Published:Updated:

முன்னோடி விவசாயிகளின் கோரிக்கை... பட்ஜெட்டில் அறிவித்த நிதியமைச்சர்!

1.60 லட்சம் கோடி ரூபாய், விவசாயம், நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் அது சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரீமியம் ஸ்டோரி

‘பூமி திருத்தி உண்’ - ஒளவையாரின் ஆத்திசூடியை மேற்கோள்காட்டிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோதே, இந்த பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அறிவிப்புகள் இருக்கும் எனத் தெரிந்தது. அதுபோலவே, ‘விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு 16 அம்ச திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன், `விவசாயத் துறை மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவே பட்ஜெட்டில் 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் 1.60 லட்சம் கோடி ரூபாய், விவசாயம், நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் அது சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.23 லட்சம் கோடி ரூபாய், கிராம மேம்பாட்டுக்காகவும் பஞ்சாயத்துராஜ் செயல்பாடுகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். குறிப்பாக, தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காணவும் மீன்வளத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் வருவாயை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் அரசின் உறுதிமொழி நிறைவேற்றப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசிடம் சேர்க்க வேண்டும் எனத் திட்டம் தீட்டியது பசுமை விகடன். இதற்காக, ‘மத்திய பட்ஜெட் 2020-21 வேளாண்மை வளர்ச்சிக்கான முன் ஆலோசனைக் கூட்டம்’ 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நடத்தப்பட்டது. முன்னோடி விவசாயிகள், பொருளாதார நிபுணர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தனர். கடந்த ஜனவரி மாதம் சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை விவசாயிகள், பொருளியல் நிபுணர்களுடன் சந்தித்தார் ஆனந்த விகடன் ஆசிரியரும் விகடன் குழும நிர்வாக இயக்குநருமான பா.சீனிவாசன். அனைவரிடமும் கலந்துரையாடிய அமைச்சர், ‘‘நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்தையும் பரிசீலித்து, வாய்ப்புள்ளவற்றையெல்லாம் நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்’’ என்று அக்கறையுடன் சொன்னார். அவர் சொன்னதுபோலவே அப்போது வழங்கப்பட்ட பரிந்துரைகள் சிலவற்றை பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்மலா சீதாராமன் - பா.சீனிவாசன்
நிர்மலா சீதாராமன் - பா.சீனிவாசன்

‘‘மத்திய அரசின் பட்ஜெட்டில் ‘ஜீரோ பட்ஜெட் விவசாயம்போல் மற்ற பாரம்பர்ய விவசாய முறைகளும் ஊக்கப்படுத்தப்படும். மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணை அமைக்கப்படும். கிராமப் பெண்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும்விதமாக ‘தான்ய லஷ்மி’ என்ற பெயரில் விதை பெருக்கத் திட்டம், சேமிப்புக் கிடங்குகள், விவசாய உற்பத்தி பொருள்களைப் பாதுகாக்கும் கிடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்ற அறிவிப்புகள் நாங்கள் வழங்கிய பரிந்துரைகளாகும். 30-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளைக் கொடுத்திருந்தோம். அதில் நான்கு பரிந்துரைகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதை வரவேற்கிறோம். மீதியுள்ளவற்றையும் நிதி அமைச்சர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார் ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சி.வையாபுரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு