Published:Updated:

`விவசாயிகள் உதவித் தொகையை அதிகரிக்கணும்' மக்களின் பட்ஜெட் எதிர்பார்ப்பு! பகுதி -1 #Budget2020

மத்திய அரசின் இந்த பட்ஜெட் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கானதாக இருக்கட்டும்.

பிப்ரவரி 1-ம் தேதி, 2020-21-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, பலதரப்பட்ட மக்களிடம் 'மத்திய பட்ஜெட்டில் உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன?' என்று கேட்டிருந்தோம். திருவள்ளூர் மாவட்ட மக்களுடைய எதிர்பார்ப்புகளின் தொகுப்பு இங்கே.

2
தனிநபர் வருமான வரி

தனிநபர் வருமான வரி வரம்பை உயர்த்துங்கள்!

ஆர்.காயத்ரி, கல்வியாளர். 

"தனிநபர் வருமான வரி வரம்பு, 5 லட்சத்திலிருந்து 7.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பதுதான் என்னுடைய முதல் எதிர்பார்ப்பு. நிறுவனங்களுக்கு இருக்கும் மறைமுக வரியை அதிகரித்து ஜிஎஸ்டி-யைக் குறைக்கலாம். வீட்டுக் கடன், வருமான வரியிலிருந்து கழிப்பதை 2 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சலுகைகள் அல்லது ரிவார்டுகளை வழங்க அறிவிப்புகளை எதிர்பார்க்கிறேன். டிஜிட்டல் இந்தியாவாக மாறவிருக்கும் நிலையில், மக்களுக்கு இந்த ஊக்கம் தேவை என நான் நினைக்கிறேன். சமீபத்தில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவது வைரலானது. அதை இன்னும் நெறிப்படுத்தலாம். அதற்கான அறிவிப்புகள் இந்தப் பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்."

3
பட்ஜெட் 20202

விவசாயிகளின் ஊக்கத்தொகையை அதிகப்படுத்துங்கள்!

வசந்த்குமார், வேளாண்துறை மாணவர்.

"கடந்த 2019-ம் ஆண்டின் மத்திய வருடாந்தர பட்ஜெட்டில், விவசாயத் துறைக்கு  அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை இந்த பட்ஜெட்டிலும் எதிர்பார்க்கிறேன். 'பிரதான் மந்திரி கிசான் சமன் நிதி' மற்றும் 'பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன்' என இரண்டு திட்டங்கள்,  கடந்த பட்ஜெட்டில் விவாசாயிகளின் நலன் கருதி செயல்படுத்தப்பட்டன. அதன்மூலம் 2 ஹெக்டேர்களுக்கு மேல் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு,  6,000 ரூபாய் ஊக்கத்தொகையாகக் கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகையை 4% உயர்த்தி 10,000 ரூபாயாக அறிவித்தால் நன்றாக இருக்கும்.  அதேபோல், 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு உதவித்தொகையாக வழங்கப்படும் 3,000 ரூபாயை  6,000 ரூபாயாக உயர்த்தினால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்."

4
ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ்

ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுக்கும் அறிவிப்புகள் வேண்டும்!

ருக்மாங்கதன், தொழிலதிபர்.

"கடந்த ஆண்டு வருடாந்தர பட்ஜெட்டில், 'மேக் இன் இந்தியா' கான்செப்ட்டை ஊக்குவிக்கும்  வகையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு வரிகளைத் தளர்த்தி அறிவித்திருந்தது அரசு. இதுபோன்று, தொழில் முனைவோர் நலன் சார்ந்த திட்டங்கள் இந்த 2020 பட்ஜெட்டிலும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆன்லைன் வணிகத்தின் ஆதிக்கத்தினால் நம்முடைய உள்ளூர் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அயல்நாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், அவர்களுக்கு விதிக்கப்படும் வணிக வரிகளின் உச்ச வரம்பை இன்னும் உயர்த்த வேண்டும். மத்திய அரசு, உள்ளூர் வியாபாரிகளின் நலன்கருதி அவற்றைச் செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறை, நடப்பு ஆண்டில் ஆட்டம் கண்டிருக்கிறது. எனவே, இந்த பட்ஜெட்டில் ஆட்டோ மொபைல் துறை கண்டிருக்கும் சரிவை மீட்டெடுக்கும் வகையில் அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்."

5
Education 2020

கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

எலிசபெத், கல்லூரிப் பேராசிரியை.

"மத்திய அரசின் கடந்த ஆண்டு (2019) பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் நோக்கில் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டது. அதன்மூலம் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருந்தாலும் இன்னமும் நாம் சீனா மற்றும் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கியுள்ளோம். அந்த நிலை மாற மத்திய அரசு, கல்வித்துறையின்மீது இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் உயர் கல்விக்காக அளிக்கப்படும் கல்விக்கடன்  தொகை குறைவாகவும், அதன் வட்டி விகிதம் மிக அதிகமாகவும் உள்ளது. சில வங்கிகளில் மட்டுமே அதிகபட்சமாக ரூபாய் 40 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படுகிறது. ஆனால் அந்தத் தொகை, வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதற்குப் போதுமானதாக இல்லை. எனவே, இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் கல்விக்கடன் சார்ந்த அறிவிப்புகளை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்."

6
SME

இந்த பட்ஜெட் சிறு, குறு நிறுவனங்களுக்கானதாக இருக்கட்டும்!

வெங்கட்ராமன், பொருளியலாளர். 

"கடந்த 2019-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை துரிதமாக உயர்த்தும் வகையில்  இருந்தாலும்கூட, அரசு இன்னமும்  அவர்களின் நலன் கருதி செயல்பட வேண்டும் என்று தோன்றுகிறது. கார்ப்பரேட்  நிறுவனங்களின் ஆதிக்கத்தினால் சிறு, குறு தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இம்முறை சிறு, குறு தொழில்  முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் மற்றும் வரி விகித குறைப்பு போன்றவற்றை அரசு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 

அதேபோல, சர்வதேச அளவில் இந்தியாவின் பண மதிப்பு நாளுக்குநாள் குறைந்துகொண்டேவருகிறது. மத்திய அரசு அதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். தனியார்மயமாக்குதலை முழு வீச்சில் மேற்கொண்டுவரும் அரசு, அதன் பாதிப்புகளை உணர்வதில்லை. எல்லாத் துறைகளையும் தனியார்வசம் ஒப்படைத்துவிட்டால், அரசின் ஆளுமைத்திறன் பறிபோய்விடுவதுடன், வருவாயும் குறைந்துவிடும். எனவே, இந்த பட்ஜெட்டில் பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்தும் வண்ணம் அறிவிப்புகளை எதிர்பார்க்கிறேன்."

கார்ப்பரேட்களின் கடன் தள்ளுபடியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்! #Budget2020
அடுத்த கட்டுரைக்கு