Published:Updated:

பட்ஜெட்டும் பார்வைகளும்!

இந்த பட்ஜெட்டில் மைனஸ் என்று சொல்வதற்கு ஏதுமில்லை.

பிரீமியம் ஸ்டோரி
பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சியமைத்திருக்கும் தி.மு.க-வால் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்...ஸ்டாலின் தலையிலான ஆட்சி அமைந்து, நூறாவது நாளில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்... காகிதமில்லா முதல் பட்ஜெட்... எனப் பல்வேறு வகையில் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் குறித்து அந்தந்தத் துறையின் வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

“கடனைக் குறைப்பதற்கான வழிமுறைகளில் தெளிவு இல்லை!” - ஆனந்த் சீனிவாசன், பொருளாதார வல்லுநர்

``இந்த பட்ஜெட்டில் மைனஸ் என்று சொல்வதற்கு ஏதுமில்லை. பாதாளச் சாக்கடை, தொழில்நுட்பப் பூங்காக்கள், மகளிர் கடன் தள்ளுபடி, அனைவருக்கும் குடிநீர்த் திட்டம், குடிசையே இல்லாத மாநிலம் என்பது உட்பட பல முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இருக்கின்றன. குறிப்பாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து அறிவித்திருப்பது மிக முக்கியமானது. அடித்தட்டு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு இந்த விலைக்குறைப்பு முக்கியப் பங்களிக்கும். அரசுக் கடனைக் குறைப்பதற்கான வழிமுறைகளைச் செயல்படுத்துவோம் என்று சொன்னார்கள். ஆனால், அது குறித்து எந்தத் தெளிவும் இல்லை என்பதை வேண்டுமானால் குறையாகச் சொல்லலாம். “கொரோனா பெருந்தொற்றால்தான் அது முடியவில்லை. விரைவில் கடனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்” என்ற நிதியமைச்சரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அடுத்த பட்ஜெட் தாக்கலின்போது அதற்கான தீர்வு இருக்கும் என நம்புவோம்!”

ஆனந்த் சீனிவாசன், வி.பி.துரைசாமி,பிரின்ஸ் கஜேந்திரபாபு, சுந்தர்ராஜன்
ஆனந்த் சீனிவாசன், வி.பி.துரைசாமி,பிரின்ஸ் கஜேந்திரபாபு, சுந்தர்ராஜன்

``மகிழ்ச்சியே இல்லாத பட்ஜெட்!’’ - வி.பி.துரைசாமி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டபோது, தமிழகத்தையே இவர்கள் மாற்றியமைத்துவிடப்போவதாக ஒரு பிம்பத்தைக் காட்டினார்கள். எல்லாம் இப்போது பொய்த்துவிட்டது. தங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளுக்கு பட்ஜெட்டில் வாய்தா கேட்டிருக்கிறார் நிதியமைச்சர். கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை தரவில்லை... இப்படி நீள்கிறது நிறைவேற்ற முடியாததன் பட்டியல். எதிர்பார்ப்போடு இருந்த மக்கள் ஏமாந்திருக்கிறார்கள். இது மக்களுக்கு மகிழ்ச்சி தராத பட்ஜெட்!”

“மாநிலக் கல்விக் கொள்கை அறிவிப்பு வரவேற்கத்தக்கது!” -
பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்

“மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க உயர்மட்டக் கல்விக்குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தேர்தல் வாக்குறுதி என்பதையும் தாண்டி, அயோத்திதாச பண்டிதர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், தந்தை பெரியார் உள்ளிட்ட சமூகநீதிப் போராளிகளின் கனவை நனவாக்கும் வகையிலும், தமிழ்நாடு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றிடும் வகையிலும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை, அனைத்து நிலைகளிலும் சமமான கற்றல் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திட வழிசெய்யும் கல்விக் கொள்கையை உருவாக்கித் தர குழு அமைக்கப்பட வேண்டும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் கல்வியாளர்கள் மூலம் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கவை!”

பட்ஜெட்டும் பார்வைகளும்!

“ஆயுதத் தொழிற்பேட்டை அறிவிப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்!” - சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

``தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை, சூழலியல் பார்வையில் முக்கியத்துவம் பெறுகிறது. காலநிலை மாற்ற இயக்கம், வனத்துறையை நவீனமாக்குவது, வனப்பரப்பை அதிகரிக்க பசுமை இயக்கம், இந்தியாவிலேயே முதன்முறையாகச் சூழல் மாசு ஏற்படுத்தும் அனைத்து வாயுக்களையும், நுண் துகள்களையும் நிகழ் நேரத்தில் கண்காணிக்கிற, முன்கூட்டியே அறிவிக்கிற கண்காணிப்பு ஸ்டூடியோ, சதுப்புநிலப் பாதுகாப்பு இயக்கம், நீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்கான சிறப்பு அறிவிப்புகள் என வரவேற்கக்கூடிய பல அம்சங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. புதிதாக நிறுவப்படும் மின்னுற்பத்தித் திட்டத்தில் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கணக்கில்வைத்து ராணுவப் போர் ஆயுதத் தொழிற்பேட்டை, புதிய உப்பகற்றி ஆலைகள், பெரிய மேம்பாலங்கள், 1,000 தடுப்பணைகள் போன்ற அறிவிப்புகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். கனிம வளத்துறை மூலம் வருவாய் ஈட்ட மேற்கொள்ளும் முயற்சியையும் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டும்!”

“மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட வேண்டும்!” - தீபக், டிசம்பர் 3 இயக்கம்

“மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வாங்குவதற்கு நேரடி மானியம், மகளிர் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படவிருக்கும் டீசல் மானியம் உள்ளிட்ட பல அம்சங்கள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் உதவித்தொகை 1,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும். தனியார், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளி தொழில்முனைவோருக்கு வங்கிக் கடன் பெறுவதிலிருக்கும் சிக்கல் தீர்க்கப்பட வேண்டும். அனைத்துப் பொதுக் கட்டமைப்புகளையும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்களில் கடைகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும்... உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளில் அரசு கவனம் செலுத்தும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.”

தீபக், பி.ஆர்.பாண்டியன், கோவை செல்வராஜ்
தீபக், பி.ஆர்.பாண்டியன், கோவை செல்வராஜ்

“உடனடித் தேவையாக இருக்கும் பிரச்னைகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லை!” - பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம்

“வேளாண்துறைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பது, விவசாயிகளுக்கான எதிர்காலத்தை உறுதிசெய்கிறது. வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்துள்ளன. ஆனால், உடனடித் தேவையாக இருக்கும் சில பிரச்னைகளுக்கு இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. கடன் பிரச்னை, பயிர்க் காப்பீட்டுத் திட்டம், சந்தைப்படுத்துவதற்கான புதிய சட்டம் வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்!”

“பட்ஜெட்டில் பெரிதாக ஒன்றுமில்லை!” - கோவை செல்வராஜ், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

“பெட்ரோலுக்கு 3 ரூபாய் குறைத்திருக்கிறார்கள். வாக்குறுதி அளித்தபடி, டீசல் விலையையும் குறைத்திருந்தால், பொருள்களின் விலையேற்றத்தைக் குறைத்திருக்கலாம். முதியோர் உதவித்தொகை அரசியல் தலையீடு இல்லாமல் தகுதியுள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளைப் புதுப்பிப்பதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. மலைவாழ் மக்களுக்கு எந்தவொரு பணியும் செய்து கொடுப்பதற்கான உத்தரவாதம் இல்லை. வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கான வழியும் பட்ஜெட்டில் இல்லை. கல்விக்கு நாங்கள் எவ்வளவு ஒதுக்கினோமோ, அதைத்தான் இவர்களும் செய்திருக்கிறார்கள். பட்ஜெட்டில் பெரிதாக ஒன்றுமில்லை!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு