Published:Updated:

நீண்டகாலத்தில் நன்மை தரும் பட்ஜெட் அறிவிப்புகள்..!

ஹலோ வாசகர்களே..!

பிரீமியம் ஸ்டோரி

பொதுவாக, மத்திய பட்ஜெட் என்றாலே எதிர்பார்ப்பு நிறையவே இருக்கும். இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலான எதிர்பார்ப்பு இருந்ததற்குக் காரணம், கோவிட்-19 ஏற்படுத்திய பாதிப்புகள்தான். வேலைவாய்ப்பைப் பெருக்கி, தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்தி, பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எப்படிச் செய்யப்போகிறது என்பதை எல்லோரும் எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பு பெரிய அளவில் வீண்போகவில்லை என்பதே பொருளாதாரத் துறை சார்ந்தவர்களின் கருத்தாக இருக்கிறது.

நம் நாட்டில் உள்கட்டமைப்புகளைப் பெருக்க மூலதனச் செலவை அதிகரிக்கும் முக்கியமான முடிவை மத்திய அரசாங்கம் இந்த பட்ஜெட் மூலம் எடுத்திருக் கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூலதனச் செலவுக்காக மட்டுமே ரூ.5.5 லட்சம் கோடி செலவு செய்யப்படவிருப்பதாக நிதி அமைச்சர் சொல்லியிருக்கிறார். இத்தனை பெரிய தொகை உண்மையிலேயே செலவழிப்பட்டால், நம் நாடு வளர்ந்த மேற்கத்திய நாடுகள் போலாகி, வேகமான பொருளாதார வளர்ச்சியைக் காணும். சிலபல அரசுத் துறை நிறுவனங்களில் இருக்கும் அரசின் முதலீட்டைத் திரும்பப் பெறுவதன்மூலம் ரூ.1.75 லட்சம் கோடியைத் திரட்ட மத்திய அரசாங்கம் திட்டமிட்டிருப்பதும் நல்ல முடிவுதான். வாங்கக்கூடிய விலையில் உள்ள வீடுகளுக்கான வரிச் சலுகை நீட்டிப்பு, சுகாதாரத் துறைக்கு ரூ.2.23 லட்சம் கோடி ஒதுக்கீடு, தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு, எல்லா வங்கி டெபாசிட் தாரர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை பாதுகாப்பு என நிதி அமைச்சர் வெளியிட்ட பல அறிவிப்புகள் வரவேற்கத்தகுந்ததாகவே இருந்தன.

மதுரை - கொல்லம் இடையே நவீன நெடுஞ்சாலை, சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு, சென்னை மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கம், கோவையில் ஜவுளிப்பூங்கா எனத் தமிழகத்துக்கு பல திட்டங்கள் அறிவித்திருப்பது, இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் தேர்தலை மனதில் வைத்துதான். மேலும், விவசாய உள்கட்டமைப்பை ஏற்படுத்த புதிய வரியை விதித்து, பெட்ரோல், டீசலின் விலையை உயர்த்தி, எல்லாப் பொருள்களின் விலை உயர்வதற்கு வழிவகை செய்து தந்திருக்கிறார்கள். மூலதனச் செலவை உயர்த்திய அதே நேரத்தில் மானிய உதவியைக் குறைத்திருப்பது சாதாரண மக்களைப் பாதிப்படையவே செய்யும். எல்லாவற்றுக்கும் மேலாக, அடுத்த ஓராண்டுக் காலத்தில் எவ்வளவு செலவு செய்யப்போகிறோம் என்று சொல்லாமல், ஐந்து ஆண்டுகளில் செலவு செய்யப்போகும் தொகையைச் சொல்வதைக் கேட்டு, ஆளும்கட்சிக்காரர்கள் வேண்டுமானால் கை தட்டலாம். ஆனால், இது அப்பாவி மக்களை ஏமாற்ற நினைப்பது தவிர வேறில்லை.

ஆக மொத்தத்தில், இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ள அறிவிப்புகள் உண்மையில் நடக்கும்பட்சத்தில் நீண்டகாலத்தில் பல நல்ல விளைவுகள் ஏற்பட்டு, புதிய இந்தியாவை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால், கடந்தகால அறிவிப்புகளில் பலவும் அறிவிப்புகளாவே நிற்பதுதான் பயமுறுத்துகிறது!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு