Published:Updated:

`பசுமை விகடன் பட்ஜெட் பரிந்துரைகள்...அக்கறை காட்டிய நிதியமைச்சர்' - அகம்மகிழ்ந்த விவசாயிகள்!

பசுமை விகடன் பட்ஜெட் பரிந்துரை அளிக்கப்பட்டபோது
பசுமை விகடன் பட்ஜெட் பரிந்துரை அளிக்கப்பட்டபோது

இந்தப் பரிந்துரைகளை இன்று (19.1.2020) சென்னை வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வழங்கினார் ஆனந்த விகடன் ஆசிரியரும் விகடன் குழும மேலாண் நிர்வாகஇயக்குநருமான பா.சீனிவாசன்.

இந்தியாவில் விவசாயத்துறைக்கான பட்ஜெட் என்பது, ஒட்டுமொத்த உழவர் இனத்திடம் எப்போதுமே எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பற்றிய பரபரப்பு எகிறிக் கொண்டுள்ளது. இதற்கு நடுவே, பசுமை விகடன் சார்பில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் பரிந்துரைகள், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விவசாயிகள் புடைசூழ இன்று நேரடியாக வழங்கப்பட்டது. அதைப் பற்றி வெளிப்படையாகவே விவாதித்த அமைச்சர், கனிவோடு பரிசீலிப்பதாக உறுதியளித்தது விவசாயிகளிடையே நம்பிக்கையை விதைத்துள்ளது!

2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. பட்ஜெட் தொடர்பாக பொதுமக்களிடமும் நிறுவனங்களிடமும் கருத்துகளைக் கேட்டிருக்கிறது மத்திய நிதி அமைச்சகம். இந்நிலையில், விவசாயம், பாசனம், சுற்றுச்சூழல் தொடர்பாக துறை சார்ந்த வல்லுநர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் கருத்துகளைக் கேட்டு, விவாதித்து தேவையான பரிந்துரைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது, பசுமை விகடன்.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
வி.சதீஷ் குமார்

இதற்கான கலந்துரையாடல் கூட்டம் சென்னை, மெட்ரோ மேனர் ஹோட்டலில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. பொருளாதார நிபுணர் வ.நாகப்பன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தூரன் நம்பி, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஆறுபாதி கல்யாணம், வேளாண் ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீன், ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சி.வையாபுரி, மூத்த பொறியாளர் வீரப்பன், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பூவுலகு சுந்தர்ராஜன், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் ஆலோசகர் ராம சுப்ரமணியன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவக்குமார் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

பசுமை விகடன்
பசுமை விகடன்

`கூட்டுறவு வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை பிணையம் மற்றும் வட்டி இல்லாமல் பயிர்க்கடன் வழங்கப்படுவதைப்போல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். கடன் தொகையை 3 லட்சம் ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும். வறட்சி, வெள்ளக் காலங்களில் பயிர்களுக்காக வாங்கிய கடனை அரசாங்கமே ஈடுசெய்ய வேண்டும். `நிவாரணம்’ என்ற பெயரில் வழங்கும் தொகை போதுமானதாக இருப்பதில்லை என்பதால், வங்கிக்கடனை அரசாங்கமே செலுத்த வேண்டும். இயந்திரங்களுக்காக வாங்கிய கடனில் வட்டியைத் தள்ளுபடி செய்துவிட்டு, அசலை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதும்’ என்று அறிவிக்க வேண்டும்.

எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி (சி2+50%) உற்பத்திப் பொருள்களுக்கு சாகுபடிச் செலவோடு 50 சதவிகித விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதை அமல்படுத்தும் வரை பயிர்ச்சேதம் ஏற்பட்டால், கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயம் சாராதவர்கள், `விவசாயம்’ என்ற பெயரில் இயங்கிவரும் பெரு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விவசாயக் கடன்களை வழங்கக் கூடாது. அப்படி அந்த நிறுவனங்கள் வாங்கியிருந்தால் அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். விளைபொருள் விலை வீழ்ச்சியடையும்போது மத்திய, மாநில அரசுகள் அந்த விளைச்சலுக்குக் குறைந்தபட்சம் 50 சதவிகிதமாவது விலைப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேசிய - குடிமக்கள் பதிவேடுபோலவே விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாய நிலங்கள் அடங்கிய பதிவேடுகளைத் தயாரித்து, சரியாகப் பராமரிக்க வேண்டும். இற்கான கணக்கெடுப்பைச் சரிவர நடத்த வேண்டும். ஆதார்போல இந்தப் பதிவேட்டிலும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் முழுமையான தகவல்கள் இடம்பெற வேண்டும்’ என்பது உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வகைப்படுத்தப்பட்டன.

மத்திய அமைச்சரிடம் வழங்கப்பட்ட பசுமை விகடன் பட்ஜெட் பரிந்துரை
மத்திய அமைச்சரிடம் வழங்கப்பட்ட பசுமை விகடன் பட்ஜெட் பரிந்துரை

இந்தப் பரிந்துரைகளை இன்று (19.1.2020) சென்னை வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வழங்கினார் ஆனந்த விகடன் ஆசிரியரும் விகடன் குழும மேலாண் நிர்வாகஇயக்குநருமான பா.சீனிவாசன். பசுமை பட்ஜெட் பரிந்துரைகள் தயாரிப்பில் பங்கேற்ற விவசாயிகள், இயற்கை வேளாண் அறிஞர்கள், பொருளியல் அறிஞர்களும் இந்தச் சந்திப்பில் இடம்பெற்றனர்.

சென்னை அக்கார்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, அனைவரையும் அன்பாக வரவேற்று பரிந்துரைகள் குறித்து வெளிப்படையாகவே விவாதித்தார் நிதியமைச்சர். விவசாயிகளின் உற்பத்திக்கான விலை குறித்து விவசாயிகளின் கோரிக்கையைக் கூர்ந்துகேட்ட நிதியமைச்சர், அதுகுறித்து பட்ஜெட்டில் கவனத்தில் கொள்வதாகத் தெரிவித்தார். இயற்கை விவசாயத்தை மேம்படுத்த அகில இந்திய அளவில் திட்டங்கள் கொண்டு வரவேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தபோது, அதுகுறித்து விரிவாக திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வட்டி உயர்த்தப்பட்டது குறித்து விவசாயிகளோடு விவாதித்த நிதியமைச்சர், அது தவறான நபர்களுக்கு சென்று சேர்வதாகவும் அதைத்தடுப்பது பற்றி திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். விவசாயிகளுக்கான மானியங்கள் பெரும்பாலும் உர நிறுவனங்களுக்குச் சென்று சேர்வதை தடுத்து நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கே சென்று சேரும் வகையில் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரை மீதும் நடவடிக்கை எடுப்பதாக நிதியமைச்சர் உறுதியளித்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் அறிக்கையை ஏற்று விவசாயிகளின் உற்பத்திக்கு விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் 2020-21 வேளாண் வளர்ச்சிக்கான பரிந்துரைகள்

அணைப் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துகளை முழுமையாகக் கேட்டுக்கொண்ட நிதியமைச்சர், ”இதுகுறித்து விவாதிக்க அத்துறை அமைச்சரையே சென்னைக்கு அனுப்பி வைக்கிறோம். அவருடன் விவசாயிகளைக் கூட்டி விவாதியுங்கள்” என்று ஆலோசனையும் தந்தார்.

அமைச்சரின் நம்பிக்கையான வார்த்தைகளால் அகமகிழ்ந்து விடைபெற்றனர் விவசாயிகள். பசுமை விகடன் பட்ஜெட் பரிந்துரைகள், மத்திய நிதியமைச்சகம் கோரியிருந்தபடி அதன் இணையத்தளத்திலும் அப்லோடு செய்யப்பட்டுள்ளது!

அடுத்த கட்டுரைக்கு