனியார்மயமாக்கல் ஆகியவற்றை முன்னெடுத்துச் செய்வதும் இவருக்கான மற்ற முக்கியப் பொறுப்புகளாகும்.

தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்

இவருடைய முக்கியமான பங்கு, நிதிநிலை அறிக்கை மக்களவையில் சமர்ப்பிப்பதற்கு முன்பாக, பொருளாதார ஆய்வு அறிக்கையைத் தயாரித்து வழங்குவதாகும். இதில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஆலோசனைகள், வழி காட்டுதல்களின் அடிப்படையிலேயே பெரும்பாலும் நிதிநிலை அறிக்கையும், அரசின் கொள்கை வடிவமைப்புகளும் இருக்கும்.

செபி, ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் நிபுணர்கள் குழுவிலும், பொருளாதாரம் மற்றும் கார்ப்பரேட் சார்ந்த கொள்கை சீரமைப்பு சம்பந்தமான குழுக்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இதுவரை இரண்டு பொருளாதார ஆய்வறிக்கைகளை வழங்கி யிருக்கிறார்.

கடந்த வருடம் இவர் வழங்கிய பொருளாதார ஆய்வறிக்கையில் தேவைகளை ஊக்குவிக்க உதவும் பொருட்டு பரிந்துரைத்த `எதிர் சுழற்சி நிதிக் கொள்கையை (counter cyclical fiscal policy)’ மிகவும் வலுவாக ஆதரித்துப் பேசினார்.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் பின்புலமாக இருந்து செயல் படும் அனுபவமிக்க இந்த `ஆறுமுகங்கள்’ நிதி அமைச் சருக்குக் கூறும் ஆலோசனைகள் சாமான்யர்களுக்கு சாதகமாக இருக்குமா என்று பார்ப்போம்.

மத்திய பட்ஜெட்... கைகொடுக்கும் ‘ஆறு முகங்கள்!’ - பின்னணி விவரங்கள்

கோவிட்-19 தொற்றுடன் நாடு போராடி வரும்போது மருத்துவ வசதிக்காகச் செலவு செய்தல், தொழிலாளர் களின் வேலைகளைப் பாதுகாத்தல் போன்றவற்றில் அக்கறை செலுத்தியவர் டி.வி. சோமநாதன்.

மத்திய பட்ஜெட்... கைகொடுக்கும் ‘ஆறு முகங்கள்!’ - பின்னணி விவரங்கள்

லைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன் செபி, ரிசர்வ் வங்கி நிபுணர்கள் குழுவிலும், பொருளாதாரம் மற்றும் கார்ப்பரேட் சார்ந்த கொள்கை சீரமைப்பு சம்பந்தமான குழுக்களிலும் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு