Published:Updated:

`பட்ஜெட் அறிவிப்புகள் மக்களுக்கு உரிய பயன்தராமல் போவது ஏன்?' - விளக்கும் நிதி ஆலோசகர் சிவக்குமார்

"ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டில் அறிவித்த விஷயங்கள், கடைநிலையில் உள்ளவர்களுக்கும் சரியாகச் சென்றடைந்துள்ளதா என்று ஆராய்வதே கிடையாது."

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றத்தைக் கண்டது. இந்த நிலையில், மார்ச் மாதம் அமலான கொரோனா பொதுமுடக்கத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு துறைகளும் ஆட்டம் கண்ட நிலையில், பெரிதும் அடிவாங்கிய தொழில்துறை மிகவும் நலிவடைந்துள்ளது. அதிலும், சிறு, குறு தொழில்முனைவோரின் நிலைமை இன்னும் மோசம்.

பட்ஜெட்
பட்ஜெட்

தற்போதுவரை இயல்புநிலைக்குத் திரும்ப முடியாதபடி அச்சுறுத்தி வருகிறது கொரோனா. இதனுடன், `மேற்கொண்டு தொழில் நிறுவனத்தை நடத்த முடியுமா?' என்ற கவலையுடன் லட்சக்கணக்கான தொழில் முனைவோர் தவித்துக் கொண்டிருக் கின்றனர். தொழில்துறையினர் உட்பட அனைத்து துறையினரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து ஆவலோடு காத்திருக்கின்றனர்.

பட்ஜெட் அறிவிப்பில், தொழில்துறையினருக்கான சலுகைகள், அறிவிப்புகள் எவையெல்லாம் இருக்கக்கூடும், எத்தகைய அறிவிப்புகள் தொழில்துறையினருக்கு நம்பிக்கையளிக்கும் என்பது குறித்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருக்கும் என்பன பற்றி சிவக்குமாரிடம் பேசினோம்.

தொழில்துறை
தொழில்துறை

"நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டும். அந்தத் தொழில்முனைவோர் 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வங்கிக் கடனுக்காகச் சென்றால், அவர்களிடம் செக்யூரிட்டி இல்லாதபட்சத்தில் அலைக்கழிக்கப் படுகின்றனர். அல்லது கடன் தர மறுக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வங்கிகளின் இதுபோன்ற அலட்சியப் போக்கினாலும் கொரோனா பாதிப்பாலும் கடந்த ஓராண்டில் மட்டும் பல நூறு தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. 100 லட்சத்துக்கு உட்பட்ட தொழில் கடன்களும் தொழில் மூலதன கடன்களும் டேர்ம் லோனும் எவ்வித செக்யூரிட்டியும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும். அப்படிச் செய்தால், முடங்கிக் கிடக்கும் இத்தகைய தொழில்துறைக்கு புத்துயிர் கிடைக்கும்.

சிவக்குமார்
சிவக்குமார்

பட்ஜெட் செலவினங்களுக்கு உண்டான பற்றாக்குறை ஆண்டுதோறும் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், மத்திய அரசின் கணிப்பை மீறி, 65,000 - 75,000 கோடியாக இந்த ஆண்டு பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்ப்படுகிறது. நிதி சிக்கல்களைச் சரிகட்ட, மக்கள்மீது வரிச்சுமை திணிப்பதை மத்திய அரசு செய்யவே கூடாது.

குருவி தலையில் பனங்காய் வைப்பதுபோல, ஏற்கெனவே சிரமத்தில் இருக்கும் சாமான்ய மக்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்மீது மீண்டும் வரிச்சுமையை அதிகரிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அவர்கள் மீண்டும் எழவே முடியாமல் முடங்கிப் போய்விடுவார்கள். அதற்கு மாற்றாக, வெளிநாட்டு கடன் முறைகளை முறைப்படுத்துவது உட்பட ஆக்கபூர்வமான வழிகளைத் தேட வேண்டும்.

தொழில்துறை
தொழில்துறை

அனைத்து சிறு, குறு, நடுத்தரத் தொழில் முனைவோர்களும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் தடையில்லா அனுமதிச் சான்றிதழ் பெறுவது பெரும் சவாலாக இருக்கிறது. உற்பத்திக் கூடத்தின் வாடகையில், 20 மடங்கு தொகையை மாசுக்கட்டுப்பாடு வாரியம் கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இதனால், தமிழகத்திலேயே பல நூறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதுபோன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணும் அறிவிப்புகளும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, இந்தத் தொழில்துறையினர் டிரேட் லைசென்ஸ், ஃபேக்டரி லைசென்ஸ், ஃபயர் லைசென்ஸ் உட்பட ஏகப்பட்ட அனுமதிச் சான்றிதழ்கள் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

'சிங்கிள் விண்டோ க்ளியரன்ஸ்' எனச் சொன்னாலும்கூட, அதன்படி நடைமுறையில் எதுவும் நடப்பதில்லை. ஏற்கெனவே மூலப்பொருள்களின் விலையும் 30 - 40 சதவிகிதம் எகிறிக் கிடக்கிறது. விற்பனை விலையை உயர்த்தினாலும், மக்கள் வாங்க தயங்கும் நிலையில் இருக்கின்றனர். இதனால், மார்கெட்டில் நுகர்வோரின் டிமாண்ட் மற்றும் சப்ளை அதிகரிக்கவில்லை. அதற்கு முன்னேற்றம் தரும் திட்டங்களில் அரசு இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்காக அரசும் வங்கிகளும் சலுகைகளை வழங்க வேண்டும். இதையெல்லாம் செய்யாவிட்டால், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் மீள்வது மிகவும் கடினம்.

தொழில்துறை
தொழில்துறை

தொழில்துறையினருக்கான அறிவிப்புகள் உட்பட பொதுவாகவே கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட பெரும்பாலான அறிவிப்பு களையும் மத்திய அரசு சரியாக நிறைவேற்றவில்லை, செயல்படுத்தவும் இல்லை. அதேபோல, கடந்த ஆண்டு கொரோனா சூழலை எதிர்கொள்ள 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ் தொழில்துறையினரின் வளர்ச்சிக்காக நிதியமைச்சர் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அவை தொழில் முனைவோருக்கு உரிய பலன் தரவில்லை. அப்போது அளித்த வாக்குறுதிகளும் முறையாக நிறைவேற்றவில்லை.

ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டில் அறிவித்த விஷயங்கள், கடைநிலையில் உள்ளவர்களுக்கும் சரியாகச் சென்றடைந்துள்ளதா என்று ஆராய்வதே கிடையாது. இதுதான் அறிவிப்புக்கும் நடைமுறை தவற்றுக்கும் காரணமாக அமைகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்தாலே, பட்ஜெட் அறிவிப்புகள் மக்களுக்கும் அனைத்துத் துறையினருக்கும் மகிழ்ச்சியைத் தரும்" என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு