Election bannerElection banner
Published:Updated:

``ஜி.எஸ்.டி குறைவு... கல்விக்கு அதிகம்!" - மக்களின் பட்ஜெட் எதிர்பார்ப்பு - பகுதி-2 #Budget2020

ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தியதிலிருந்து மத்திய அரசின்மேல் மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துக்கொண்டே வருகிறது.

பிப்ரவரி 1-ம் தேதி, 2020-21-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலாகவிருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, பலதரப்பட்ட மக்களிடம், 'மத்திய பட்ஜெட்டில் உங்களின் எதிர்பார்ப்பு என்ன' என்று கேட்டிருந்தோம். மதுரை மாவட்ட மக்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு இங்கே.

2
மருத்துவமும், சுகாதாரமும்

மருத்துவம் மற்றும் சுகாதார மேம்பாடு அவசியம்!

பஞ்சவர்ணம், இல்லத்தரசி 

100 நாள் வேலைத் திட்டத்திற்காக மத்திய அரசு பணம் ஒதுக்கினாலும், 100 நாள்களுக்கு வேலை கொடுப்பதில்லை. அதிலும் ஊழல்தான் நடக்கிறது. எனவே, இந்தத் திட்டத்தை பட்ஜெட்டிலிருந்து தூக்குவதே நல்லது. வீடுதோறும் கழிப்பறை கட்டுவதற்காக ஒரு குடும்பத்திற்கு 12,000 ரூபாய் வீதம், கோடிக்கணக்கில் ரூபாயை இத்திட்டத்திற்கு ஒதுக்குகிறார்கள். இந்தத் தொகை நேரடியாக மக்களுக்கு வராமல், கான்ட்ராக்டர் மூலம் கழிப்பறையைக் கட்டித் தருகிறார்கள். அவர்கள் கட்டிக்கொடுக்கும் கழிப்பறைகள், திட்டத்திற்காகக் கட்டப்பட்டதாகத்தான் உள்ளது. உபயோகிக்கும் வகையில் இல்லை. எனவே, அந்தத் தொகையை நேரடியாக பொதுமக்களுக்குக் கொடுக்கும் வகையில் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். 

சுகாதாரத் துறையின் மேம்பாட்டை உயர்த்தும் வகையில் பட்ஜெட் அமைய வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவமனை மட்டுமே சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களிலிருந்து மதுரை ராஜாஜி மருத்துவமனை நோக்கியே மக்கள் வருகின்றனர். கிராமங்களில் சுகாதார நிலையம் என்று இருந்தாலும் உரிய தரத்தில் அது செயல்படுவதில்லை. பலத்த காயம் என்றாலோ தீவிர சிகிச்சை என்றாலோ, கிராம மக்கள் நகரத்தைத் தேடி வரவேண்டியுள்ளது. எனவே, சுகாதாரத்துறையில் அதிக கவனம் செலுத்தி, 2020 பட்ஜெட் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்."

3
ஜி.எஸ்.டி

ஜிஎஸ்டி வரி விகிதங்களைத் தளர்த்த வேண்டும்!

மணிகண்டன், ஆசிரியர்

"மத்திய அரசின்மேல் மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துக் கொண்டேவருகிறது. ஜிஎஸ்டி-யை அறிமுகப்படுத்தியதிலிருந்து ஏராளமான குழப்பங்கள். மக்களின் அத்தியாவசியப் பொருள்களிலும் ஜிஎஸ்டி வரியின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இதைத் தளர்த்துவதற்கான அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறேன்.  மத்திய அரசுக்கு இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமானது. ஏனெனில், வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தைப் பொய்யான எண்களைக் காட்டி, தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அரசு உணர்ந்திருப்பதுபோல தெரிகிறது. இந்த பட்ஜெட்டில் ஏதேனும் உருப்படியான அறிவிப்புகளை அவர்கள் வெளியிட்டே ஆக வேண்டும். இல்லையென்றால், அவர்கள் மக்களால் சீக்கிரமாகவே வெளியேற்றப்படுவார்கள்."

4
சாமானியர்களுக்கான பட்ஜெட்

சாமான்யர்களுக்கான பட்ஜெட்டாக இருக்க வேண்டும்!

முருகன், புகைப்படக் கலைஞர்

"கடந்த சில ஆண்டுகளாக போடப்பட்ட பட்ஜெட்டுகள், சாமான்யர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இருக்கவில்லை. அதனால் இந்த பட்ஜெட், சாமான்ய மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. தங்க நகைகள், வாகனம் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்களின் மீதான வரியை அதிகப்படுத்துகிறோம் என சாதாரணமாகச் சொல்கிறது மத்திய அரசு. இதில் பாதிக்கப்படுவது சாமான்யன்தான். பணம் இருப்பவர்கள், எவ்வளவு வரி போட்டாலும் தனக்கு வேண்டிய பொருள்களை வாங்கி விடுகிறார்கள். ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு அவை எட்டாக் கனிகளாகவே உள்ளன."

5
கல்வியும், ராணுவமும்

ராணுவத்துக்கு நிதி ஒதுக்குவதுபோல கல்விக்கும் ஒதுக்குங்கள்!

உஷா, உதவிப் பேராசிரியர்

" என் எதிர்பார்ப்பும் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்பதுதான். நான் ஒரு பணியாளர் என்பதால், எனது எதிர்பார்ப்பு வருமானவரித் தொகையை 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்த வேண்டும். விவசாயிகளுக்கு அதிகப்படியான மானியம் வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கடன்களைத் தள்ளுபடிசெய்யும் வகையில் இந்த பட்ஜெட் அமைய வேண்டும். கடன்களை ரத்துசெய்யாவிட்டாலும் அவர்களின் வட்டித் தொகையையாவது ரத்துசெய்ய வேண்டும்.

ராணுவத்திற்கு நிதி தேவைதான். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் தேவைக்கு அதிகமாக நிதி ஒதுக்குவதுபோல தெரிகிறது. பாதுகாப்புப் படையில் காட்டும் முனைப்பை கல்வித்துறையிலும் காட்டலாம். வளர்ந்துவரும் நாடுகளைப் பார்த்து வகுப்பறையில் டிஜிட்டல் ஸ்கிரீனையும், டி.வி-யை மட்டும் வைத்தால் போதாது. மாணவர்களுக்குத் தேவையான சுற்றுச்சூழல், தகுந்த ஆசிரியர்கள் மற்றும் கல்வித் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்."

6
வேலை வேண்டும்

வேலை வாய்ப்பை அதிகப்படுத்துங்கள்!

பாரி மைந்தன், தமிழ்நாடு மாணவர் தலைமை ஒருங்கிணைப்பாளர். 

"ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள், பொருளாதார அறிக்கையை வெளியிடுவார்கள். அந்த அறிக்கையைத் தேர்தல் அறிக்கைபோல் அறிவிக்காமல், நியாயமாக அறிவிக்க வேண்டும். மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இன்னும் நிலுவையில் உள்ளது. அதைச் சரி செய்யும் விதமாக இந்த பட்ஜெட் அமைய வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் அதிகாரபூர்வமாக 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்நிலையில், வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் தரும்படியான விஷயங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உதவித்தொகையை அரசு குறைத்துக்கொண்டே வருகிறது. இந்த நிலை மாறி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென தனி பட்ஜெட்டை உருவாக்க வேண்டும்"

கார்ப்பரேட்களின் கடன் தள்ளுபடியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்! #Budget2020
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு