Published:Updated:

``அரசு செலவிடும் நிதியைக் கண்காணிக்க குழு அவசியம்" - மக்களின் பட்ஜெட் எதிர்பார்ப்பு - பகுதி 3

`வருகின்ற மத்திய பட்ஜெட் மட்டுமல்ல, அனைத்து வருடங்களிலும் நான் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் வருமானத்துக்கு வரி இருக்கக் கூடாது என்பதுதான்.’

இன்னும் இரண்டு நாள்களில் (பிப்ரவரி 1-ம் தேதி) 2020-21-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகவிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, பலதரப்பட்ட மக்களிடம், 'மத்திய பட்ஜெட்டில் உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன?' என்று கேட்டிருந்தோம். கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி மாவட்ட மக்கள் நம்மிடம் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு இங்கே.

1
புதிய தொழில்நுட்பங்கள்

விவசாயத்துக்காகப் புதிய தொழில்நுட்ப அறிவிப்புகளை எதிர்பார்க்கிறோம்!

வெ.ராமகிருஷ்ணன், விவசாயி 

"2018-2019 ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின்போது நீர்ப்பாசனம் மற்றும் வெள்ள கட்டுப்பாட்டுக்காக அதிகமான கவனம் செலுத்தப்பட்டாலும் அதன் விளைவுகள் பலன் தரவில்லை. இந்த வருட பட்ஜெட்டில் நீர்ப்பாசனம் முதலிய விவசாயத்தின் அடிப்படைத் தேவைகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவை விவசாயிகளிடம் சென்று பயன் அடைகிறதா என்பதைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். வேளாண் உற்பத்தியில் செலுத்தும் கவனத்தைச் சந்தைப்படுத்துதலில் செலுத்தினால் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த புது தொழில்நுட்பங்களின் அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம்."

2
கண்காணிப்புக் குழு

கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்!

ரா.ஹரிஷ், விவசாய பொருளாதார ஆலோசகர்

"பட்ஜெட் 2018-2019 ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில்  தமிழகத்துக்கு இரண்டாம் இடம். ஆனால், அதன் விளைவுகள் பெரிதாகச் சொல்லும் அளவுக்கு இல்லை. இந்த வருடம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுகள், மானியத் தொகைகள் எல்லாம் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். கடந்த வருட பட்ஜெட்டில் நிறைய  திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும், அவை மக்களுக்கு எந்த வகையிலும் பயனில்லை. அதனால், இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் குறைவாகவும் செயல்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு விதைகள் சார்ந்த தொழில்நுட்பங்கள் அறியப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அதற்கு நிதி ஒதுக்கீடு செய்துகொடுத்தால் விழிப்புணர்வு ஏற்படும்."

3
விலைவாசி

முதலில் விலைவாசியைக் குறைக்கிற மாதிரியான பட்ஜெட் வேண்டும்!

பிரவீனா, குடும்பத் தலைவி 

என்னைப் போன்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு, விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான். நான் அனைத்து பட்ஜெட்டிலும் இதைத்தான் எதிர்பார்க்கிறேன். வருடங்கள் போகப்போக அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக இருக்கிறது. முடிந்த அளவுக்குத் தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டிலாவது விலைவாசியைக் குறைப்பதற்கான ஏதாவதொரு திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்."

4
Agriculture cold storage

விவசாயிகளுக்குப் பயனளிக்கும் குளிரூட்டும் கிடங்குகள் வேண்டும்!

விஜயராகவன், கல்லூரி முதல்வர், அதியமான் வேளாண்மை கல்லூரி 

"பட்ஜெட் 2020 முற்றிலும் வேளாண்மைத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். நவீன வேளாண்மை பற்றிய விழிப்புணர்வுக்கு அதிக நிதி ஒதுக்கீடு அவசியமானது. விவசாயிகளுக்குப் பயன் தரும் சொட்டு நீர் பாசனம், நவீன இயந்திரங்களுக்கு ஊக்கத்தொகை அதிகப்படுத்த வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகள் வீணாவதைத் தடுக்க சேமிப்பு அறைகள், குளிர் சாதன அறைகள் போன்ற சேமிப்பு கூடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தால் விவசாய மக்கள் நன்மை பெறுவர். கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெரிய நகரங்களைச் சிறிய கிராமங்களோடு இணைத்து சாலை வசதிகள் அமைத்தால் எளிய முறையில் பொருள்களைச் சந்தைப்படுத்தலாம்."

5
income tax

வருமானத்துக்கு வரி வேண்டாம்!

அகிலாண்டேஸ்வரி, கல்லூரி விரிவுரையாளர். 

"வருகின்ற மத்திய பட்ஜெட் மட்டுமல்ல, அனைத்து வருடங்களிலும் நான் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் வருமானத்துக்கு வரி இருக்கக் கூடாது என்பதுதான். ஏனெனில் நிலவரி, சொத்து வரி, தண்ணீருக்கு வரி, மின்சாரத்துக்கு வரி என அனைத்துக்கும் தனித்தனி வரியைச் செலுத்துகிறோம். வாங்கும் அனைத்து வீட்டு உபயோகப் பொருள்கள், உணவுப் பொருள்கள், நகைகளுக்கு வரி செலுத்தி வருகிறோம். இப்படி இருக்கும்போது வாங்கும் வருமானத்துக்கும் வரி செலுத்துவது கூடுதல் ஃபைனான்ஸியல் சுமை."

பின் செல்ல