Published:Updated:

தமிழ்நாடு பட்ஜெட் 2023: மானியம் அதிகரித்ததை வரவேற்கிறோம்; ஆனால்... - மாற்றுத்திறனாளிகள் சொல்வதென்ன?

மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

"மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை உருவாக்கும் போது, எங்களின் பிரதிநித்துவம் நிச்சயம் இருக்க வேண்டும்” - மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

Published:Updated:

தமிழ்நாடு பட்ஜெட் 2023: மானியம் அதிகரித்ததை வரவேற்கிறோம்; ஆனால்... - மாற்றுத்திறனாளிகள் சொல்வதென்ன?

"மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை உருவாக்கும் போது, எங்களின் பிரதிநித்துவம் நிச்சயம் இருக்க வேண்டும்” - மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை மார்ச் 20ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

அப்போது 9,08,000 மாற்றுத்திறனாளிகளின் விவரங்களுடன் கூடிய தரவுதளம் ஒன்றை உருவாக்கி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து அந்தத் தளம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசின் நலத் திட்டங்கள் நேரடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கும்படி வழி வகுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு பட்ஜெட் 2023: மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கிறதா?
தமிழ்நாடு பட்ஜெட் 2023: மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கிறதா?

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையை 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்திட ஏற்கெனவே ஆணையிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, அதற்காக பட்ஜெட்டில் 1,444 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். 

இது போன்று, மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் திருப்தியளிக்கிறதா என, தமிழக மாற்றுத்திறனாளிகளின் சட்டப்பூர்வமான உரிமைகள் கிடைக்க உதவி வரும் டிசம்பர் 3 இயக்கத்தின் நிறுவனரும், பேராசிரியருமான தீபக் நாதனிடம் பேசினேன்.

தீபக் நாதன்
தீபக் நாதன்

”மாற்றுத்திறனாளிகளுக்கான மானியத்தை உயர்த்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். தமிழக அரசின் நோக்கத்தை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம். அதே சமயம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரச்னைகளைப் பேசும்போது, அதை ஏன் எங்களுடன் சேர்ந்து ஆலோசிப்பதில்லை?

50 கோடி ரூபாயை மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் முனைப்புக்கு ஒதுக்கியுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கி, மத்தியில் இருக்கும் தேசிய ஊனமுற்றோர் நிதி கழகத்திற்கு கொடுக்க வேண்டிய உத்தரவாதம், வட்டி மானியம்தான் இந்த 50 கோடி ரூபாய்.

இந்த நிதி நேரடியாக மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைப்பதில்லை. தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக, இந்தக் கடனுதவி கிடைக்கும். அப்படி இருக்கும்போது, வங்கி அதிகாரிகள், கடன் உதவி கோரும் மாற்றுத்திறனாளிகளிடம் உத்தரவாதம், பத்திரம் என்று கடைநிலை மாற்றுத்திறனாளி மக்களிடம் எதெல்லாம் கிடையாதோ, அதெல்லாம் கேட்பார்கள். இன்று உடல் சவால்களை எதிர்கொள்ளும் 80-90 விழுக்காடு மக்கள் வறுமையில்தான் வாழ்கிறார்கள். அதனால், தமிழ்நாடு அரசு நம் மாநிலத்திலேயே மாற்றுத்திறனாளிகளுக்கென நிதியம் உருவாக்கி அதன் வழியாக திட்டங்களை செயல்படுத்தினால், அது கடைநிலை மக்களைச் சென்றடையும். 

தமிழ்நாடு பட்ஜெட் 2023: மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கிறதா?
தமிழ்நாடு பட்ஜெட் 2023: மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கிறதா?

மாற்றுத்திறனாளிகள் நாங்கள் மொத்தமாக அரசாங்கத்தின் தீர்மானங்களில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு இருக்கிறோம். மாற்றுத்திறனாளிகள் ஆணையகத்தில் எத்தனை மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள், அவர்கள் எந்த பதவியில் இருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்தாலே நாங்கள் அரசுத் திட்டங்களில் இருந்து எவ்வளவு வெளியே இருக்கிறோம் என்று புரிந்துக்கொள்ள முடியும். அரசு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் இருந்தால் மட்டுமே சரியான தீர்வுகளைக் கண்டறிந்து மாற்றுத்திறனாளி சமூகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

மாற்றுத்திறனாளிகளை சமூகமும் சரி, அரசாங்கமும் சரி எங்களை கருணை அடிப்படையில் அணுகி எங்களுக்கு ஒதுக்கும் நிதியை ஏதோ தொண்டு செய்வது போலவே பார்க்கின்றனர். ஆனால், நாங்கள் கேட்பது உதவி அல்ல. எங்கள் உரிமையை. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கம் செய்துக்கொடுக்கும் எல்லா வசதிகளும் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகள்தான். அதனால், முதலில் எங்களை பாதிக்கப்பட்டவர்களாக மட்டும் பார்ப்பதை நிறுத்தவேண்டும். 

மாற்றுத்திறனாளிகளின் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளின் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் பணியாற்ற எத்தனை பணியிடங்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள்? மாற்றுத்திறனாளி என்று குறிப்பிடும்போது, அதில் அறிவுத்திறன் குறைபாடுள்ளவர்களும் அடங்குவார்கள். இன்று, பல காரணங்களால் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கெல்லாம் தகுதியான வேலைவாய்ப்புகளை கண்டறிய வேண்டும் அல்லது உருவாக்க வேண்டும். இப்படி பல திட்டங்கள் நடைமுறைப்படுத்த முழு நேர ஆணையம் அமைத்துத் தீர்வு காண்டால் மட்டுமே எதிர்காலத்தில் எழும் பல சிக்கல்களை தவிர்க்க முடியும். அந்த ஆணையத்திலும், மன வளர்ச்சி குறைபாடுள்ளவர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தாரின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்” என்றார். 

தமிழக பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருந்தபோதே, எழும்பூர் ராஜ ரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே சென்னையைச் சேர்ந்த பல மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் செயற்பாட்டாளர் சதீஷ் குமார், “சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அரசிடம், எல்லோரும் பயன்படுத்தக்கூடிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தாழ்தள பேருந்துகள் இயக்குவதில் பல கட்டமைப்புப் பிரச்னைகள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்காக சுமார் 20 ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். 20 ஆண்டுகளுக்கு முன்பும் இதே காரணம் தான், அடுத்த 20 ஆண்டுகள் கழித்தும் இதே கட்டமைப்பை காரணம் காட்டினால், இந்த வளர்ச்சி எல்லாம் யாருக்கானது? 

மாற்றுத்திறனாளிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கட்டமைப்புப் பிரச்சனை இருந்தால், அதை எப்படி சரி செய்யலாம் என்று அதிகாரிகள் தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும். நாங்கள் கேட்பது எங்கள் உரிமையைதானே. மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் என்று பலருக்கும் இது பயனளிக்கும். இன்று பொதுப் போக்குவரத்தில் பயனிக்க முடியாததால்தான், பல மாற்றுத்திறனாளிகளும் முதியவர்களும் வீட்டிலேயே இருக்கிறார்கள். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

பட்ஜெட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான மானியம் அதிகரிப்பை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம் மாற்றுத்திறனாளிகள் எடுக்கும் சிகிச்சைக்கான செலவை அரசாங்கமே ஈடுசெய்தால், கடைநிலை மக்களுக்கு உதவியாய் இருக்கும்” என்றார்.