Published:Updated:

``இது ஒன்று மட்டுமே வரவேற்கத்தக்கது!”- பட்ஜெட் குறித்து கனிமொழி

கனிமொழி
கனிமொழி

``ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி குறித்த அறிவிப்பு மட்டும்தான் மத்திய அரசின் பட்ஜெட்டில் வரவேற்கத்தக்கது” என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மத்தியரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க மற்றும் கூட்டணிக்கட்சிகள் சார்பில் தூத்துக்குடியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், கனிமொழி எம்.பி கலந்துகொண்டு முதலில் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ``மக்களுக்கு எதிரான திட்டங்களைத் தொடர்ந்து மத்திய பி.ஜே.பி அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.

கையெழுத்திடும் கனிமொழி
கையெழுத்திடும் கனிமொழி

இச்சட்டத் திருத்தத்துக்குப் பிறகு, நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாகவே போராடத் துவங்கியுள்ளனர். இந்த அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் அவர்கள் அரசுக்கு விரோதமானவர்கள் என்று முடிவு செய்து அவர்கள் மீது வழக்குகளும் பாய்கின்றன. இதே தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

போராடியவர்களை இந்தச் சட்டத்தின் மூலம் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லை என சொல்லிவிட முடியுமா? விவசாய நிலங்களைப் பாழ்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். அவர்களையும் நாட்டின் குடிமக்கள் இல்லை என அறிவித்து விடலாமா? இந்தச் சட்டமானது சல்லடை போன்றது. யார் யார் அந்த சல்லடையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களை மட்டும்தான் இந்த நாட்டின் குடிமக்களாக மத்திய அரசு அங்கீகரிக்கும்.

கனிமொழி
கனிமொழி

மற்றவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளைச் செய்யும். இந்தச் சட்டத்தின் மூலமாக அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இச்சட்டத் திருத்த மசோதாவினால் ஏற்படும் பாதிப்புகளைக் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிக்கும் விதமாக, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பும் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட், நாட்டின் எந்தப் பிரச்னைக்கான தீர்வையும் தராததாக அமைந்துள்ளது. கிராமப்புற பெண்களுக்கு தினசரி வேலை வழங்கும் விதமாக கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை திட்டத்துக்கு கிட்டத்தட்ட ரூ.10,000 கோடி நிதியானது இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டானது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைதான் மேலும் அதிகப்படுத்தும்.

கையெழுத்திடும் கனிமொழி
கையெழுத்திடும் கனிமொழி

மத்திய அரசின் பட்ஜெட்டிலேயே வரவேற்கத்தக்க விஷயம் என்னவென்றால், ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி குறித்த அறிவிப்பு மட்டும்தான். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி என்பது மிக முக்கியமானது. இன்னும் அதன் முடிவுகள், முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு