Published:Updated:

விலை குறையும் அணுஉலை எரிபொருள்... என்ன எதிர்பார்க்கலாம்? #Budget2019

ஐஷ்வர்யா

மாநிலங்களுக்குத் தரப்படும் மின்சாரத்தில் விலைகுறைவு ஏற்பட்டாலே ஒழிய, இது மக்களுக்குப் பெரும் பயன்தரக்கூடிய வகையில் அமையாது.

பட்ஜெட் 2019: அணு உலை எரிபொருள்
பட்ஜெட் 2019: அணு உலை எரிபொருள்

பட்ஜெட் 2019 அறிவிப்பில், 'அணுசக்தி உற்பத்திக்கான எரிபொருள்கள் மற்றும் அணுஉலைகள் கட்டுமானத்திற்கான உதிரிகளின் மீதான சுங்கவரி தள்ளுபடி செய்யப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை யுரேனியத்துக்கான 2.5 சதவிகித சுங்கவரியும் புளுட்டோனியத்துக்கான 7.5 சுங்கவரியும் தள்ளுபடி செய்யப்படும். மஹிபன்ஸ்வராவில் அமைக்கப்படும் நான்கு அணுஉலைகள் கைகாவில் கட்டுமானம் செய்யப்படும் 5 மற்றும் 6-வது அணு உலைகள், கோரக்பூரின் 3 மற்றும் 4-வது அணு உலைகள், சுட்காவின் முதல் இரண்டு அணு உலைகள் என மொத்தம் 10 அணு உலைகள் கட்டுமானத்திற்கான உதிரிப்பாகங்கள் மீதான சுங்கவரியும் தள்ளுபடி செய்யப்படும்.

மொத்தம் 10 அணு உலைகள் கட்டுமானத்திற்கான உதிரிப்பாகங்கள் மீதான சுங்கவரியும் தள்ளுபடி செய்யப்படும்.
நிர்மலா சீதாராமன் (2019 மத்திய பட்ஜெட்)
இந்திய அணுசக்தி நிறுவனம்
இந்திய அணுசக்தி நிறுவனம்

அணுசக்தித் துறைக்கான நிதிஒதுக்கீட்டின் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் குறைக்கப்பட்டிருந்தாலும் இந்தச் சுங்கவரித் தள்ளுபடி அறிவிப்பு அடுத்துவரும் ஆண்டுகளில் இந்திய அணுசக்தி விரிவாக்கத்தில் எந்த வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடுகளுமே அணுசக்தி உற்பத்திக்கான எரிபொருள்களை வாங்குவதில்லை
`பூவுலகு’ சுந்தர்ராஜன்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் கூறுகையில், ``அணுக்கலன்களுக்கான எரிபொருள்களை வாங்க முழுக்க முழுக்க உரிமம் உள்ள நிறுவனம் மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனம் மட்டுமே. எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருப்பதால் மாநிலங்களுக்குத் தரப்படும் மின்சாரத்தில் விலைகுறைவு ஏற்பட்டாலே ஒழிய இது மக்களுக்குப் பெரும் பயன்தரக்கூடிய வகையில் அமையாது. மற்றபடி, அணுசக்தி நிறுவனத்துக்கு மட்டுமே இது பயன் தருவதாக இருக்கும். மொத்தத் திறனே 6,000 மெகாவாட்தான். அதில் இரண்டு அணுமின் நிலையங்கள் இயங்கவே இல்லை.

பூவுலகின் சுந்தர்ராஜன்
பூவுலகின் சுந்தர்ராஜன்

அதனால் எரிபொருள் விலை குறைப்பதால் உற்பத்தியில் பெரிய தாக்கம் இருக்காது. சர்வதேச நாடுகளான அமெரிக்க, பிரான்ஸ் உள்ளிட்டவை தங்களுடைய அணுசக்தி தேவையை எப்போதோ குறைத்துக் கொண்டுவிட்டன. 2040-க்குள் 40 சதவிகிதத்துக்குக் குறைத்துவிடுவோம் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. தற்போது சீனாவும் இந்தியாவும் மட்டுமே புதிய அணுசக்தி உற்பத்திக் கலன்களை நிர்மானித்து வருகின்றன. ஆக, இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடுகளுமே அணுசக்தி உற்பத்திக்கான எரிபொருள்களை வாங்குவதில்லை. அதனால்தான் அவை குறைந்த விலையிலும் கிடைக்கின்றன” என்றார்.