Published:Updated:

தமிழ்நாடு பட்ஜெட் 2020-21... பசுமை விகடன் கொடுத்த முக்கியமான  பரிந்துரைகள்!

பசுமை
பசுமை

புதிதாக இயற்கை வழி வேளாண்மை முறைக்குத் திரும்புபவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், அந்த பட்ஜெட் யாரோ ஒருவர் அறையில் உட்கார்ந்துகொண்டு தயாரிக்கும்படியாகவோ, கடந்த முறை தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் மற்றொரு வடிவமாகவோ இருக்கும். அப்படியில்லாமல் களத்தில் செயல்படுபவர்கள் எதிர்பார்க்கும் கோரிக்கைகளை பட்ஜெட்டாகக் கொண்டு வந்தால் எப்படி இருக்கும் என்ற தனித்தவொரு முயற்சியாக இறங்கியது பசுமை விகடன்.

அப்படிக் களத்தில் செயல்படும் விவசாயப் பிரதிநிதிகள், விவசாயிகள், பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் அளித்த கோரிக்கைகளின் தொகுப்பு இங்கே இடம்பெறுகின்றன. இதை வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதில் இடம்பெற்றிருக்கும் பட்ஜெட்டுக்கான அம்சங்கள் மாநில நிதியமைச்சருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

விவசாயம்
விவசாயம்

பசுமை விகடன் - தமிழக பட்ஜெட்டுக்கான வேளாண் பரிந்துரைகள்

மாநில அரசின் 2020-21-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய வேளாண் பரிந்துரைகள் குறித்து தமிழக விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகள், பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்புகள், ஆலோசனைகளை இதில் தொகுத்துள்ளோம்.

  • இயற்கை வழி வேளாண்மையை நடைமுறைப்படுத்த அரசுச் செயலர், பொறுப்பாளர் அளவில் அதிகாரமுடைய, இயற்கை உழவர்கள் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

  • இயற்கை வழி வேளாண்மை முறைகளை, கடந்த காலங்களில் பின்பற்றிய தமிழக உழவர்களின் பட்டறிவை ஆவணப்படுத்த வேண்டும். இவற்றைப் பகுதி வாரியாகவும் நெல், வாழை, மானாவாரி முறைகள் எனப் பயிர்வாரியாகவும் ஆவணப்படுத்த வேண்டும்.

  • இயற்கை இடுபொருள்கள், பயிற்சிகள், ஆலோசனைகள் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு வட்டார அளவில் குழு அமைக்கப்பட வேண்டும்.

  • புதிதாக இயற்கை வழி வேளாண்மை முறைக்குத் திரும்புபவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

  • செயற்கை உரங்களை மறுத்து இயற்கை உரங்களுக்குத் திரும்ப நினைக்கும் உழவர்களுக்கு, அதனால் கிடைக்கும் மானியத் தொகையை வேறு வகையில் அவருக்கு அளித்திட வேண்டும்.

  • உழவர் சந்தையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • நஞ்சில்லா உணவுப் பொருள்கள், இயற்கை விளைபொருள்கள் பொதுமக்களுக்குக் கிடைக்க சிறப்புப் பொது அங்காடிகள் ஊருக்கு ஊர் திறக்கப்பட வேண்டும்.

  • மரபு விதைகளின் வங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் திறக்கப்பட வேண்டும்.

  • நாட்டு மாடுகள் (பசு), எருமைகள், காளைகள் வளர்ப்போருக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கி, உள்நாட்டு வகையினங்கள் வளர்ப்போர் எனச் சிறப்பு நிலை அளிக்கப்பட வேண்டும்.

  • ஏரி, குளங்கள், கண்மாய்கள் ஆகியவற்றில் இருந்து வண்டல் மண் எடுத்து பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும். வண்டல் எடுக்க விரும்புபவர்களுக்கு இருக்கும் அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும்.

  • சிறு விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள விரும்பினால் அவர்களுக்குப் போக்குவரத்துச் செலவினங்களை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  • மானாவாரி விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியானது, இறவைப் பாசன விவசாயிகளுக்கு இணையாக இருக்க வேண்டும்.

  • ஒருங்கிணைந்த பண்ணையம் மூலமாக உணவு உற்பத்தி நடைபெற சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

  • ஏரிகள், கண்மாய்கள், வரத்து வாய்க்கால்கள் என நீர் கட்டமைப்புகளுக்குப் பாதுகாப்பு, பராமரிப்பு என வேளாண்மை நிதியில் முதலிடம் அளிக்கப்பட வேண்டும்.

  • பனைமரங்கள் வெட்டப்படுவதைத் தடை செய்து, பாதுகாக்கும் வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். பனையைப் பாதுகாக்க, பனை சார்ந்த அனைத்துத் தொழில்களையும் மீள் உருவாக்கம் செய்ய வேண்டும்.

  • பனை வாரியத்தை வலிமை மிக்கதாக மாற்ற அதிக நிதி ஒதுக்கப்பெற்று செயல்பட வழி காண வேண்டும்.

  • ஆவின் பால் போன்று, பதநீர் பருகுவதையும் பரவலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூச்சிக்கொல்லி மரணங்கள்
நிகழாமல் தடுக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
  • அண்மைக்காலத்தில் பூச்சிக்கொல்லி மரணங்கள் பல்வேறு மாவட்டங்களிலும் நிகழ்ந்த வண்ணமாகவே இருக்கிறது. இவை பலவும் வெளியே தெரியாமல் பதிவுகள், தீர்வுகள் இன்றி தொடர்ந்து வருகின்றன. பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி ஆகியவை தடைசெய்யப்பட வேண்டும். பூச்சிக்கொல்லி மரணங்கள் நிகழாமல் தடுக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உயிரிழந்த குடும்பங்களுக்குப் பொருளாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

  • ஐ.நா சபை, IPCC (International Panal on Climate Change), International Consumer Organizations போன்றவை சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி 'சூழல் மற்றும் தற்சார்பு பாதுகாப்பு ஆண்டு'களாக அறிவித்துள்ளன. அந்த அடிப்படையிலும் எதிர்காலத் தலைமுறையின் நலன் கருதியும் இந்த ஆண்டு பட்ஜெட்டை தமிழக அரசு சூழல் பாதுகாப்பு பட்ஜெட்டாக அறிவிக்க வேண்டும்.

  • வேளாண்மை மற்றும் கிராம நலன் காக்க 100 நாள் வேலை திட்டத்தை மனித ஆற்றல் வளப்படுத்தும் விதமாக பயன்படுத்த வேண்டுமே ஒழிய, மனித ஆற்றலை முடக்கும் விதமாக அமையக் கூடாது. குறிப்பாக, இயற்கை விவசாயப் பணிகள், காடு வளர்த்தல், நீராதார வள மேம்பாடு, மதிப்புக் கூட்டும் வேலைவாய்ப்பு, மூலிகைப் பண்ணை அமைத்தல் எனப் பயன்படுத்த வேண்டும்.

  • 1950-ம் ஆண்டு முதல் பெரும்பாலும் நகரமயமாக்கலுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி பெருமளவில் சென்றதால் - நகரங்கள் வளமடைந்து கிராமங்கள் நலிந்து 75 சதவிகிதமாக இருந்த கிராம மக்கள் தொகை 50 சதவிகிதமாகக் குறைந்து போயுள்ளது. மக்கள் நகரங்களை நோக்கி நகர்வதால் நோய்கள் உண்டாவதோடு, சூழல் மற்றும் சமூகக் கேடுகள் உண்டாகின்றன. மக்கள் நகரங்களை நோக்கிக் குவிவதைத் தடுத்து, பரவலாக்க மேதகு அப்துல் கலாம் அவர்கள் கூறியதுபோல நகரங்களில் கிடைக்கும் வளங்கள் கிராமங்களிலும் கிடைக்க மிகப் பெரிய திட்டம் தீட்ட வேண்டும்.

  • மதுவால் விவசாயக் குடும்பங்களில் ஏற்படும் கேடுகளைத் தடுக்க தாலூக்கா அளவில் மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

  • இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உரைத்த 24 அம்சங்கள் கொண்ட உயிர்த் தன்மையுள்ள மாதிரி கிராமங்களை உருவாக்க நிதி ஒதுக்கப்பட வேண்டும். அவை பாட திட்டங்களிலும் கொண்டு வரப்பட வேண்டும்.

  • விதை - விதை பன்மயம் (Seed Diversity) பாதுகாக்க விதை வங்கிகளைத் தாலுக்கா அளவில் உண்டாக்க வேண்டும்.

  • இயற்கை விவசாயச் சான்றழிப்பை எளிமைப்படுத்தி இலவசமாக அரசே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • முதுபெரும் சூழல் போராளி சுந்தர் லால் பகுகுனா கூறியபடி பாரம்பர்ய கட்டுமான முறைகளை மீட்டு மின்சாரம், சிமென்ட், இரும்பு பயன்பாட்டைக் குறைத்து கிராம அளவில் குறைந்த செலவில் வீடுகளைக் கட்டுவதற்கான கட்டுமான பயிற்சிக் கூடங்களை உருவாக்க வேண்டும்.

  • கிராம சபை நடத்த ஆகும் செலவுத் தொகை 1,000 ரூபாயை 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.

  • உயிர் பல்வகைமை சட்டத்தை கிராம அளவில் நீட்டித்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் BMC (BIODIVERSITY MANAGEMENT COMMITTEE).

  • தமிழ்நாடு வரவு செலவு திட்டத்தில் முதன்மைப்படுத்த வேண்டிய திட்டம் - தண்ணீர் ஒன்றுதான். அதாவது, பருவமழை குறைந்து வருவதற்குக் காரணம் பருவநிலை மாற்றம்தான் என்றாலும் பூமியில் நிலத்தடி நீர் தாழாது இருக்க கொள்கை விளக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

  • தாகம் தணிக்கும் தண்ணீர் நஞ்சாவதும் நிலத்துக்கு அடியிலும் அந்தத் தண்ணீர் இல்லாத அவலம் மக்களின் அறியாமையாலும் சுயநலத்தாலும் நிலத்தடி நீரை உறிஞ்சித் தள்ளுவதைக் கட்டுப்படுத்த எந்த ஒரு கொள்கை அறிவிப்பும் தமிழ்நாட்டில் கிடையாது. நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதைத் தடுக்க தமிழக அரசு கொள்கை கொண்டு வர வேண்டும்.

  • அரசு துறைகளால் மறந்துபோன தமிழ் வழி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்றுள்ள ஐந்து வகை நிலப் பாகுபாடுகளைப் பட்டியலிட்டு அந்தந்த நிலங்களில் பயிரிடக் கூடிய பயிர் வகைகளை வரிசைப்படுத்தி உழவர்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

  • 'மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்' என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. அந்த மழையே பனைகள் இல்லாத காரணத்தால் திசை மாறுகிறது. பஞ்சம் வருகிறது. அரசின் சின்னம் பனைமரம். பனை வளர்ப்புக்குத் தமிழக அரசு ஊக்கம் அளிப்பது அவசியம். பனை ஓலைகள் பருவகால மேகங்களில் உள்ள தண்ணீர்த் துளிகளை மழையாகப் பொழிய வைக்கும் ஆற்றல் கொண்டது.

  • தலைவாசல் கால்நடைப் பூங்காவில் பனை மர வளர்ப்புக்கும் திட்டம் வேண்டும்.

  • இயற்கை வழி (Organic) சிறுதானிய உணவுப் பூங்கா ஒன்றுக்கு அந்தப் பூங்காவில் திட்டமிடல் வேண்டும்.

  • உழவு மாடுகளை நாட்டு இன காளைகள் வளர்க்கவும் ஏர் ஓட்டுவதற்கும் 'உழவுக் கலை' என்ற பெயரில் ஒரு தொழில்நுட்ப படிப்பை (I.T.I) உருவாக்க வேண்டும். அதாவது, A.T.S Fillers Training Institute வேண்டும்.

  • ஸ்மார்ட் சிட்டிகளில் சைக்கிள் டிராக் அவசியம் என்பதுபோல் வாகனப் புகையைக் குறைக்க பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

  • பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் கட்டாயம் உண்டாக்க வேண்டும்.

  • மாநில அரசின் நேரடி நிர்வாகத்தில் புதிதாக இயற்கை வேளாண் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள் அமைத்திடவும் அவற்றிற்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயர்சூட்டி பாரம்பர்ய வேளாண் திட்டங்களைத் தொடர்ந்து விவசாயிகளிடம் கொண்டு செல்லவும் வேண்டும்.

இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை
  • வேளாண்மையில் 'செலவில்லா வேளாண்மை' குறித்து நம்மாழ்வாருக்குப் பின் இயற்கை வழி வேளாண்மையை, 'நஞ்சில்லா உணவு உற்பத்தியை' தமிழக விவசாயிகள் அனைவரும் கட்டாயம் கடைப்பிடித்தால் மட்டுமே விவசாயிகள் கரைசேர முடியும்.

  • தமிழக விவசாயிகளிடையே இயற்கை வழி வேளாண்மையைப் புகட்டி பயிற்சி அளித்து வரும், பசுமை விகடனால் தமிழக விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அடையாளம் காட்டப்பட்ட தன்னலம் கருதாத இயற்கை வேளாண் வல்லுநர் சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வழி வேளாண் பயிற்சிகளை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பசுமை விகடனுடன் இணைந்து நடத்திட திட்ட அறிவிப்பை நடப்பு பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுகிறோம். இத்திட்டத்துக்குத் தமிழக அரசின் 'செலவில்லா புதிய பசுமைப் புரட்சி - நஞ்சில்லா உணவு உற்பத்தித் திட்டம்' என்று பெயரிடலாம்.

  • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அளிக்கப்படும் வேளாண் பயிர்க்கடன், பண்ணைக் கடன் அளவை 30% அதிகமாக்கி முன்னுரிமை கடன்களாக அளித்திட வேண்டும்.

  • விவசாயப் பயிர், நகைக்கடன் வட்டிச்சலுகை இதுவரை இருந்து வந்தததைத் திடீரென ரத்து செய்திருப்பதும் 7% வட்டியை 9.2% என உயர்த்தியிருப்பதும் விவசாயிகளுக்கு மேலும் பளுவை உயர்த்தியிருக்கிறது. தமிழக அரசு இதை உணர்ந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்க ஆவண செய்ய வேண்டும்.

  • மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால், காவிரி டெல்டா விவசாயிகள் நலன் கருதி அறிவிக்கப்பட்டு செயல்படுத்தி வந்த குறுவைச் சம்பா சிறப்புத் தொகுப்புத் திட்டங்களை இரண்டு ஆண்டுகளாகத் தமிழக அரசு கைவிட்ட நிலையில் நெல்லுக்கு அறிவித்துள்ள ஊக்கத்தொகை/ இடைநிகழ் செலவு ரூ.70 போதுமானதல்ல... சத்தீஸ்கர் மாநிலம் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்குவது போன்று தமிழகமும் வழங்க வேண்டும்.

  • டெல்டா மாவட்டங்களில் புதியதாக 400 நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டித் தர, வரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு செய்திட வேண்டுகிறோம்.

  • நெல் கொள்முதலுக்கான சிப்பங்களின் கொள்ளளவு 40 கி.கி என்பதை 50 கி.கி எடை கொள்ளவு கொண்டதாக உரம், சர்க்கரை, தீவன மூட்டைகள் போன்று மாற்றி அமைப்பதன் மூலம் எடையிடும்போது நடைபெறும் மோசடிகளைக் குறைத்திட முடியும்.

  • சுமார் 22 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்திட 5.5 கோடி சாக்கு சிப்பங்கள் தேவை. அவை எப்போதும் தயார் நிலையிலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

  • தமிழக அரசு சுமார் 22 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்திட விவசாயிகளுக்கு அளிக்கின்ற இடைநிகழ் செலவு ஊக்கத்தொகை சுமார் ரூ.144 கோடி. ஆனால், விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் குவிண்டாலுக்கு ரூ.100 வீதம் லஞ்சம் ரூ.220 கோடியும், எடை மோசடியில் குவின்டாலுக்கு ரூ.100 வீதம் விவசாயிகளின் நெல் இழப்பு சுமார் ரூ.220 கோடியும் ஆகக் கூடுதல் சுமார் ரூ.440 கோடி. கட்டாய லஞ்சம் மற்றும் எடை மோசடியால் நடைபெறுகின்ற பகல் கொள்ளையைத் தடுத்திட வேண்டிய பொறுப்புடைய மாநில லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையின் கைகள் கட்டப்பட்டு கண்டுகொள்ள மறுக்கின்றன. எந்தவொரு கொள்முதல் நிலையத்திலும் DVAC FLYING SQUAD, SRMS தொடர்பு எண்கள் பொதுமக்கள் பார்வையில் வைக்கப்படவில்லை. உடன் லஞ்ச ஊழலில்லாமல் கொள்முதல் நடைபெறுவதை மாநில உயர் அலுவலர் ஒருவரின் நேரடி தொடர் கண்காணிப்பில் கொள்முதலை மாநில அரசு செயல்படுத்திட முன்வர வேண்டும்.

  • எடை தராசில் மூட்டையை எடையிட்டவுடனே அச்சிடப்பட்ட எடை துண்டு சீட்டு கிடைப்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் எடை மோசடியின் அளவைக் குறைத்திட முடியும்.

  • அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் உலர் இயந்திரங்களை அமைத்துத் தர வேண்டுகிறோம்.

  • அரசு செலவிலேயே அறுவடைப் பணிகள் செய்து கொள்முதல் செய்திட வேண்டும்.

பால் உற்பத்தி
பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை இல்லை.
  • ஆந்திர மாநில 'ஜலயக்ஞம்' (2003 - 2013) மற்றும் தெலங்கானா மாநில 'மிஷன் காகதீய' போன்று தமிழ்நாட்டிலும் உள்ள பொதுப்பணித்துறை ஏரிகள், கண்மாய்களை மேம்படுத்த ரூ.25,000 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தயாரித்து 5 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் முழு மழைநீரைச் சேமித்து ஏரிகளின் நீர்ப்பிடிப்புக் கொள்ளளவை அதிகரித்து நிலத்தடிமட்டம் உயர வழிவகை செய்யலாம்.

  • காவிரிப் பாசனப் பகுதிகளில் கல்லணைக்குக் கீழே பூம்புகார் (நாகை) வரை 2008-ம் ஆண்டில் பொறியாளர் மோகனகிருஷ்ணன் (காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர்) ரூ.5,100 கோடியில் தயாரித்து அளித்த திட்டத்தை (2020 மதிப்பீடு ரூ.12,000 கோடி) 5 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டுகிறோம்.

  • கொள்ளிடத்தின் கீழே நொச்சியம், கூகூர், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, காமரசவல்லி, கோடாலிக் கருப்புர் மற்றும் அணைக்கரை ஆகிய ஏழு இடங்களில் கதவணைகள் (மின்வாரியத்துடன் இணைந்து) கட்டி வீணாகும் வெள்ளநீரைத் தடுத்து நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுத்தல்.

  • கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஜெயங்கொண்ட சோழபுரம் பொன்னேரி (ராஜேந்திர சோழன் வெட்டியது), கண்டராதித்தன் மாதேவி ஏரி போன்றவற்றின் கால்வாய்களை மீட்டுருவாக்கம் செய்யத் திட்டங்கள் தீட்டல்.

  • மேட்டூர் சேடில் அணையிலிருந்து கால்வாய் வெட்டி நாமக்கல் சரபங்கா நதி, திருமணிமுத்தாறு மற்றும் அய்யாறு வழியாக திருச்சி மாவட்ட கீரம்புர் ஏரிவரை மிகு வெள்ள நீரை இடையிலுள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டம். நீண்ட காலமாகக் கிடப்பிலுள்ளதை உடனடியாக நிறைவேற்ற வேண்டுகிறோம்.

  • கொல்லிமலை கிழக்குப்புறமுள்ள ஆகாச கங்கை நீர்வீழ்ச்சி நீரை திருச்சி மாவட்ட புளியஞ்சோலையில் நீர்மின்னணை கட்டிச் சேமித்தல் (இத்திட்டத்தை தமிழ்நாடு மின்வாரியத்துடன் இணைந்து செயற்படுத்தல்).

  • பாலாற்றைத் தூய்மைப்படுத்தி முன்பே திட்டமிடப்பட்டுள்ள 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டி வெள்ளநீரைச் சேமித்து நிலத்தடி நீரைப் பெருக்கிக் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைப் பராமரித்தல், இதற்கென ரூ.150 கோடி செலவாகும். இதைத் தனிச் சிறப்புத் திட்டமாக (இரு ஆண்டுகளில்) நிறைவேற்றல்.

  • எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் அறிக்கைபடி விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவு+ உற்பத்தி செலவோடு 50 சதவிகித விலையைக் கூட்டி நிர்ணயிக்க வேண்டும். ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏக்கருக்கான நெல் உற்பத்திச் செலவு 1,900 ரூபாய். ஆனால், அரசு 1,750 ரூபாய்தான் கொடுக்கிறது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு 3,000 ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டுகிறோம்.

  • பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை இல்லை. ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய 40 ரூபாய் செலவாகிறது. உற்பத்திச் செலவோடு 50 சதவிகிதம் என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைப்படி பார்த்தால், ஒரு லிட்டருக்கு 60 ரூபாய் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் கிராமங்களில் ஒரு மாடு, இரண்டு மாடுகள் வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்குப் பால் உற்பத்தி லாபகரமானதாக இருக்கும்.

  • நிலம் எடுப்பு திட்டங்களையும் அனுபவ உரிமை எடுப்பு திட்டங்களையும் செயல் படுத்துவதற்கு முன்பு 2013-ம் ஆண்டு புதிய நிலம் எடுப்புச் சட்டம் பிரிவு 26-ன் (3rd proviso) கீழ் பாதிக்கப்படும் அனைத்து நிலங்களுக்கும் மாவட்ட ஆட்சியர்கள் சந்தை மதிப்பை நிர்ணயித்த பின்பே இழப்பீட்டை நிர்ணயம் செய்திடும் வகையில் மாவட்ட ஆட்சியர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். புதிய நிலம் எடுப்பு சட்டத்தில் நிலம் எடுப்புப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு பாதிக்கப்பட உள்ள அனைத்து நிலங்களின் வழிகாட்டி மதிப்பை, சந்தை மதிப்புக்கு இணையாக உயர்த்தி நிர்ணயம் செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  • குத்தகை விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை இல்லை. அவர்களையும் விவசாயிகளாக அங்கீகரித்து நிலமுள்ள விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளை அவர்களுக்கும் வழங்க வேண்டுகிறோம்.

  • ஒவ்வொரு வேளாண் வட்டாரத்திலும் சான்று விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் மானாவாரி நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு எண்ணெய் வித்து பயிர்களுக்கான விதைகள், பயறு வகை பயிர்களுக்கான விதைகள், சிறுதானிய விதைகள் அடங்கிய விதைத் தொகுப்பு (பொங்கல் தொகுப்பு வழங்குவது போன்று) ஒன்றை விவசாயிகளுக்கு இலவசமாகவோ குறைந்த விலையிலோ வழங்க வேண்டுகிறோம்.

  • வெள்ளம் மற்றும் வறட்சிக் காலங்களில் நிவாரணம் கொடுப்பதற்குப் பதிலாகப் பயிர்க்கடனை அரசாங்கமே செலுத்த வேண்டுகிறோம்.

  • கூட்டுறவு வங்கிகளில் 1 லட்சம் ரூபாய் வரை பிணையம் மற்றும் வட்டி இல்லாமல் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. இதைத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். 1 லட்சம் என்பதை 3 லட்ச ரூபாய் வரை உயர்த்த வேண்டுகிறோம்.

பசுமை விகடன்
பசுமை விகடன்
  • பண்ணை இயந்திரங்களுக்கான கடன்களுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டுகிறோம்.

  • பயிர்க்கடன் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு வட்டிச் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உரிய காலத்தில் செலுத்தாதவர்களுக்கு கூடுதல் வட்டி வசூலிக்கப்படுகிறது. அதை ரத்து செய்து ஏற்கெனவே அறிவித்த வட்டி சதவிகிதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டுகிறோம்.

  • இந்தச் சலுகைகளை சிறு, குறு மற்றும் அனைத்து விவசாயிகளும் முழுமையாகப் பயனடையும் வகையில் அமலாக்க வேண்டும். விவசாயம் சாராதவர்கள், விவசாயம் என்கிற பெயரில் இயங்கிவரும் பெரு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விவசாயக் கடன்களை வழங்கக் கூடாது. அப்படி வாங்குபவர்களை, வழங்கும் அதிகாரிகளைத் தண்டிக்கக் கடுமையான சட்டம் நிறைவேற்ற வேண்டுகிறோம்.

  • விவசாயிகள் பாதிக்கப்படும்போது, கார்ப்பரேட் பொதுசேவைத் திட்டத்தின்கீழ் (Corporate Social Responsibility) உதவிகள் வழங்கும் வகையில், அந்த விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதற்கான விதிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும். நிவாரணம் நேரடியாக விவசாயியின் வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.

  • விவசாயிகளின் வருமானப் பாதுகாப்புக்காக (Income security) ஒரு நிதியை தமிழக அரசு இருப்பு வைக்க வேண்டும். பயிர்ச்சேதமடையும் போதும், பேரிடர் காலங்களிலும் அவர்களுக்காகப் பயன்படுத்த வேண்டுகிறோம்.

  • விவசாயம் செய்பவர்களுக்குக் குறைந்தபட்ச மாத வருமானம் கிடைக்க வழிசெய்ய வேண்டும். அதற்காக வருமானப் பாதுகாப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டுகிறோம்.

  • சூழல் பாதிப்புகளிலிருந்து விவசாயிகளை மீட்க மாநிலப் பேரிடர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தேசியப் பேரிடர் எதிர்ச்செயல் நிதிக்குக் குறைந்தபட்சம் 1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும். 50 சதவிகித விவசாய இழப்புகளைத் தேசியப் பேரிடர் எதிர்ச்செயல் நிதியின் கீழ் கொண்டுவர வேண்டும்.

  • மகசூல் விலை வீழ்ச்சியடையும்போது, மத்திய, மாநில அரசுகள் அந்த விளைச்சலுக்குக் குறைந்தபட்சம் 50 சதவிகிதமாவது விலைப் பாதுகாப்பை (Price Protection) உறுதி செய்யவேண்டும். நிலையான விலையை நிர்ணயிப்பதற்கான நிதியை (Price Stabilisation fund) ஒதுக்கவேண்டும். அப்படி செய்தால் சந்தையில் விலை வீழ்ச்சியடைந்தாலும், விவசாயிகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். இதற்கு சந்தைப்படுத்துதல் ஆதரவு நிதியை (Marketting supporting fund) அதிகம் ஒதுக்கீடு செய்ய வேண்டுகிறோம்.

  • பொதுச்சந்தையில் அரசுத் தலையீடு மற்றும் ஆதரவு விலை வேண்டும் (Market Intervention and price support price).

  • தேசிய- குடிமக்கள் பதிவேடு போலவே, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாய நிலங்கள் அடங்கிய பதிவேடுகளை தயாரித்து, முறையாகப் பராமரிக்க வேண்டும். ஆதார் போல இந்த பதிவேட்டிலும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் முழுமையான தகவல்கள் இடம்பெறவேண்டும். இதன் மூலம் விவசாயிகள் என்கிற பெயரில் போலிகள் சலுகைகள் அனுபவிப்பதைத் தடுக்க முடியும்.

  • ஒவ்வொரு ஐந்து ஏக்கருக்கும் ஒரு பண்ணைக்குட்டை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

  • விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியங்களை உயர்த்த வேண்டும். குறிப்பாக, மானாவாரி நிலங்களில் உணவுப் பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, சிறப்பு திட்டம் வேண்டும்.

  • மேற்குத்தொடர்ச்சி மலைச் சூழலியல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கவேண்டும். மலைத்தொடரைப் பாதுகாக்கச் சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும். மாதவ் காட்கில் தலைமையிலான அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும், சூழலியல் மண்டலங்களை உருவாக்கவேண்டும்.

  • தமிழ்நாட்டுக்கெனத் தனி காலநிலை மாதிரியை (Tamilnadu’s Unique Climate Model) வடிவமைக்கவேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பலவிதமான காலநிலை நிலவுவதால், மண்டலவாரியாகப் பிரித்தறியும் ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். உள்ளூர் நிலவியல் அமைப்புகளை, காலநிலைகளை, விவசாய முறைகள் அடிப்படையில் காலநிலை மாதிரியை உருவாக்கவேண்டும்.

  • உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புக்கான (Farmers Producer

  • Organisation) உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதன் அளவைக் குறைக்க வேண்டும்.

பல்லுயிரியவள மேலாண்மைக் கமிட்டி
வட்டார வாரியாக அமைக்கவேண்டும்.

ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை இருப்பு வைக்கும் குடோன்களிலேயே விவசாய விளைபொருள்களையும் வைக்கிறார்கள். இது ஆபத்தானது. விளைபொருள்களுக்கு எனத் தனியாகக் கொள்கலன் சரக்கு நிலையம் (Container Fright station) அமைக்க மாநில அரச ஆவன செய்ய வேண்டும்.

பால், இயற்கை விளைபொருள்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான உணவுப் பொருள்களின் தரத்தைப் பரிசோதித்து அறியும் வகையில் ஆய்வுக் கூடங்களை அமைக்க வேண்டும்.

பூச்சிக்கொல்லி பரிசோதனை மையங்களை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும். பரிசோதனைக்கான கட்டணங்களில் 50 சதவிகிதத் தள்ளுபடி அளித்து, பரிசோதனையை ஊக்குவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள பாரம்பர்ய கால்நடை இனங்களைப் பாதுகாக்க, பால் மற்றும் பால் பொருள்கள் உற்பத்தியைப் பெருக்க சிறப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் விவசாய நிதி ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகரித்து, அடுத்த ஐந்தாண்டுகளில் மற்ற துறைக்கு நிகராக விவசாயத்துறைக்கும் நிதி ஒதுக்க வேண்டும்.

  • வட்டார வாரியாக, பல்லுயிரியவள மேலாண்மைக் கமிட்டி அமைக்க வேண்டும். மக்களுக்குப் பல்லுயிரியவளப் பதிவேடு பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும்.

  • இந்திய அரசு, விவசாயிகளுக்குப் பென்சன் வழங்கும் புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது பாராட்டுக்குரியது. அதை இன்னும் மேம்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள 58 வயதுக்கு மேற்பட்ட கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்கி பென்சன் வழங்க வேண்டும். அதில் பெண் விவசாயிகளுக்கும் பெண் விவசாயத் தொழிலாளர்க்கும் சிறப்புத் திட்டம் வேண்டும்.

  • இயற்கை வேளாண்மை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். மரபு விதைக்கூடங்கள், விதைப் பதிவேடு உருவாக்க நிதி ஒதுக்க வேண்டும்.

  • ரசாயன உரங்களற்ற விவசாய முறைகளுக்குத் தனித்தனியாக நிதி ஒதுக்க வேண்டும். (Individual Fund allocation for All non-chemical farm approaches- Agro-Ecology).

  • இயற்கை விவசாயத்தின் மூலமாகச் சூழலியல் பாதுகாப்புக்குப் பங்களிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கொடுக்கும் திட்டம் வேண்டும். (Incentivise ecological services) மாநிலம் முழுவதும், அனைத்து மாவட்டங்களையும் இயற்கை விவசாய மாவட்டங்களாக மாற்றத் தனிக்குழு அமைக்க வேண்டும்.

  • இயற்கை வேளாண்மைக்கெனத் தனிக்கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.

இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை
  • வேளாண் பொருள்கள் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். விவசாயப் பொருள்கள் ஏற்றுமதிக்கு மானியம் வழங்க வேண்டும்.

  • அரிசி, பருப்பு போன்ற ஏற்றுமதி செய்யும் உணவுப் பொருள்களைத் தர பரிசோதனை செய்ய சோதனைக்கூடங்களை அமைக்க வேண்டும். அதேபோன்று பால் பொருள்கள் சோதனை செய்ய ஆரோக்கியச் சான்றிதழ் வழங்க தாமதமாகிறது. அந்தத் தாமதத்தைத் தவிர்க்க ஏற்பாடு செய்யவேண்டும்.

  • பயிர்க்காப்பீட்டு முறையில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். தற்போது, கிராம அளவில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு என்கிற முறை உள்ளது. இதை மாற்றி தனிநபர் காப்பீடு போல, தனித்தனி விவசாயியின் பயிர் பாதிப்புக்கு ஏற்ப (Individually) இழப்பீட்டுத் தொகை வழங்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.

  • குறிப்பிட்ட விளைச்சல் தரவுகளை (ஒரு ஏக்கருக்குச் சராசரியாக கிடைக்கும் உத்தரவாதமான மகசூல்) அடிப்படையாக வைத்து காப்பீடு வழங்க வேண்டும்.

  • விவசாய காப்பீடு விஷயத்தில் தனியார் நிறுவனங்களைக் தவிர்த்து, அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும்.

  • பிரீமியம் தொகையில் விவசாயி, மத்திய மற்றும் மாநில அரசுகள் என்று மூன்று பங்குண்டு. பிரீமியம் தொகையை, விவசாயிகளிடமிருந்து பெறாமல் மாநில அரசே கட்ட வேண்டும்.

  • காப்பீடு திட்டத்தில் இருக்கும் மறைமுகச் செயல்பாடுகளைத் தவிர்த்து வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். காப்பீடு நிறுவனங்கள், பாலிஸி ஆவணங்களைத் தற்போது விவசாயிகளுக்கு வழங்குவதில்லை. அந்த நிலையை மாற்றி, காப்பீட்டு நிறுவனத்துக்கும் விவசாயிக்குமான ஒப்பந்த நகல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டுகிறோம்.

அடுத்த கட்டுரைக்கு