Published:Updated:

எல்.ஐ.சி ஐ.பி.ஓ... சரியா, தவறா?

எல்.ஐ.சி
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி

ஓர் அலசல் பார்வை

எல்.ஐ.சி ஐ.பி.ஓ... சரியா, தவறா?

ஓர் அலசல் பார்வை

Published:Updated:
எல்.ஐ.சி
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பு விமர்சனத்துக்கு உள்ளானதோ இல்லையோ, `எல்.ஐ.சி.யில் அரசுக்குச் சொந்தமான பங்கில் ஒரு பகுதி ஐ.பி.ஓ மூலம் தனியாருக்கு விற்கப்படும்’ என்ற குறிப்பு விமர்சனத்துக்குள்ளானது.

`அரசின் வசமிருக்கும் எல்.ஐ.சி-யின் மொத்தப் பங்குகளில் 10 சதவிகிதத்துக்குள் மட்டுமே ஐ.பி.ஓ மூலம் விற்கப்படும். அப்படி விற்கப்பட்டாலும், எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் அனைவருக்கும் அரசின் உத்தரவாதம் தரப்படும்’ என்று அரசுத் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் அரசின் உத்தரவை யாரும் சரியாகப் புரிந்துகொண்டதுபோல் தெரியவில்லை. இந்த நிலையில், எல்.ஐ.சி பங்கு விற்பனையிலிருக்கும் சாதக பாதகங்களைத் தெரிந்துகொள்ள பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸைத் தொடர்புகொண்டோம்.

ரெஜி தாமஸ்,  டி.தாமஸ் ஃப்ராங்கோ
ரெஜி தாமஸ், டி.தாமஸ் ஃப்ராங்கோ

முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு!

“எல்.ஐ.சி-யில் இருக்கும் அரசின் பங்குகளில் குறிப்பிட்ட அளவை விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது முற்றிலும் வரவேற்கத்தக்கதே. ஆயுள் காப்பீட்டுத்துறையில் இயங்கும் ஒரே அரசு நிறுவனம் எல்.ஐ.சி மட்டுமே. தனியார்துறையில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தாலும், இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயுள் காப்பீட்டு வருவாயில் 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட சந்தை எல்.ஐ.சி-யிடம்தான் இருக்கிறது. தவிர, காப்பீட்டு நிறுவனங்களிலேயே கடன் இல்லாத, அதிக சொத்து மதிப்புகொண்ட ஒரே நிறுவனம் இதுதான். சந்தையில் பட்டியலிட்ட பிறகு இந்தியாவின் மதிப்புமிக்க முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக எல்.ஐ.சி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்.ஐ.சி பொன் முட்டையிடும் வாத்து. பேராசைப்பட்டு அந்த வாத்தைக் கொல்லப் பார்க்கிறார்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம்பிக்கைக்குரிய நிறுவனத்தின் பங்கு

இன்றும் இந்திய கிராமங்களில் மற்ற நிறுவனங்கள் அளிக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைவிட, எல்.ஐ.சி அளிக்கும் பாலிசிகள்தான் மக்களால் அதிக அளவில் விரும்பப்படுகின்றன. அந்த அளவுக்கு மக்களுக்கு எல்.ஐ.சி மீது நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. இப்படியொரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்போது, இதுவரை முதலீடு செய்யாதவர்கள்கூட பங்குச் சந்தைக்குள் வர வாய்ப்பிருக்கிறது.

எல்.ஐ.சி  ஐ.பி.ஓ... சரியா, தவறா?

எல்.ஐ.சி பங்குகளில் முதலீடு செய்பவர்கள் குறுகியகாலத்தில் அல்லாமல், நீண்டகால நோக்கில் முதலீடு செய்வது நல்லது. ஏனெனில் இது போன்ற பங்குகள் கிடைப்பது மிகவும் அரிது. அதுமட்டுமல்லாமல், எல்.ஐ.சி போன்ற மிகப்பெரிய மற்றும் வலுவானதொரு நிறுவனத்தில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத்துறையின் வருங்கால வளர்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.

எல்.ஐ.சி நிறுவனத்தின் எத்தனை சதவிகிதப் பங்குகள் ஐ.பி.ஓ மூலம் வெளியிடப்படும் என்பது குறித்தும், எப்போது வெளியிடப்படும் என்பது குறித்தும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதன் 100% பங்கிலிருந்து 10-15% பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப் படலாம்; வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் இது குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்பதும் என் கணிப்பு” என்றவர், எல்.ஐ.சி பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதில் அந்த நிறுவனத்தின் முன்னிருக்கும் சவால்கள் என்னென்ன என்பதை விளக்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காத்திருக்கும் சவால்கள்!

“பங்குச் சந்தையில் ஒரு நிறுவனம் பட்டியலிடப்பட்டால், பல நடைமுறைகளை அந்த நிறுவனம் பின்பற்ற வேண்டியிருக்கும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை தனது நிறுவனத்தின் லாப நஷ்டக் கணக்கை செபியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் இதுவரை வெளியிடப்படாத பல தகவல்களை எல்.ஐ.சி வெளியிட வேண்டியிருக்கும். சிறு முதலீட்டாளர்கள், பங்குத் தரகர்கள் மற்றும் பங்குச் சந்தை நிபுணர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதனால் தற்போதைக்கு நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆபத்பாந்தவனாக இருக்கும் எல்.ஐ.சி நிறுவனம், தனது நிலைப்பாட்டை பங்கு வெளியீட்டுக்குப் பிறகும் தொடர முடியுமா, அப்படித் தொடர தனியார் பங்கு முதலீட்டாளர்கள் ஒப்புக் கொள்வார்களா என்பது மிகப் பெரிய கேள்வி. என்றாலும், இந்தப் பங்கு வெளியீடு அரசுக்கும் சிறு முதலீட்டாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்” என்றார்.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

ரெஜி தாமஸின் கருத்து இப்படி இருந்தாலும், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.தாமஸ் ஃப்ராங்கோவின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது. அவர் நம்மிடம் சொன்னதாவது...

அரசின் ஆபத்பாந்தவன்!

“இந்திய அரசு பெரிய கட்டுமான திட்டங்களைக் கொண்டுவரும்போதும், நெருக்கடியான பொருளாதார நிலை ஏற்படும்போதும் அதிலிருந்து விடுபட முதலில் உதவிக்கு வருவது எல்.ஐ.சிதான். கடந்த காலத்தில் இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. ஐ.டி.பி.ஐ வங்கி கடனில் மூழ்க இருந்தபோதுகூட எல்.ஐ.சிதான் அதைக் காப்பாற்றியது. எல்.ஐ.சியிடம் ஐ.டி.பி.ஐ வங்கியின் 7 - 7.5% பங்குகள் இருந்தபோதும், அதன் 51 சதவிகிதத்தை வாங்க ரூ.10,000 கோடி முதல் ரூ.13,000 கோடி வரை முதலீடு செய்தது.

ஐ.டி.பி.ஐ வங்கி என்று கிடையாது; பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு என்று வந்தால், எல்.ஐ.சி அதில் அதிக அளவில் முதலீடு செய்யும். இதில் ஓ.என்.ஜி.சி போன்ற நிறுவனங்களும் அடக்கம். அரசுப் பத்திரங்களிலும், பங்குச் சந்தைகளிலும் எல்.ஐ.சி வருடத்துக்குச் சராசரியாக ரூ.55,000 கோடி முதல் ரூ.65,000 கோடி வரை முதலீடுகளைச் செய்கிறது.

2009-ம் ஆண்டிலிருந்து வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க அரசு, பொதுத்துறை நிறுவனங்களை விற்றபோதெல்லாம் எல்.ஐ.சிதான் அதை வாங்க முன்வரும் முதல் நிறுவனமாக இருந்தது. 2009-லிருந்து 2012-ம் ஆண்டு வரை பொதுத்துறையின் பங்குகளை விற்றதில் அரசு 9 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு எல்.ஐ.சியின் பங்கு. ஓ.என்.ஜி.சி-ன் பங்குகளை விற்கும் முடிவு பெரிய தோல்வியில் முடிய இருந்தது. அதை எல்.ஐ.சியே வெற்றியாக மாற்றியது. இப்படி ஆபத்பாந்தவனாகக் காப்பாற்றி வந்த எல்.ஐ.சியை விற்பது சரியான அணுகுமுறை கிடையாது’’ என்றார்.

ஊழியர் சங்கங்களின் எதிர்ப்பு!

``வெறும் ரூ.5 கோடி முதலீட்டைக் கொண்டு 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்.ஐ.சி., தற்போது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2.5 கோடி புது பாலிசிகளை ஈட்டும் நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது. இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட்டால், எந்தக் காலத்திலும் சரிவைச் சந்திக்காத நிறுவனமாக இருப்பது எல்.ஐ.சி மட்டும்தான். இதன் பங்கை விற்கும் அளவுக்கு என்ன தேவை வந்துவிட்டது... `பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், தனியாரிடம் விற்றால் லாபம் கிடைக்கும்’ என்று சொல்லி, தனியார்மயத்துக்குத் தாவுகிறது அரசு. `மக்கள் வரிப் பணம் வீணாகிறது’ என்று சொல்லி, அரசு நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கிறது மத்திய அரசு. இவற்றில் எந்தக் குற்றச் சாட்டையாவது மறுக்க முடியுமா... எல்.ஐ.சி என்பது பொன்முட்டையிடும் வாத்து. பேராசைப்பட்டு அந்த வாத்தைக் கொல்லப் பார்க்கிறார்கள்’’ என்று கொதித்துப் பேசுகிறார்கள் எல்.ஐ.சி ஊழியர்கள்.

எல்.ஐ.சியின் ஐ.பி.ஓ-வுக்கு இப்படிப் பல வழிகளில் எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புகளும் உருவாகியிருக்கின்றன. இருந்தாலும் எல்.ஐ.சி ஐ.பி.ஓ எப்போதும் வரும், அது எந்த அளவுக்கு லாபம் சம்பாதித்துத் தரும் என்பதை அறிய ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism