Published:Updated:

பொதுமக்களின் பங்களிப்பு அதிகரிப்பு... அதிக நிதி திரட்டும் அரசின் எண்ணம் நிறைவேறுமா?

பட்ஜெட் ஃபாலோஅப்

பிரீமியம் ஸ்டோரி

த்திய பட்ஜெட்டில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தத் தேவையான நிதி நமது மத்திய அரசிடம் இல்லை என்பதுதான் அந்த விஷயம். புதிய முதலீட்டினை எப்படியெல்லாம் திரட்டலாம் என நன்கு யோசித்திருக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பங்குச் சந்தை மூலம் நிதி திரட்டுவது உள்பட பல்வேறு முடிவுகளை அறிவித்திருக்கிறார். அரசின் இந்த முடிவுகளைப் பார்ப்போம்.

பொதுமக்களின் பங்களிப்பு அதிகரிப்பு... அதிக நிதி திரட்டும் அரசின் எண்ணம் நிறைவேறுமா?

1. பங்குச் சந்தையில் மக்களின் பங்களிப்பு உயர்வு...

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பு 25 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்தார். இதை செபி அமைப்பு மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொதுமக்களின் குறைந்தபட்ச பங்களிப்பு 25 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்பது செபியின் விதிமுறை. இதைப் பின்பற்றாமல் பல நிறுவனங்கள் இன்னமும் இருந்துவருகின்றன. இந்த 25% தேவையை நிறைவேற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு 2020 ஆகஸ்ட் வரைக்கும் கால அவகாசம் தந்திருக்கிறது செபி. இந்த நிலையில், பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பு 35% என்கிற இலக்கினை நிறைவேற்றுவது மிகவும் கடினமாக இருக்கும் என்கிறார்கள் பகுப்பாய்வாளர்கள். அந்த வகையில், மத்திய அரசுக்குப் போதிய நிதி கிடைக்குமா என்பது சந்தேகம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

பொதுமக்களின் பங்களிப்பு அதிகரிப்பு... அதிக நிதி திரட்டும் அரசின் எண்ணம் நிறைவேறுமா?

மத்திய அரசுக்குச் சொந்தமான 19 பொதுத்துறை வங்கிகளில், 15 வங்கிகளில் மத்திய அரசின் பங்கு மூலதனம் 75 சதவிகிதத்துக்குமேல் உள்ளது. ஆந்திரா பேங்க், கார்ப்பரேஷன் பேங்க், ஐ.ஓ.பி போன்றவற்றில் அரசின் பங்கு மூலதனம் 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறது.

2. ஏர் இந்தியா பங்குகள் மீண்டும் விற்பனை

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் விற்பனை புதிய உத்தியுடன் மீண்டும் தொடங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியப் பங்குச் சந்தை, சர்வதேசக் காரணங்களால் தற்போதைய நிலையில் இறக்கத்திலிருந்து வருகிறது. இந்த நிலையில், ஏர் இந்தியா பங்கு களுக்கு எந்த அளவுக்குப் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் இடையே ஆர்வம் மற்றும் ஆதரவு இருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. பங்கு விலையில் கணிசமாகத் தள்ளுபடி அளித்தால் மட்டுமே இந்தப் பங்கு விற்பனை வெற்றி பெறக்கூடும்.

3. பங்கு விலக்கல் இலக்கு ரூ.1.05 லட்சம் கோடி

பொதுத்துறை நிறுவனப் பங்கு விலக்கல் மூலம் 2019-20-ல் ரூ.1.05 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இந்த இலக்கு ரூ.90,000 கோடியாக இருந்தது. முடிந்த நிதி ஆண்டில் மத்திய பட்ஜெட் இலக்கான ரூ.80,000 கோடிக்கு பங்கு விலக்கலை மேற்கொண்டு சாதனை படைத்தது. அதனையடுத்து நடப்பு நிதி ஆண்டுக்கான இலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பங்கு விலக்கல் : பட்ஜெட் இலக்கும் நடப்பும்

பொதுமக்களின் பங்களிப்பு அதிகரிப்பு... அதிக நிதி திரட்டும் அரசின் எண்ணம் நிறைவேறுமா?

4. பங்கு பைபேக் செய்தால் 20% வரி

பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளைத் திரும்ப வாங்கும்போது (பைபேக்), 20% வரி கட்ட வேண்டும் என மத்திய அரசின் வரி வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் வரியெல்லாம் சேர்ந்தால், மொத்தம் 23.29% வரி செலுத்த வேண்டும். இதற்குமுன் இதுபோன்ற வரியானது பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்குத்தான் இருந்தது.

பொதுமக்களின் பங்களிப்பு அதிகரிப்பு... அதிக நிதி திரட்டும் அரசின் எண்ணம் நிறைவேறுமா?

பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் விநியோகம் செய்யும்போது 15% வரி கட்ட வேண்டும் என 2007-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பிற்பாடு நிதி ஆண்டில் ரூ.10 லட்சத்துக்குமேல் டிவிடெண்ட் பெறும் முதலீட்டாளர் 10% வரி கட்டவேண்டும் என்கிற மாற்றம் 2015-16-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வரிகளைத் தவிர்க்க, ரொக்கக் கையிருப்பு அதிகம் கொண்ட நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்து வந்தன. இதைத் தவிர்க்கும்விதமாக, இப்போது பைபேக்குக்கு 20% வரி விதிக்கப்பட்டுள்ளது. பைபேக் வரியினால் இன்ஃபோசிஸ் உள்படப் பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பைபேக்

பொதுமக்களின் பங்களிப்பு அதிகரிப்பு... அதிக நிதி திரட்டும் அரசின் எண்ணம் நிறைவேறுமா?

5. சி.பி.எஸ்.இ. இ.டி.எஃப் முதலீட்டுக்கு வரிச் சலுகை

மத்திய பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை கொண்ட சி.பி.எஸ்.இ. இ.டி.எஃப் (CPSE ETF) முதலீட்டுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி வரிச் சலுகை அளிப்பது மூலம் சிறு முதலீட்டாளர்கள், இந்த இ.டி.எஃப்-ல் அதிக ஆர்வத்துடன் முதலீடு செய்வார்கள். அதன் மூலம் மத்திய அரசுக்கு அதிக நிதி கிடைக்கும் என மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு