நாட்டு நடப்பு
Published:Updated:

வேளாண்மை பட்ஜெட்... வெற்று பட்ஜெட்டாகவே இருக்கும்!

கார்ட்டூன்
News
கார்ட்டூன்

தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘நம் நிதிநிலைக்கு ஏற்ப, விவசாயிகளின் வேண்டுகோளை ஓரளவுக்கு நிறைவேற்றும் வகையில் நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார் 2023-24-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண்துறையின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். ஆக, அவருக்கே அத்தனை திருப்தி இல்லை.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 86 அறிவிப்புகளுடன் 33,007.68 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் எத்தனை செயல்பாட்டுக்கு வந்தன; நிலுவையில் உள்ளவை எத்தனை என்பதற்குத் தெளிவான கணக்குகள் வெளியிடப்படவில்லை.

மேலும், விவசாயிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலான சில அறிவிப்புகள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ‘பேரீச்சை உள்ளிட்ட சிறப்புப் பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தமிழகச் சூழலுக்கு பேரீச்சை வளர்ப்பு சரிப்பட்டு வராது’ என்று தமிழக வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து ஆண்டுகள் பலவாகின்றன. அதேபோல ஒப்பந்த பண்ணையம் என்பதிலும் நிறைய ஏமாற்றங்களைத்தான் சுமந்து நிற்கிறார்கள் உழவர்கள். அப்படியிருக்க, தனிநபர்களும் நிறுவனங்களும் லாபம் பெறுவதற்காக பேரீச்சை மற்றும் ஒப்பந்தப் பண்ணைய விஷயங்களை மீண்டும் அரசாங்கம் கையில் எடுத்திருப்பது ஆபத்தானது!

தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதில் எந்தச் சிக்கலும் இல்லை. விலைதான் பிரச்னையே. நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டங்களில்கூட ‘‘விளைபொருளுக்கு உரிய விலை வேண்டும்’’ என்றுதான் விவசாயிகளின் குரல்கள் ஏகோபித்து ஒலித்தன. ஆனால், அதுகுறித்த அறிவிப்பு, நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. அண்மையில் வெளியான தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கையிலும் ஆக்கபூர்வமான விஷயங்கள் இல்லை.

இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு, சிறப்புத் திட்டங்கள் என்கிற பெயரில் உரிய அறிவிப்புகளை உடனடியாக வெளியிடுவதோடு, அவற்றை நிறைவேற்றவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! இல்லையென்றால், வேளாண்மை பட்ஜெட்... வெற்று பட்ஜெட்டாகவே இருக்கும்!

- ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்