நடப்பு
Published:Updated:

சம்பளதாரர்களைக் கைவிட்ட மத்திய பட்ஜெட்!

வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வரி

பட்ஜெட்

டப்பு 2019-20-ம் நிதியாண்டுக்கான முழு மத்திய பட்ஜெட்டைப் பார்த்து மாதச் சம்பளதாரர்கள் ஏமாற்றமடைந்தது என்னவோ உண்மைதான். மாதச் சம்பளக்காரர்களின் அடிப்படை வருமான வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும், 80சி பிரிவின்கீழ் உள்ள வரிச் சலுகைக்கான முதலீடுகள் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்புகள் பரவலாக இருந்தன. ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை.

சம்பளதாரர்களைக் கைவிட்ட  மத்திய பட்ஜெட்!

வீட்டுக் கடன் வட்டி வரிச் சலுகை உயர்வு

ஆனாலும், ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக, ரூ.45 லட்சத்துக்குக்கீழ் விலை உள்ள, வாங்கக்கூடிய விலையிலான வீடுகளை (Affordable housing), வீட்டுக் கடன்மூலம் வாங்குபவர் களுக்குத் திரும்பக் கட்டும் வட்டியில் வரிச் சலுகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

‘‘ரியல் எஸ்டேட்டுக்கான ஜி.எஸ்.டி உள்ளீட்டு வரிக் கழிவு 18 சதவிகித்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கக்கூடியதே” என நவீன்ஸ் ஹவுஸிங் நிர்வாக இயக்குநர் ஆர்.குமார் சொல்லியிருக்கிறார்.

காசாகிராண்ட் நிறுவனத்தின் நிறுவனர் எம்.என்.அருண், ‘‘வாங்கக்கூடிய விலையிலான வீடுகளுக்கு பட்ஜெட்டில் வரிச் சலுகை அளிக்கப்பட்டிருப்பது, வரும் 2022-ம் ஆண்டில் அனைவருக்கும் வீடு என்கிற இலக்கை நோக்கிச் செல்ல உதவியாக இருக்கும். மேலும், வாடகைச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவருவதன்மூலம் அந்தத் துறையில் முதலீட்டாளர்களைக் கவர முடியும்” என்றார்.

மின்சார வாகனங்களுக்குச் சலுகை

மின்சார வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் அதற்காகப் பெறும் கடனுக்கான வட்டியில் ரூ.1.5 லட்சத்துக்கு வரிக் கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பினைக் குறைக்க முடியும் என மத்திய அரசு நினைக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களின் இ.டி.எஃப்-களில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க, அந்த முதலீட்டுக்கு வரிச் சலுகை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சலுகை 80சி பிரிவின்கீழ் அளிக்கப்படுமா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்குக் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படாததால், வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருப்பவர்களுக்கே வரிச் சலுகை கிடைக்கும்.

பெரும் பணக்காரர்களுக்குக் கூடுதல் வரி

கடந்த சில ஆண்டுகளாகவே, பெரும் வசதி படைத்த ஒருவரின் மறைவுக்குப்பிறகு, அவரின் சொத்துகள்மீது எஸ்டேட் வரி என்கிற பரம்பரைச் சொத்து வரி மீண்டும் கொண்டுவரப்படும் என்கிற பேச்சு பலமாக அடிபட்டது. இந்த பட்ஜெட்டின்போதும் அப்படி ஒரு விஷயம் கொண்டு வரப்படும் என்கிற எதிர்பார்ப்பு பரபரப்பாக இருந்தது. ஆனால், அப்படியொரு அறிவிப்பு வரவே இல்லை. அதற்குப் பதிலாக, ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடிக்குள் வருமானம் உள்ளவர்களுக்கு 3% கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. ரூ.5 கோடிக்குமேல் வருமானம் உள்ளவர் களுக்கு 7% கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வசதி நிறுவனங்களை தேசிய வீட்டு வசதி நிறுவனத்துக்குப் பதிலாக, இனிஆர்.பி.ஐ கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த நிறுவனங்களில் நடக்கும் தவறுகள் குறையும் என எதிர்பார்ப்பதுடன், இவை வழங்கும் வீட்டு வசதிக் கடன்களுக்கான வட்டியும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.வங்கிகள்மூலம் ஓர் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாகப் பணம் எடுத்தால், 2% டி.டி.எஸ் விதிக்கப்படும் என அறிவித்திருப்பது நல்ல விஷயமே!

மத்திய பட்ஜெட் 2019: பங்குச் சந்தை ஏற்றம் பெறுமா?

மத்திய பட்ஜெட்டில் பட்டியலிடப் பட்ட நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பு 25 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்; இதை செபி அமைப்பு மேற்கொள்ளும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

வ.நாகப்பன்
வ.நாகப்பன்

‘‘ஒரு நிறுவனத்தில் பொதுமக்களின் பங்கு மூலதனம் அதிகரிக்கும்போது, சந்தையில் பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால், அந்த நிறுவனப் பங்கு விலை தற்காலிகமாக இறங்கக்கூடும். நல்ல நிறுவனப் பங்கு விலை குறைந்தால், அப்போது தாராளமாக முதலீடு செய்யலாம். இதனால் பல நிறுவனப் பங்குகளின் விலை இறங்கி, அதன் நியாயமான விலையையொட்டி அமைய வாய்ப்பி ருக்கிறது. முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அந்த நிறுவனம் மீதான நம்பிக்கை அதிகரிக்கக்கூடும். நிறுவனத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிறு முதலீட்டாளர் களின் கை ஓங்கி இருக்கும்” என்றார்.

ஒரு பங்கு நிறுவனத்தில் பொதுமக்களின் பங்கு முதலீடு அதிகரிக்கும்போது, இதை விரும்பாத பல பன்னாட்டு நிறுவனங்கள் அவற்றின் பங்குகளை இந்தியப் பங்குச் சந்தை களிலிருந்து நீக்கவும் வாய்ப்பிருக்கிறது. மேலும், மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பு அதிகரிக்கும்போது, அந்த நிறுவனம் மேம்பட வாய்ப்பிருக்கிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் விற்பனை புதிய உத்தியுடன் மீண்டும் தொடங்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித் திருக்கிறார். பொதுத்துறை நிறுவனப் பங்கு விலக்கல்மூலம் 2019-20 -ல் ரூ.1.05 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டி ருக்கிறது. இது இடைக்கால பட்ஜெட்டில் ரூ.90,000 கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டு வங்கிகளின் வாராக் கடன்களின் அளவு குறைந்துள்ளது. சுமார் ரூ.4 லட்சம் கோடி வாராக் கடன்கள் வசூலாகி இருக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் வங்கிகளின் வாராக் கடன் ரூ.1 லட்சம் கோடி குறைந்துள்ளது.

ஆறு பொதுத்துறை வங்கிகள் இக்கட்டான நிலை யிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகளின் மூலதனம் மற்றும் கடன் வழங்குவதை மேம்படுத்த ரூ.70,000 கோடி வழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

ஆனால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இதைவிடக் கூடுதலான சலுகைகளை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்ததால்தான், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளிக்கிழமையன்று சந்தைகள் இறக்கத்தில் முடிவடைந்தன. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது பங்குச் சந்தை ஏற்றமடையும் என்று எதிர்பார்க்கலாம்!

சமூகப் பங்கு சந்தை!

சம்பளதாரர்களைக் கைவிட்ட  மத்திய பட்ஜெட்!

சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தொழில் செய்துவரும் நிறுவனங் கள் நிதி திரட்டுவதற்கு வசதியாக, புதிதாக சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (சமூகப் பங்குச் சந்தை) கொண்டு வரப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இம்பாக்ட் இன்வெஸ்ட்மென்ட் அண்டு சோஷியல் ஃபைனான்ஸ் பிரிவின் தலைவர் மெய்ய நாகப்பனிடம் பேசினோம்.

“சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சமூகப் பங்கு சந்தை ஏற்படுத்தப்படுவது வரவேற்கக்கூடிய விஷயமாகும். பொதுவாக, இதுபோன்ற நிறுவனங்களில் தனிப்பட்ட பங்கு முதலீடு (பிரைவேட் ஈக்விட்டி) செய்யப்படும்போது, அந்த நிறுவனம் அதன் நோக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றும் என்று சொல்ல முடியாது. தற்போதைய நிலையில், சமூக அக்கறைகொண்ட நிறுவனங்கள் நிதி திரட்டுவதில் சிக்கலைச் சந்திக்கின்றன. அந்தக் சிக்கல் இனி தீரும் எனலாம். நஷ்டப்படாமல் சமூகத்துக்கு நல்லது செய்யும் இந்த நிறுவனங்களுக்கு வருமான வரியில் சலுகை கொடுத்தால் நல்லது” என்றார்.