Published:Updated:

விவசாயக்கடன் முதல் பால் உற்பத்தி அதிகரிப்பு வரை... பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு 16 அம்சங்கள்! #Budget2020

budget 2020
budget 2020

`2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை அரசு இரட்டிப்பாக்கும்’ என்று நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.

வேளாண்துறை நெருக்கடியைச் சரிசெய்ய, 16 அம்ச திட்டத்தை வகுத்துள்ளதாக, பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை அரசு இரட்டிப்பாக்கும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார். மேலும், 'ஃபசல் பீமா யோஜனா'வின் கீழ் மொத்தம் 6.11 கோடி விவசாயிகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

``11 கோடி விவசாயிகளுக்கு கிசான் பீமா யோஜனா மூலம் உதவி செய்யப்பட்டுள்ளது. `பிரதமர் கிசான்' திட்டம் மூலம் விவசாயிகளுக்கு வருடாந்தர உதவித்தொகை வழங்கப்படுகிறது. விவசாயச் சந்தைகளைத் தாராளமயமாக்க முயற்சிகள் எடுக்கப்படும். மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு போன்ற இதர வாய்ப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்” என்று உரையில் விளக்கியுள்ளார் நிதியமைச்சர்.

மாதிரி விவசாய நில குத்தகை சட்டம் 2016, மாதிரி விவசாய உற்பத்தி, கால்நடை மற்றும் சந்தைப்படுத்தல் சட்டம் 2017, மாதிரி விவசாய உற்பத்தி, கால்நடை ஒப்பந்த வேளாண்மை, சேவைகள் மேம்பாடு மற்றும் வசதி சட்டம் 2018 போன்ற சட்டங்களை அமல்படுத்த மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பட்ஜெட் 2020
பட்ஜெட் 2020
பட்ஜெட் 2020: மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்குமா? #Budget2020 #VikatanPhotoCards

நிதியமைச்சர் வகுத்துள்ள 16 அம்ச திட்டங்கள்;

1. மத்திய அரசு வகுக்கும் மாதிரி விவசாயச் சட்டங்களை அமல்படுத்த மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.

2. இந்தியா முழுவதிலும் நீர்ப் பற்றாக்குறை உள்ள சுமார் 100 மாவட்டங்களை மேம்படுத்த விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

3. PM KUSUM (Pradhan Mantri Kisan Urja Suraksha evem Utthan Mahabhiyan) திட்டத்தின் மூலம் மண்ணெண்ணெய் பயன்பாட்டை நீக்கி சூரிய சக்தியைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்.

4. விவசாயக் கிடங்குகள், குளிர் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் பிற சரக்குக் களஞ்சியங்களை மேப்பிங் மற்றும் ஜியோ டேக்கிங் செய்வதற்கான முயற்சியை நபார்டு மேற்கொள்ளும்.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

5. கிராமம்தோறும் சேமிப்புக் கிடங்குகளை நிறுவி, விளைச்சலின் சேகரிப்பை மேம்படுத்த வழிவகை செய்யப்படும். இந்தக் கிடங்குகள் மகளிர் சுய உதவிக்குழுக்களால் பராமரிக்கப்படும்.

6. உற்பத்திப் பொருள்கள், சந்தைகளைச் சென்றடைய கிசான் ரயில் திட்டம் தொடங்கப்படும்.

7. விளைச்சலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, 'கிருஷி உடான்' திட்டம் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் தொடங்கப்படும்.

8. தோட்டப்பயிர்களின் விளைச்சல், தானிய விளைச்சலைவிடப் பன்மடங்கு அதிகமாக உள்ளது. இந்நிலையைச் சமன்படுத்த 'ஒரு மாவட்டம், ஒரு பயிர்' என்ற திட்டம் நிறுவப்படும்.

பட்ஜெட் 2020: கடந்த 10 ஆண்டுகளின் பட்ஜெட் தொகையும், நிதி பற்றாக் குறையும்! #VikatanInfographics

9. சேமிப்புக் கிடங்குகளில் வழங்கப்படும் பொருளீட்டுக் கடன் பணிகள் மின்னணு மயமாக்கப்படும்.

10. 2021-ம் ஆண்டுக்கான விவசாயக் கடன் தொகை 15 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

11. 2025-ம் ஆண்டுக்குள் கால்நடைகளைத் தாக்கும் நோய்களை (foot and mouth) அகற்ற முயற்சிகள் எடுக்கப்படும். செயற்கை கருவூட்டல் ஊக்குவிக்கப்படும்.

Agriculture
Agriculture

12. தற்போதுள்ள 53.5 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தி 2025–ம் ஆண்டுக்குள் 103 மெட்ரிக் மில்லியன் டன்னாக உயர்த்தப்படும்.

13. மீன்வளத் துறையில் இளைஞர்களின் பங்கேற்பு அதிகரிக்கப்படும். கிராமப்புற இளைஞர்கள் சாகர் மித்ராக்களாக (கடலின் நண்பர்கள்) பணியாற்றுவதோடு மீனவர் அமைப்பையும் உருவாக்க உதவுவார்கள்.

14. அந்த்யோதயா திட்டத்தின் கீழ், சுய உதவிக் குழுக்கள் மேலும் முன்னோக்கிய பாதையில் எடுத்துச் செல்லப்படும்.

15. 2.83 லட்சம் கோடி ரூபாய் விவசாயத்துக்கு ஒதுக்கப்படும்.

16. கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு 1.23 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு