Published:Updated:

Union Budget 2021: `விவசாயத்துக்கான பட்ஜெட்டாக இது இருக்கணும்!' - மதுரை மக்களின் எதிர்பார்ப்புகள்

விவசாயம் பட்ஜெட்
விவசாயம் பட்ஜெட்

விதிமுறைகளை மீறி தொழிற்சாலைகளுக்கு எடுக்கிற தண்ணீரை விவசாயத்துக்குத் திருப்பிவிட்டாலே விவசாயம் செழிக்கும்.

மத்திய பட்ஜெட் 2021 குறித்து மதுரையைச் சேர்ந்த பல்வேறு துறையினர் தங்கள் எதிர்பார்ப்புகளை இங்கே பகிர்ந்து கொள்கின்றனர்.
'டெம்பிள்சிட்டி' குமார்
'டெம்பிள்சிட்டி' குமார்

மதுரை மாவட்ட ஹோட்டல் சங்க தலைவரான `டெம்பிள்சிட்டி' குமார், ``நாட்டில் வியாபாரம் பெருக வேண்டுமென்றால் மக்களிடம் பணப்புழக்கம் ஏற்படவேண்டும். அதற்கு அதிகமான வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்கவேண்டும். நாட்டில் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பை அளிப்பது ஹோட்டல் தொழில்தான். ஆனால், சமீபகாலமாக கொரோனா பேரிடர் ஒருபக்கம் என்றால், உணவுப் பொருள்களின் விலை ஏறிக்கொண்டே போகிறது. இதனால் ஹோட்டல் நடத்துபவர் மட்டுமல்ல, பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதைக் கட்டுப்பட்டுத்த பட்ஜெட்டில் வழி செய்யவேண்டும். அதுபோல் வழிபாட்டு தலங்களைத் திறப்பது உட்பட கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தவேண்டும். கட்டுமான திட்டங்களை அதிகமாக்க வேண்டும்" என்றார்.

டயர் விற்பனை நிலைய மேலாளரான காளமேகம், "வெளிநாட்டிலிருந்து டயர் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது நல்ல விஷயம் என்றாலும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவில்லை. நாட்டில் ஐந்து நிறுவனங்கள்தான் டயர் உற்பத்தி செய்கிறது. அதனால், விலையும் அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதற்கு 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. இது சாமானிய மக்களை அதிகம் பாதிக்கிறது. இன்றைக்கு கொரோனா பேரிடரால் அனைவரும் வாகனங்கள் வாங்க விரும்புகிறார்கள். ஆனால், சர்வீஸின்போது டயர் உட்பட அக்ஸசரீஸ் விலை அதிகமாக உள்ளதால் வாகனம் வாங்கியவர்கள் நொந்துபோகிறார்கள்.

காளமேகம்
காளமேகம்

பெட்ரோல் விலையையும் குறைக்கவேண்டும். இன்னொரு பக்கம் கொரோனா கட்டுப்பாட்டால் வாடகை வாகனங்கள் அதிகமாக இயங்காமல் உள்ளது. இதையெல்லாம் சரி செய்யும் வகையில் பட்ஜெட்டில் வாகனத் தொழில் வளரும் வகையில் அறிவிப்புகள் வரவேண்டும்" என்றார்.

பெட்ரோலுக்கு GST, வருமான வரிச் சலுகை... திருச்சி மக்களின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?

சிவரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம், "ஒரு ஊருல உள்ள விவசாய உற்பத்தி பொருள்களை இன்னொரு மாநிலத்துக்குக் கொண்டு போய் விக்கலாம்னு சொல்ற மத்திய அரசு, முதல்ல தண்ணிய தேசியமயமாக்க இந்த பட்ஜெட்ல அறிவிக்கட்டும். அதைச் செய்தாலே விவசாயிகளுக்கு பிரச்னை இருக்காது.

விவசாயி ராமலிங்கம்
விவசாயி ராமலிங்கம்

விவசாயிகளுக்கு பல திட்டங்கள் கொண்டு வந்ததாகச் சொல்றாங்க, ஆனால் அதெல்லாம் முழுமையாக வந்து சேரல. விதிகளை மீறி தொழிற்சாலைகளுக்கு எடுக்குற தண்ணீரை விவசாயத்துக்கு திருப்பிவிட்டாலே விவசாயம் செழிக்கும். விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகள் கபளீகரம் செஞ்சிடுமோங்கிற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது. அப்படி இல்லேன்னு பட்ஜெட்ல திட்டம் அறிவிக்கட்டும். அதிலும் இந்த கொரோனா காலத்துல பெரிய அளவு பாதிக்கப்பட்டது விவசாயிகள்தாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு