Published:Updated:

#LiveUpdates: ``தனிநபர் வருமான வரி விகிதம் குறைப்பு!'' - மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் #Budget2020

Budget2020
Budget2020

இன்று தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் தாக்கல் செய்யவுள்ள 2020-21-ம் நிதியாண்டு பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களின் தொகுப்பு...!

01 Feb 2020 1 PM

தனிநபர் வருமான வரி விகிதம் குறைப்புவருமான வரி குறைத்திருப்பதால், ஆண்டுக்கு ரூ.40,000 கோடி வருமான வரி இழப்பு ஏற்படும்.

``தனிநபர் வருமானத்தில் ரூ.5 லட்சம் வரையிலான வருமான வரியில் மாற்றமில்லை. ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் இனி 20% வருமான வரி கட்டத்தேவையில்லை. 10% கட்டினால் போதுமானது.

அதே போல ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 20% வருமான வரி கட்டத் தேவையில்லை. 15% கட்டினால் போதுமானது. 10 லட்சம் ரூபாய் முதல் 12.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 30% வரி கட்ட தேவையில்லை. இனி 20% வரி கட்டினால் போதுமானது.

அதே போல 12.5 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 30% வரி கட்டாமல், 25% வரி கட்டினால் போதும். 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30% வருமான வரி என்பதில் மாற்றம் இல்லை.

வருமான வரி குறைத்திருப்பதால், ஆண்டுக்கு 40,000 கோடி வருமான வரி இழப்பு ஏற்படும்.
நிர்மலா சீதாராமன்
01 Feb 2020 1 PM

பங்குச்சந்தைகள் கடும் சரிவு!

2020-21-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையை நாடளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அறிவித்து வரும் நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சந்தைகள் வேகமாகச் சரிந்து வருகின்றன. மதியம் 1:32 மணி அளவில் சென்செக்ஸ் 547 புள்ளிகள் சரிந்து, 40,192 என்கிற நிலையிலும், நிஃப்டி 164 புள்ளிகள் குறைந்து 11,776 என்கிற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.

01 Feb 2020 1 PM
  • ரூ.100 கோடி வரை ஆண்டு வர்த்தகம் செய்பவர்களுக்கு, லாபத்திலிருந்து 100% வர்த்தக வரி விலக்கு. இதுவரை ரூ.25 கோடி வரையிலான வர்த்தகத்துக்கு மட்டுமே வரி விலக்கு இருந்தது.

  • குறைந்த விலை வீடுகளுக்கான கடன்களுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு.

01 Feb 2020 1 PM

கார்ப்பரேட் வரியில் மாற்றமில்லை!

புதிதாகத் தொடங்கும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 15% மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு 22% வரி என்பதில் மாற்றமில்லை. உலகிலேயே பெரு நிறுவனங்களுக்கு மிகக் குறைவான வரி இந்தியாவில் மட்டும்தான் உள்ளது.

வருமான வரி செலுத்துவோருக்கு வருமான வரிச் சட்டத்தில் இருந்த 100 வரி கழிவுகள் மற்றும் விலக்குகளிலிருந்து 70 வரி விலக்குகள் நீக்கப்படுகின்றன. அதாவது ஃபுட்கார்டு அலவன்ஸ், கிஃப்ட் அலவன்ஸ் போன்ற வரி கழிவுகள் நீக்கப்படுகின்றன.

01 Feb 2020 1 PM

``புதிய பங்கு வெளியீட்டில் எல்.ஐ.சி!"

  • எல்.ஐ.சி நிறுவனத்திலுள்ள அரசுக்குச் சொந்தமான பங்குகளில் ஒருபகுதி புதிய பங்கு வெளியீட்டின் மூலம் பங்குச்சந்தையில் விற்கப்படும். அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கியின் பங்குகளும் விற்கப்படும். 2020-21-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 10 சதவிகிதமாக இருக்கும். நாட்டின் மூலதன செலவினங்கள் அதிகரிக்கப்படும். அரசின் செலவு 30.42 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. நிதிப்பற்றாக்குறை 3.5 சதவிகிதமாக இருக்கும் எனக் கணிப்பு.

  • கடன் பத்திரங்கள் மூலம் அரசுக்கு நிதி திரட்டப்படும். அரசு பத்திரங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களும் முதலீடு செய்யலாம்.

  • 2022-ல் ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்படும். இதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

  • பொதுத்துறைப் பங்குகள் விற்பனையின் மூலம் 2.1 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் என பட்ஜெட் உரையில் அறிவிப்பு.

01 Feb 2020 12 PM

காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு!

#LiveUpdates: ``தனிநபர் வருமான வரி விகிதம் குறைப்பு!'' - மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் #Budget2020

வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் இருந்துவந்த பிரச்னைகள் களையப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வங்கி டெபாசிட்களுக்கு ஒரு லட்சம் ரூபாயாக இருந்த காப்பீட்டுத் தொகை 5 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு. இதன் மூலமாக, வங்கி திவாலானால் வைப்புத் தொகையில் அதிகபட்சமாக 5 லட்சம் திருப்பித் தரப்படும்

01 Feb 2020 12 PM
  • மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள நகரங்களில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக 4,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் அனல்மின் நிலையங்கள் மூடப்படும்.

  • அரசு பணியாளர்கள் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். தொடக்க நிலை அரசு பணியாளர்களைத் தேர்வு செய்ய, தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்கப்படும்.

01 Feb 2020 12 PM

மத்திய அரசின் 5 அணிகலன்கள்!

மத்திய அரசின் 5 அணிகலன்களாக திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

``பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து"

நாட்டின் வளர்ச்சி, பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் சிறப்பாக இருப்பதாகவும், பிணியின்மைக்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மோடி கொண்டுவந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். `நோய் நீக்கம், செல்வம், விவசாயம், மகிழ்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றை அவர் 5 அணிகலன்களாக திருக்குறளை மேற்கோள் காட்டி குறிப்பிட்டார்.

01 Feb 2020 12 PM

இந்தியச் சுற்றுலாத் துறையில் இந்தியா கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் 65-வது இடத்திலிருந்து 34 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்கு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

`சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், இந்திய சுற்றுலாத் துறையின் கீழ் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க ஒப்புதல்!' -
நிர்மலா சீதாராமன்
”ஆதிச்சநல்லூரில் அகழாய்வுக்கான  முதற்கட்ட பணிகள் தொடக்கம்!”- தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி
01 Feb 2020 12 PM
  • `குழாய் வழியே சமையல் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். கூடுதலாக 16,200 கி.மீ தூரத்துக்கு எரிவாயு கொண்டு செல்லும் பாதைகள் அமைக்கப்படும்.

  • பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்போம், படிக்க வைப்போம் திட்டம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

  • மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலை நீக்கப்பட்டு, அதற்கான புதிய தொழில்நுட்பங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

  • பழங்குடியினர் நலனுக்காக 53,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக 85,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

  • ராஞ்சியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

01 Feb 2020 12 PM

`பாரத் நெட்'

Budget2020
Budget2020

`மின்சாரத்தைக் கணக்கிடும் மீட்டர்களை ஸ்மார்ட் மீட்டர்களாக, ப்ரீபெய்டு மீட்டர்களாக மாற்ற திட்டம். மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு 22,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. `பாரத் நெட்' மூலம் கிராமங்களுக்கு இணையம் வழங்கப்படும். இதன் மூலம் காவல்நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் தபால்நிலையங்கள் இணைக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு 6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாரத் நெட் மூலம் ஒரு லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளை இணைக்கத் திட்டம்!' - நிர்மலா சீதாராமன்

01 Feb 2020 12 PM

சென்னை- பெங்களூருக்கு இடைய வர்த்தக வழித்தடம்!

#LiveUpdates: ``தனிநபர் வருமான வரி விகிதம் குறைப்பு!'' - மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் #Budget2020

சென்னை- பெங்களூருக்கு இடைய வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும். ரயில்பாதையை யொட்டிய ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் சூரிய மின்னுற்பத்தி செய்யப்படும். 27,000 கி.மீ தூர ரயில்பாதை மின்மயமாக்கப்படும். டெல்லி-மும்பை அதி விரைவு சாலைப் பணியை 2023-ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டம்.

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய்கள் மூலம் குடி நீர் வழங்கும் திட்டத்துக்கு 3.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. நீர்ப் பற்றாக்குறையப் போக்க `ஜல் ஜீவன் திட்டம்' கொண்டுவரப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு 3.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

01 Feb 2020 12 PM

முதலீட்டுக்கு அனுமதி தரும் சிறப்புப் பிரிவு

`முதலீட்டாளர்கள் இந்தியாவில் சிரமமின்றி முதலீட்டைத் தொடங்க, முதலீட்டுக்கு அனுமதி தரும் சிறப்புப் பிரிவு உருவாக்கப்படும். மொபைல்போன் மற்றும் மின்னணுக் கருவிகள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். சிறு ஏற்றுமதியாளர்களுக்கு உதவ `நிர்விக்' என்கிற திட்டம் கொண்டுவரப்படும். தொழில்முனைவோர்தான் இந்தியாவின் பலம், அவர்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் உருவாக்கப்படும். தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கு 27,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும்' - நிர்மலா சீதாராமன்

01 Feb 2020 12 PM
`அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு 3.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு'
பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்
01 Feb 2020 11 AM

தனியாருடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகள்!

Budget2020
Budget2020

``புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும். கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேசியக் காவல்துறை, தேசிய தட அறிவியல் துறைக்குப் பல்கலைகழகம் அமைக்கப்படும்.

மாவட்டம் தோறும் தனியாருடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் அறிவிப்பு. திறன் மேம்பாட்டுப் பிரிவுக்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய தரப்பட்டியலில் இருக்கும் முதல் 100 கல்வி நிறுவனங்களுக்கு, ஆன்லைன் கல்வி திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும்!'

01 Feb 2020 11 AM

சுகாதாரத் துறைக்கு 69,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

`சுகாதாரத் துறைக்கு 69,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 56,045 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் வித்தியாசம் 12,955 கோடி ரூபாய். தற்போது நடைமுறையில் இருக்கும் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் மூலம், மேலும் 112 மாவட்டங்களில் சிகிச்சைகள் வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்துக்கு 12,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை இந்தியாவிலிருந்து முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" - நிர்மலா சீதாராமன்

01 Feb 2020 11 AM

விவசாயத் துறைக்கு 2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!

#LiveUpdates: ``தனிநபர் வருமான வரி விகிதம் குறைப்பு!'' - மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் #Budget2020

``2025-ம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்திக்கு இலக்கு. 2025-ம் ஆண்டுக்குள் கால்நடைகளைத் தாக்கும் கால், வாய் தொடர்பான நோய்களைத் தடுக்க இலக்கு. விவசாயத் துறைக்கு 2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" - நிர்மலா சீதாராமன்

01 Feb 2020 11 AM

`தான்யலட்சுமி' திட்டம்!

`கிராமங்கள் தோறும் விளைப்பொருட்களை சேமிக்க ஏதுவாக, சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். கிராமப் புறங்களில் உள்ள பெண்களின் வளர்ச்சிக்காக 'தான்யலட்சுமி' என்கிற திட்டம் தொடங்கப்படும். விதைகளைச் சேமித்து விநியோகிக்கும் செயல்பாடுகளில் கிராமப் புறப் பெண்கள் ஈடுபடுவர். பால், பழங்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்ல தனி ரயில்கள் இயக்கப்படும். பெண்களுக்கான திட்டங்களுக்கு 28,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு'

'கிருஷி உடான்' என்கிற புதிய திட்டம் மூலம் தேசிய, சர்வதேச விமானப் போக்குவரத்து மூலம் விவசாயப் பொருட்கள் கொண்டு செல்லப்படும். விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடனுதவி வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதே போல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும்.
நிர்மலா சீதாராமன்
01 Feb 2020 11 AM

'பூமி திருத்தி உண்'

விவசாயம் சார்ந்த திட்டங்களை அறிவித்துக்கொண்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன். இதற்கு இடையில் ஆத்திச்சூடியிலிருந்து 'பூமி திருத்தி உண்' என்கிற 82-வது அடியை மேற்கோள் காட்டியிருக்கிறார் அவர். அதன் பொருள், 'விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்' என்பதாகும்.

01 Feb 2020 11 AM

விவசாயத் துறையை மேம்படுத்த 16 அம்சத் திட்டம்!

`இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபியில் 52 சதவிகிதத்திலிருந்து 48 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மொத்தமாக 40 கோடி வர்த்தகர்கள் ஜி.டி.பியில் பதிவு செய்திருக்கிறார்கள். நேரடி மானியத் திட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவியுள்ளது. தொடர்ந்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கம் மிகவும் திவிரமாக இருக்கிறது. விவசாயத் துறையை மேம்படுத்த 16 அம்சம் கொண்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்' - நிர்மலா சீதாராமன்

01 Feb 2020 11 AM

காஷ்மீரி மொழியில் பேசிய நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் உரையில் காஷ்மீரி மொழியில் பேசி, அதற்கான விளக்கத்தை இந்தி மொழியில் தெரிவித்தார் நிர்மலா சீதாராமன். இந்த வரிகள் சாகித்திய அகாடமி விருது பெற்ற காஷ்மீரி கவிதையிலிருந்து எடுக்கப்பட்டதாக பட்ஜெட் உரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

`2006-2016-ம் ஆண்டுக்குள், இந்திய மக்களில் 27.10 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு மேல் வந்திருக்கிறார்கள். ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்திய குடும்பங்களில் 4% சேமிப்பு அதிகரித்திருத்திருக்கிறது' - நிர்மலா சீதாராமன்

01 Feb 2020 11 AM

ஜி.எஸ்.டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சீர்திருத்த நடவடிக்கை!

#LiveUpdates: ``தனிநபர் வருமான வரி விகிதம் குறைப்பு!'' - மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் #Budget2020

`ஜி.எஸ்.டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சீர்திருத்த நடவடிக்கை ஆகும். இதனால் நாட்டில் 60 லட்சம் பேர் புதிதாக வரி செலுத்தியுள்ளனர். தற்போதைய நிலையில் ஜி.எஸ்.டி பல கட்டங்களீல் சீர்திருத்தங்களைக் கண்டு வருகிறது. தொடர்ந்து இதில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி விதிமுறைகளானது வருகிற ஏப்ரல் 2020-லிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

#LiveUpdates: ``தனிநபர் வருமான வரி விகிதம் குறைப்பு!'' - மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் #Budget2020

இந்தியப் பொருளாதாரத்துக்கான அடித்தளம் மிகவும் வலுவாகவே உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. துடிப்பான பொருளாதாரத்தை உருவாக்குவதே எங்களின் இலக்கு' - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
01 Feb 2020 11 AM
இந்தியப் பொருளாதாரத்துக்கான அடித்தளம் மிகவும் வலுவாகவே உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. துடிப்பான பொருளாதாரத்தை உருவாக்குவதே எங்களின் இலக்கு. இந்த பட்ஜெட் மக்களின் வருமானம் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கிலும், அவர்களின் நுகர்வுத் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்த பட்ஜெட் இருக்கும்.
நிர்மலா சீதாராமன்
01 Feb 2020 11 AM
பட்ஜெட்
பட்ஜெட்

2020-21-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்கத் தொடங்கினார்.

01 Feb 2020 10 AM

ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை!

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட் 2020-21 -க்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது பட்ஜெட் உரையை இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறார் நிர்மலா சீதாராமன்.

01 Feb 2020 10 AM

நாடாளுமன்றம் வந்த நிர்மலா சீதாராமன் குடும்பத்தினர்!

நிர்மலா சீதாராமன் குடும்பத்தினர்
நிர்மலா சீதாராமன் குடும்பத்தினர்

இன்னும் சற்று நேரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட். இந்த பட்ஜெட் தாக்கல் நிகழ்வை நேரில் காண்பதற்காக நிர்மலா சீதாராமனின் குடும்பத்தினர் நாடாளுமன்றம் வந்துள்ளனர்.

01 Feb 2020 10 AM

மோடி, அமித் ஷா வருகை!

பட்ஜெட்டை யொட்டி அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கும். அதன் பின்னர் 2020-21 -ம் ஆண்டுக்கான பட்ஜெட், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

01 Feb 2020 10 AM

பட்ஜெட் நகல்கள்!

பட்ஜெட் நகல்கள்!
பட்ஜெட் நகல்கள்!

நாடாளுமன்றத்தில் இன்று தனது இரண்டாவது பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள பட்ஜெட் நகல்கள் பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் எடுத்து வரப்பட்டது.

01 Feb 2020 10 AM
``பல தரப்பிலிருந்து பரிந்துரைகளைப் பெற்றுள்ளோம். அனைவருக்குமான பட்ஜெட்டாக இது இருக்க அரசு எல்லா நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது"
நிர்மலா சீதாராமன்
01 Feb 2020 10 AM

உயர ஆரம்பித்த பங்குச்சந்தைகள்!

பங்குச்சந்தை
பங்குச்சந்தை

பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சரிவுடன் தொடங்கிய மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் தற்போது ஏற ஆரம்பித்திருக்கின்றன. சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்து, 40,796 என்கிற நிலையிலும் நிஃப்டி 13 புள்ளிகள் உயர்ந்து 11,975 என்கிற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய பட்ஜெட்டில் அனைத்துத் துறை சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

01 Feb 2020 10 AM

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன்!

குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன்
குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் தாக்கல் செய்ய நிதிநிலை அறிக்கையுடன் நாடாளுமன்றம் வந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். காலை 11 மணி அளவில் 2020-21-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் ஆக இருக்கிறது. முன்னதாக அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

01 Feb 2020 9 AM

கடந்த 10 ஆண்டுகளின் பட்ஜெட் தொகையும், நிதி பற்றாக் குறையும்!

பட்ஜெட் 2020: கடந்த 10 ஆண்டுகளின் பட்ஜெட் தொகையும், நிதி பற்றாக் குறையும்! #VikatanInfographics
01 Feb 2020 9 AM

நாடாளுமன்றம் புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்!

இன்று, மத்திய பட்ஜெட்டைத் தாக்கல்செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு மத்திய நிதி அமைச்சகத்துக்கு வந்தார். அங்கு நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பிறகு, அவர் நாடாளுமன்றம் புறப்பட்டார். அவரது கையில் சிவப்பு நிற பையில் நிதிநிலை அறிக்கை இருந்தது.

01 Feb 2020 9 AM

பட்ஜெட் 2020-21: சிறப்பு பூஜை!

அனுராக் தாக்கூர்
அனுராக் தாக்கூர்

இன்று, நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார். நாடு, பொருளாதாரரீதியாகப் பல சிக்கல்களைச் சந்தித்துவரும் சூழலில், இந்த பட்ஜெட் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. நிர்மலா சீதாராமன், தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முன்னதாக, தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட அவர், மத்திய நிதி அமைச்சகத்துக்கு வந்தார். அங்கிருந்து நாடாளுமன்றம் செல்வார்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், இன்று தனது வீட்டில் நடந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனுராக், ``நாடு முழுவதிலும் இருந்து பட்ஜெட் தொடர்பாக கருத்துகள் பெறப்பட்டுள்ளன. அனைத்து மக்களுக்குமான பட்ஜெட்டாக இது இருக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு