Published:Updated:

பட்ஜெட் 2021-22: பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துமா?

பட்ஜெட் 2021-22
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் 2021-22

பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பட்ஜெட் 2021-22: பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துமா?

பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Published:Updated:
பட்ஜெட் 2021-22
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் 2021-22

ஏற்கெனவே சரிவிலிருந்த இந்தியப் பொருளாதாரம், கொரோனா மற்றும் பொதுமுடக்கத்துக்குப் பிறகு மேலும் சிக்கலில் இருக்கிறது. ஏராளமான வேலையிழப்புகள், சிறு, குறு தொழிற்சாலைகள் மூடல் என்கிற நெருக்கடியான சூழலில் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார். பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பட்ஜெட் 2021-22: பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துமா?

நாராயணன் திருப்பதி, மாநில செய்தித் தொடர்பாளர், பா.ஜ.க

பட்ஜெட் 2021-22: பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துமா?

கொரோனா காரணமாக, உலகம் முழுவதும் தொழில்துறை கடும் சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சூழலில், ‘தற்சார்பு பாரதம்’ என்கிற திட்டத்தின்படி, தொழில்துறைக்குப் புத்துயிர் கொடுத்துவருகிறோம். இதுபோக, வரும் பட்ஜெட்டில் தொழிற் சாலைகளின் வளர்ச்சிக்குக் கூடுதல் நிதி மற்றும் கடன்களை வழங்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகும். இதனால், வேலைவாய்ப்பு அதிகரிப்பது உறுதிசெய்யப்படும். தற்போது கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுவருகிறது. இன்னும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பு மருந்து அளிப்பது பற்றிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும். சமீபகாலமாக, விவசாயத்துறையில் இந்தியா சற்று முன்னேற்றம் கண்டிருக்கிறது. எனவே, பட்ஜெட்டில் விவசாயத்தின்மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். சேவைத்துறை வீழ்ச்சியடையும் இந்த நேரத்தில், உற்பத்தித்துறையைப் பலப்படுத்த அதிக நிதி ஒதுக்கப்படலாம். புலம்பெயர் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை மத்திய அரசு சிறப்பாகச் செயல்படுத்திவருகிறது. முந்தைய ஆண்டைவிட 15,000 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட்டில் இந்த நிதி இன்னும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி., காங்கிரஸ்

பட்ஜெட் 2021-22: பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துமா?

அரசின் முழு கவனமும் நாட்டின் ஐந்து கோடீஸ்வரர்கள்மீது மட்டுமே இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 9 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்கள், சிறு, குறு தொழில் நடத்துபவர்கள், சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள். தமிழகத்தில் திருப்பூர் பின்னலாடைத் தொழில், சிவகாசி பட்டாசுத் தொழில் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீட்பதற்கான திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கே பணம் இல்லாத சூழலில், புதிதாகப் பொருள்களை வாங்க வேண்டும் என்கிற உணர்வு மக்களிடம் இல்லை. மக்களின் நுகரும் சக்தியை அதிகரித்தால் மட்டுமே பொருளாதாரம் வளரும். வரி வசூலிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொண்டதால், மாநிலங்கள் பலவீனமாக இருக்கின்றன. மாநிலங்களின் வரிகளை வசூலிக்கும் மத்திய அரசு, மாநிலங்களுக்கான பங்கைக் கொடுப்பதில்லை. ஜி.எஸ்.டி-யால் ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடுகட்டும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது பணம் இல்லை என்று கையை விரிக்கிறார்கள். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை வழங்காமல், ‘கடன் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்கிறார்கள். இதனால் இன்றைக்கு, தமிழக அரசின் கடன் ஐந்து லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. எனவே, வரியாகவோ செஸ்ஸாகவோ வசூலிக்கப்படுவதிலிருந்து மாநிலங்களுக்கு உரிய பங்கு வழங்கப்படுவதை இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

ஜோதி சிவஞானம், பொருளாதார நிபுணர்

பட்ஜெட் 2021-22: பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துமா?

கொரோனா காலத்தில், பொருளாதாரத்தை மீட்பதற்காக 30 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பு வழங்கியதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ‘2019-2020 நிதியாண்டில், முந்தைய அரையாண்டில் சாதாரண சூழலில் செய்யப்பட்ட செலவைவிட, 2020-2021 நிதியாண்டின் அரையாண்டில் கொரோனா சூழலில் செய்யப்பட்ட செலவு குறைவானது’ என்று சி.ஏ.ஜி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்பதற்கு அது போதுமானதாக இல்லை. அதை ஈடுகட்டும் வகையில், பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்க வேண்டும்.

நாட்டின் 94 சதவிகித தொழிலாளர்கள் முறைசாரா தொழில்களில் இருக்கிறார்கள். எந்தவித வேலைப் பாதுகாப்பும் இல்லாத அவர்கள் கொரோனா காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் மோசமான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் அறிவிக்க வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களைக் கணக்கிட்டு அவர்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்க வேண்டும். அதை அவர்கள் செலவு செய்வதன் மூலம் பொருளாதாரத்தை மீட்க முடியும். உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத வகையில், மறைமுக வரி 300 சதவிகிதமாக இருக்கிறது. பெட்ரோல் விலை அதிகரித்துக்கொண்டே போவதால், விலைவாசியும் உயர்ந்துகொண்டே போகிறது. நேரடி வரியை அதிகரித்தால், அளவுக்கு அதிகமாக பெட்ரோலியப் பொருள்கள்மீது வரி விதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும். வேலைவாய்ப்புகளை அதிகமாக வழங்கக்கூடிய சிறு, குறு தொழில்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.