Published:Updated:

10-வது பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட்... கடனில் தத்தளிக்கும் தமிழகம்!

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் துணைநிலை பட்ஜெட்டாகவே இருக்கும் என்பதால் இந்தப் பட்ஜெட்டிலே ஏராளமான திட்டங்களை நிறைவேற்ற எடப்பாடி தலைமையிலான அரசு முடிவுசெய்திருந்தது.

தமிழகத்தின் நிதி அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தனது பத்தாவது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார். பற்றாக்குறையுடன் இந்தப் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும் எதிர்காலத்தில் இவற்றை சரிசெய்துவிடுவோம் என்கிற நம்பிக்கை வாசகத்துடன் இந்தப் பட்ஜெட் வாசிப்பையும் நிறைவு செய்துள்ளார்.

தமிழகத்தின் 2020-21-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை இன்று தமிழக சட்டப்பேரைவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்வதைக் காண அவரது இரண்டு மகன்களான ரவீந்தரநாத் மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் சட்டமன்றத்துக்கு வந்திருந்தனர். மாடத்தில் அமர்ந்திருந்து அப்பாவின் நிதிநிலைத் தாக்கலை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

எடப்பாடி பழனிசாமி- பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தபோது
எடப்பாடி பழனிசாமி- பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தபோது

``வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை”

என்று திருக்குறளுடன் தனது பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் பன்னீர்செல்வம். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் துணைநிலை பட்ஜெட்டாகவே இருக்கும் என்பதால் இந்தப் பட்ஜெட்டிலே ஏராளமான திட்டங்களை நிறைவேற்ற எடப்பாடி தலைமையிலான அரசு முடிவு செய்திருந்தது. குறிப்பாக, வேளாண்துறைக்கும் உள்கட்டமைப்புக்கும் கூடுதல் நிதியை இந்தப் பட்ஜெட்டில் ஒதுக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல் கவர்ச்சிகரமான திட்டங்கள் இந்தப் பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் கடன்சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெரிய திட்டங்கள் எதுவும் அதிக அளவில் இந்தப் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

பன்னீர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!

மாநில அரசுக்கு மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய மானியத்தொகை முழுமையாக வரவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசின் 15 வது நிதிக்குழு தமிழகத்துக்கு வருவாய் பற்றாக்குறை மானியத்தில் மொத்தமாக 73,340 கோடி வழங்க பரிந்துரை செய்திருந்தது. ஆனால், மத்திய அரசு 30,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருள்களைக் காட்சிப்படுத்த 12.21 கோடியில் அகழ் வைப்பகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் தொல்லியல் துறைக்கு 31.93 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பனனீர்செல்வம்
பனனீர்செல்வம்

2011-12-ம் ஆண்டு அ.தி.மு.க-வின் ஆட்சிக்காலம் ஆரம்பித்தது முதல் இந்த ஆண்டுவரை 715 அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கபட்டுள்ளன. அதில் 537 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 161 அறிவிப்புகளின் பணி நிறைவடையும் நிலையிலும் 17 அறிவிப்புகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

புரட்சித்தலைவி அம்மா விரிவான விபத்துக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டுத்திட்டத்தில், விபத்துகளால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு நான்கு லட்சம் ரூபாயும், நிரந்தர ஊனத்தால் பாதிக்கப்பட்டால் இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த நிதி ஆண்டில் இந்தத் திட்டத்துக்கு 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்றங்களை பிரத்யேகமாக விசாரிக்க 16 போக்ஸோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு 1,403.17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறைக்கு 1,229 கோடியும் நீர்ப்பாசனத்துறைக்கு 6,991 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் தமிழக விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக 7,618 கோடி ரூபாய் வழங்கபப்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டில் பயிர்க்கடன் 11,000 கோடி ரூபாய் கூட்டுறவு அமைப்புகளின் மூலமாக வழங்கப்பட உள்ளது.

பொங்கலுக்கு வழங்கப்பட்ட 1,000 ரூபாய் தொகைக்கு 2,363.13 கோடி வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு 15,863 கோடியும் மின்சாரத்துறைக்கு 20,115 கோடியும் கல்வித்துறைக்கு 34,841 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவேரி-குண்டாறு இணைப்புத்திட்டம் 7,677 கோடிமதிப்பீட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இப்போது இந்தத் திட்டத்துக்கு முதல் தவணையாக 700 கோடி இந்தப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஆண்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306.95 கோடியும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754.30 கோடியும் வழங்கப்பட உள்ளன. கிராமப்புறங்களில் அடிப்படைவசதிகளை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் முதலமைச்சர் கிராமத் தன்னிறைவு வளர்ச்சித் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தமிழக அரசு - தலைமைச் செயலகம்
தமிழக அரசு - தலைமைச் செயலகம்

அம்மா உணவகத்தைத் தொடர்ந்து செயல்படுத்த 100 கோடியும் அம்ருத் திட்டத்தைச் செயல்படுத்த 1,450 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறைக்கு 18,540 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 3,000 கோடியில் இரண்டு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 3,100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாரியத்தின் வருவாயும் இந்த நிதி ஆண்டில் குறைந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

துாத்துக்குடி அருகில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் தயாரிப்பு வளாகம் 49,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது” என்கிற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதே நேரம் தமிழக அரசின் நடப்பாண்டில் 25,000 கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது. தமிழக நிதிநிலை பற்றாக்குறை 23,459 கோடியாக இருந்தது என்றும், இப்போது வருவாய் பற்றாக்குறை 25,071 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதே போல் தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறையும் 2019-20 நிதி ஆண்டில் 55,058 கோடியாக அதிகரித்துள்ளது.

சட்டமன்றம்
சட்டமன்றம்

இதைவிட தமிழக அரசின் கடன்சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2020-21-ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் தொகை 4,56,660 கோடி என்று சொல்லி அதிரவைத்துள்ளார் நிதி அமைச்சர். அதே நேரம் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை எதிர்கொண்டு பொருளாதார நெருக்கடிகளை சமாளித்துள்ளது தமிழகம். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.27 % என்பது தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட அதிகம் என்று எடுத்துரைத்துள்ளார் நிதி அமைச்சர்.

``கடந்த காலக் காதல்களைப்போல் நிகழ்காலக் காதல்கள் இல்லை!" - இயக்குநர் ராம் #VikatanOriginals

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளன. தமிழக அரசின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``பத்தாவது பட்ஜெட் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது. நிதிபற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, கடன்சுமை எல்லாம் அதிகரித்துள்ளன. அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி துறைக்கு அதிக அளவில் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மர்மம் என்ன என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும். தி.மு.க ஆட்சியில் 1 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன்சுமை இப்போது நான்கு லட்சத்துக்கு மேல் உள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சபாநாயகர் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எத்தனை நாள்கள் இந்தக் கூட்டத்தொடரை நடத்துவது என்று விவாதிக்கப்பட்டது. இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர், ''பட்ஜெட் கூட்டத்தொடர் 17-ம் தேதி இரங்கல் தீர்மானத்துடன் ஆரம்பித்து, 18-ம் தேதி மற்றும் 19-ம் தேதிகளில் பொதுவிவாதம் நடைபெற இருக்கிறது. 19-ம் தேதி அன்று எதிர்க்கட்சித் தலைவரின் உரையும், 20-ம் தேதி பதிலுரையும் இடம்பெறும்” என்று தெரிவித்தார். குடியுரிமை சட்டம்தொடர்பான விவாதம் பற்றி அவையில் அறிவிக்கபடும் என்றும் பதில் அளித்தார் சபாநாயகர் தனபால்.

பின் செல்ல