Published:Updated:

``ரிசர்வ் வங்கி உபரி நிதியை அரசு எதற்கு உபயோகிக்கப்போகிறது?” - பேராசிரியர் ஜெயரஞ்சன்

ஹ. ஜாபர் சேட்

"இப்போது இருக்கும் இந்தியாவைப்போல், வரும் 2024-ம் ஆண்டு இந்தியா இருக்காது என்ற அச்சம் அனைத்து சாரார்களிடமும் நிலவி வருகிறது."

Professor Jeyaranjan
Professor Jeyaranjan

பொருளாதார மந்த நிலையை மையப்படுத்தி விழுப்புரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் ரவிக்குமார் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராகப் பொருளாதார வல்லுநர் ஜெ.ஜெயரஞ்சன் பங்கேற்றார். கருத்துரை வழங்க விழுப்புரம் அனைத்து வணிகர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் ரமேஷும் ஜிவி குழும நிர்வாக இயக்குநர் வெங்கடேசனும், அகில இந்திய ஊறுகாய் உற்பத்தியாளர் சங்கத் துணைத் தலைவர் ராஜாவும் பங்கேற்றனர்.

Ravikumar
Ravikumar

கருத்தரங்கில் பேசிய ரவிக்குமார், "இப்போது இருக்கும் இந்தியாவைப்போல் வரும் 2024-ம் ஆண்டு இந்தியா இருக்காது என்ற அச்சம் அனைத்து சாரார்களிடமும் நிலவி வருகிறது. அதற்குச் சான்றாக ரிசர்வ் வங்கியின் உபரிநிதியை மத்திய அரசு எடுத்துக்கொண்டது, வங்கிகள் இணைப்பு குறித்த முடிவு மற்றும் மத்திய அரசு இயற்றும் சட்டங்கள் ஆகியவை நம்மைச் சங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

விழுப்புரம் வணிக பிரதிநிதிகள் கூறுகையில், "பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தியபோது அனைத்துத் தொழில்களும் தொய்வுற்றன. அந்தச் சூழலிலும்கூட நாங்கள் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பவில்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருளாதார மந்தநிலையை மேற்கோள்காட்டி தொழிலாளர்களைத் திரும்ப அனுப்புவது முறையில்லாதது. அரசாங்கம் கார்ப்பரேட்டுக்குக் காப்பானாகச் செயல்படக் கூடாது” எனக் கவலையோடு குறிப்பிட்டார்கள்.

வேளாண்துறைக்கு அளித்துவந்த மானியத்தை, 1991-ம் ஆண்டு தொடங்கி அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக ரத்து செய்துவந்துள்ளது.

சிறப்புப் பேருரை ஆற்றிய பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன், "பொருளாதார மந்த நிலையை ஒப்புக்கொள்ளாமலேயே தீர்வு காண்பேன் எனக் களம் இறங்குவது தீராத தீங்கு விளைவிக்கும். வங்கி இணைப்புக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. நாட்டின் பொருளாதாரம் மேம்பட மேக்ரோ எகானமி முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில், நான்கு கூறுகள் உள்ளன. இதில், நுகர்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. 1991-ம் ஆண்டு பொருளாதாரக் கொள்கை பிறப்பிக்கப்பட்டது. இனிமேல் அரசாங்கம் எவ்வித முதலீடும் செய்யாது என்று அறிவிக்கப்பட்டது. வேளாண்துறைக்கு அளித்து வந்த மானியத்தை 1991-ம் ஆண்டு தொடங்கி அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக ரத்து செய்துவந்துள்ளது.

நிதியை இவர்கள் எவ்வாறு உபயோகிக்கப்போகிறார்கள் என்பதை அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
`வங்கிகள் இணைப்பால் இந்தியப் பொருளாதாரம் இன்னும் மோசமாகும்!‘ - தாமஸ் ஃப்ரான்கோ ராஜேந்திர தேவ்
மணற்கேணி நிகழ்வில்
மணற்கேணி நிகழ்வில்

இந்தியாவில் வேளாண்துறையைச் சார்ந்து இல்லாத மாநிலமாகத் தமிழகமும் கேரளாவும் திகழ்ந்து வருகிறது. வேளாண்துறைக்காக இறக்குமதி செய்யப்படும் உரங்களின் விலை அதிகமாகவே இருந்துள்ளது. அதற்குக் காரணம், நம்முடைய அன்னியச் செலவாணி மதிப்புதான். நம் நாட்டில் விவசாயப் பொருள்களுக்கு அதன் உரிய விலையை வழங்காமல் இருப்பது பெரும் தவறாகும். இந்தியாவில் ஏற்றுமதி பின்னடைவில் உள்ளது. இந்தியா இறக்குமதியில்தான் முன்னோடியாக இருக்கிறது.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக வர்த்தக முறையில் விவசாயம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதே சூழ்நிலை விவசாயிகளுக்குத் தொடருமேயானால், அவர்களின் பொருளாதாரம் உயர 14 அல்லது 24 வருடங்கள் ஆகும் என ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியிலிருந்து உபரி நிதியை மத்திய அரசு பெற்றுக்கொண்டது. இவ்வாறு பெற்றுக்கொள்ள 5 ஆண்டுளாக முயற்சி செய்து வந்துள்ளது. ஆனால், இவர்களுடைய சூழ்ச்சி இந்த ஆண்டுதான் நிறைவேறியது. அந்த நிதியை இவர்கள் எவ்வாறு உபயோகிக்கப் போகிறார்கள் என்பதே அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இவர்கள் எடுக்கும் பொருளாதார முடிவுகள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக உள்ளது. இந்த நிலை நீடிக்கும் வரையில் பொருளாதாரம் உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு ரூ.86,000 கோடிதான் மிஞ்சுமா?

எனவே, கிராமப்புற தொழில்களுக்கும் பாரம்பர்ய தொழில்களுக்கும் விவசாயத்துக்கும் நடுத்தர தொழிலுக்கும் அரசு சலுகை வழங்கி ஊக்குவித்தாலேயொழிய, பொருளாதாரம் மேம்படாது. இதற்கு எதிர்முனையில் உபரி நிதியை கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக்கடனைச் செலுத்துவதற்காகச் செலவிட்டாலும் அல்லது கார்ப்பரேட்டுக்குக் காப்பானாக அரசு செயல்பட்டாலும் நம் நாடு பொருளாதாரத்தில் பின்னடைந்தே போகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.