Published:Updated:

பாதிக்கிணறும் தாண்டாத பட்ஜெட்!

நிர்மலா சீதாராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
நிர்மலா சீதாராமன்

தேசத்தின் வளர்ச்சி தொடர்ந்து சரிந்துகொண்டே இருக்கிறது.

டந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கமான பெட்டிக்கு பதிலாக சிவப்பு நிறத் துணியில் பட்ஜெட் காகிதங்களைச் சுற்றி எடுத்து வந்திருந்தார். பெட்டிக்குப் பதிலாகத் துணி மாறியதுபோல பட்ஜெட்டிலும் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எழுந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. இப்போது நிலவும் பொருளாதார மந்தநிலையைச் சரிசெய்யும் என்று பார்த்தால் இது பாதிக்கிணறுகூடத் தாண்டாத பட்ஜெட்டாகத் தான் இருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ள சில முக்கியமான அறிவிப்பு களைப் பார்த்துவிடுவோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
  • 2022-க்குள் இந்திய விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரவிருக்கும் 2020-21 நிதியாண்டில், விவசாயத்துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் நலனுக்காக 16 அம்சத் திட்டமும் செயல் படுத்தப்படவுள்ளது.

ஜோதி சிவஞானம், டி.தாமஸ் ஃப்ராங்கோ
ஜோதி சிவஞானம், டி.தாமஸ் ஃப்ராங்கோ
  • இந்தியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த 5 இடங்களில் உலகத் தரத்தில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்த நிதியமைச்சர், தமிழகத்தின் ஆதிச்சநல்லூரும் அவற்றில் ஒன்று என்று அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • இந்த பட்ஜெட்டில் அதிக விவாதத்துக்குள்ளானது, எல்.ஐ.சி பங்குகளைத் தனியாருக்கு விற்பது குறித்த அறிவிப்புதான்.

  • தனிநபர்களுக்குப் புதிய வருமானவரிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வரிவிதிப்பின்படி, ஆண்டு வருமானம் ரூ.5-7.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கான வருமான வரி 10 சதவிகிதம்; ரூ.7.5-10 லட்சம்வரை 15 சதவிகிதம்; ரூ.10-12.5 லட்சம் வரை 20 சதவிகிதம்; ரூ.12.5 முதல் 15 லட்சம் வரை 25 சதவிகிதம்; ரூ.15 லட்சத்துக்கு மேல் 30 சதவிகிதம் வரி செலுத்தவேண்டும். ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆத்திசூடி, சாகித்ய அகாடமி விருதுபெற்ற காஷ்மீரியக் கவிதை, திருக்குறள், காளிதாசரின் வாழ்க்கைத் தத்துவம் எனத் தன் இலக்கியப் பரிச்சயத்தையும் ஆங்காங்கே தூவினார் நிதியமைச்சர். ஆனால், தற்போதைய வரி வருவாய் வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, சரியும் ஜி.டி.பி, பொருளாதாரத் தேக்க நிலை போன்ற சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் பட்ஜெட்டாக இது அமையவில்லை என்பதே பெரும்பாலான பொருளாதார நிபுணர்களின் கருத்து.

“வளர்ச்சியை ஊக்குவிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விலைவாசி களின் ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்துவது இந்த மூன்றும்தான் தற்போதைய இந்தியாவின் தலையாய பிரச்னைகள். ஆனால், பட்ஜெட்டில் இந்த மூன்று பிரச்னைகளுக்கும் தீர்வு தரும்படியான அறிவிப்புகள் இல்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றம்.

தேசத்தின் வளர்ச்சி தொடர்ந்து சரிந்துகொண்டே இருக்கிறது. 1970-ல் அமெரிக்காவில் இதுமாதி ரியான நிலை உருவானது. குறிப்பாக உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வு. இந்த நிலைதான் இப்போது இந்தியாவுக்கும். இதுமாதிரியான நிலை இதற்குமுன்பு எப்போதும் இந்தியாவுக்கு வந்ததில்லை. இந்நிலை தொடர்ந்தால் முதலில் பாதிப்புக்குள்ளாவது கிராமப்புறங்கள்தான்” என்கிறார் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்.

மேலும், “கடந்த 2019-20 நிதி ஆண்டின் பட்ஜெட்டிலும் துறைகள் வாரியாக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், ஒதுக்கப்பட்ட தொகை செலவு செய்யப்படவில்லை. மிகவும் குறைவாகவே பயன்படுத் தினார்கள். குறிப்பாக, விவசாய மானியத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை, மிகவும் குறைவாகவே விவசாயிகளிடம் போய்ச் சேர்ந்தது. இதர துறைகளின் நிலையும் இப்படித்தான். ஒவ்வொரு ஆண்டும் இதே ஃபார்முலாவைத்தான் பா.ஜ.க அரசு கையாள்கிறது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

வருமான வரி நடைமுறைகளை மேலும் சிக்கலாக்குவது போன்ற அறிவிப்புகளைத்தான் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். வரி வருவாயை உயர்த்துவதற்கு, வரி செலுத்தும் நடைமுறை களை எளிமைப்படுத்த வேண்டும் என்பதைக்கூட ஆட்சியாளர்கள் உணரவில்லை.

2019-20 நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை அளவு, 3.8 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. 2020-21 நிதி ஆண்டில் இந்த நிதிப் பற்றாக்குறை 3.5 சதவிகிதமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்கள். புதிய கடன்கள் வாங்குவது 7.8 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2019-20 நிதி ஆண்டில் 7.1 லட்சம் கோடியாக இருந்தது. இந்த அளவானது வருடா வருடம் அதிகரித்து வருவது தவறான நிர்வாகப் போக்கின் அறிகுறி என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த பட்ஜெட்டில் எல்.ஐ.சி பங்குகளை, பங்குசந்தை மூலமாக தனியாருக்கு விற்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இது, ஒரு விவசாயி, விதைநெல்லை விற்பதற்குச் சமம்” என்கிறார் ஆதங்கத்துடன்.

எல்.ஐ.சி பங்குகள் குறித்த முடிவுக்கு எதிராக, மூன்று பெரிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளன. 60 ஆண்டுகள் பழைமையான, அரசாங்கக் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பயணம் மகத்தானது. இந்தியாவின் காப்பீட்டுச் சந்தையில் 70 சதவிகிதம், எல்.ஐ.சி-யின் பிடியில் உள்ளது. எப்போதெல்லாம் அரசு நிதி நெருக்கடியைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் எல்.ஐ.சி ஆபத்பாந்தவனாக நின்று காப்பாற்றியிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 2.1 லட்சம் கோடி திரட்டப்போவதாக அறிவித்திருந்தார் நிதியமைச்சர். மத்திய அரசு ஏற்கெனவே பாரத் பெட்ரோலியம் மற்றும் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பதாக அறிவித்திருந்ததையும் இதோடு இணைத்துப் பார்க்கவேண்டும்.

2015-ல் ஓ.என்.ஜி.சி-யின் பங்குகளைப் பங்குச்சந்தையில் விற்றபோது எல்.ஐ.சி அந்த நிறுவனத்தில் 1.4 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.டி.பி.ஐ வங்கி வாராக்கடன்களில் மூழ்கியபோதும் எல்.ஐ.சி-யே காப்பாற்றியது.

இதுவரை பிற நிறுவனங்களை மீட்பதற்கு எல்.ஐ.சி-யைப் பயன்படுத்திவந்த அரசு, தற்போது எல்.ஐ.சி-யையே விற்கத் தயாராகிவிட்டது. எல்.ஐ.சி நிறுவனத்தின் எவ்வளவு சதவிகிதப் பங்குகளை விற்கப்போகிறது என வெளிப் படையாகக் குறிப்பிடவில்லை. ஒருவேளை அரசு எல்.ஐ.சி-யில் 50 சதவிகிதத்திற்கும் அதிக பங்குகளை விற்காமல் வைத்திருந்தால் மட்டுமே அது அரசு நிறுவனமாக இருக்கும்.

“அனைத்தையும் தனியார்மயமாக்குவதுதான் இந்த அரசின் நோக்கமாக இருக்கிறது. தொழில் நிறுவனங்களுக்குக் கடன்களை வழங்க உருவாக்கப்பட்டதுதான் ஐ.டி.பி.ஐ வங்கி. அதைச் சாதாரண வணிக வங்கியாக மாற்றியதே தவறு. அதன் மேல்மட்ட நிர்வாகக்குழு, திறம்படச் செயல்படாததால்தான் நஷ்டத்தில் விழுந்திருக்கிறது. தற்போது அதை முழுமையாகவே தனியார்மயமாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இது தவறான முடிவு.

அதேபோல எல்.ஐ.சி-யின் பங்குகளை விற்க முடிவெடுத்திருப்பதும் சிக்கலான முடிவு. எல்.ஐ.சி-யின் க்ளெய்ம் விகிதம் தனியார் நிறுவனங்களின் க்ளெய்ம் விகிதத்தைவிட அதிகம். தனியாருக்கு மாற்றப்பட்டால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மும்பை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்.ஐ.சி நிறுவனம் தானாக முன்வந்து க்ளெய்ம் செட்டில்மென்ட் தந்தது. அதுபோன்ற சூழல்களில்தான் அரசு நிறுவனங்களின் தேவை புரியும். தனியார் நிறுவனங்கள் வியாபார மனப்பான்மையுடன் செயல்படுமே தவிர, இதுபோல் சேவை மனப்பான்மையுடன் இயங்காது.

கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை இலவசமாகச் செய்துதர வேண்டியது அரசின் கடமை. அதேபோல கல்வித்துறையிலும் தனியாரின் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் அறிவிப்புகள் வந்துள்ளன. இது மக்கள்நல அரசு என்ற கான்செப்டுக்கு எதிரானது.

இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், வங்கித்துறை மற்றும் சிறு குறு தொழில்துறை எனப் பல துறைகள் ஏராளமான விஷயங்களை எதிர்பார்த்தன. ஆனால் அனைவருக்கும் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாகத்தான் இது அமைந்திருக்கிறது” என்கிறார் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.தாமஸ் ஃப்ராங்கோ.

சுதந்திர இந்தியாவில் இதுவரை 27 நிதி அமைச்சர்கள் பட்ஜெட் உரை நிகழ்த்தியிருக் கிறார்கள். 28வது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ‘பட்ஜெட் 2020’ உரைதான் மிகவும் நீளமானது. பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துவதில் காட்டிய அக்கறையை பட்ஜெட் தயாரிப்பிலும் காட்டியிருக்கலாம்.

பரிந்துரைகளுக்குக் கிடைத்த பலன்!

2020-21 பட்ஜெட்டில், விவசாயம், சுற்றுச்சூழல் தொடர்பாகச் செய்யவேண்டிய விஷயங்கள் குறித்து விவசாயிகளிடம் விவாதித்து, ‘பசுமை விகடன்’ பரிந்துரை ஒன்றைத் தயாரித்தது. இதற்காக, நவம்பர் மாதம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் பொருளாதார நிபுணர்கள், விவசாயிகள் சங்கத்தினர், இயற்கை விவசாயிகள், வேளாண் ஏற்றுமதியாளர்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அந்தப் பரிந்துரைகள் நிதியமைச்சரின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதோடு, கலந்துரையாடலில் பங்கேற்றவர்களுடன் இணைந்து விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தும் பரிந்துரைகளை வழங்கினார்.

பாதிக்கிணறும் தாண்டாத பட்ஜெட்!

அந்தப் பரிந்துரையில் உள்ள நான்கு விஷயங்கள் நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

* ‘60 சதவிகிதம் விவசாயிகள் மானாவரி விவசாய முறையில் இருப்பதால் அவர்களுக்குச் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கவேண்டும்’ என்று பரிந்துரையில் தெரிவித்திருந்தோம். அதையேற்று ‘ஒருங்கிணைந்த பண்ணைய முறை மானாவாரி நிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்’ என்று பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். அதேபோல், ‘விவசாய விளைபொருள்களுக்காக சேமிப்புக் கிடங்குகள் அமைக்கவேண்டும்’ என்ற பரிந்துரையையும் ஏற்று ‘விவசாயக் கிடங்குகள், குளிர் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் பிற சரக்குக் களஞ்சியங்களை மேப்பிங் மற்றும் ஜியோ டேக்கிங் செய்வதற்கான முயற்சியை நபார்டு மேற்கொள்ளும்’ என்றும் ‘கிராமம்தோறும் சேமிப்புக் கிடங்குகள் நிறுவப்படும்’ என்றும் பட்ஜெட்டில் அறிவித்திருக் கிறார் நிதியமைச்சர்.

‘ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தை அனைத்து கிராமங்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும். அதுமட்டுமன்றி, இந்தியாவில் பயன்பாட்டிலிருக்கும் அனைத்துவிதமான பாரம்பர்ய இயற்கை வேளாண் முறைகளையும் அரசாங்கம் ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும்’ என்று பரிந்துரைத்திருந்தோம். அதையும் ஏற்று, ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். மரபு சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

“பெண் விவசாயிகளுக்கும், பெண் விவசாயத் தொழிலாளர்க்கும் சிறப்புத் திட்டம் வேண்டும்” என்ற பரிந்துரையை ஏற்று, ‘தான்யலட்சுமி’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார் நிதியமைச்சர். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் விதைகளைச் சேமித்து விநியோகிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

பரிந்துரைகளுடன் நிதியமைச்சரைச் சந்தித்த குழுவில் இடம்பெற்ற ஏற்றுமதியாளர் கமாலுதீன், “விவசாயிகள், சூழலியலாளர்கள், பாசன நிபுணர்கள், விவசாய சங்கத்தினர், இயற்கை வேளாண் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புகளைத் தொகுத்து அளித்த பரிந்துரைகளை நிதியமைச்சர் பரிசீலித்து, தனது அறிவிப்பில் இணைத்துள்ளார். இவை நடைமுறைக்கு வரவேண்டும்” என்றார்.