Published:Updated:

`ரூ. 2,000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்..!’ - பதுக்கலைத் தடுக்கும் முயற்சியா?

`இந்த நடவடிக்கை மூலம் பதுக்கலையும் கறுப்புப் பணப் புழக்கத்தையும் தடுக்க முடியும்’ என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

2,000 ரூபாய் நோட்டுகள்
2,000 ரூபாய் நோட்டுகள்

இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது 2,000 ரூபாய் நோட்டுகள். இந்த நோட்டுகள் குறித்து அவ்வப்போது வதந்திகளும் பரவுவதுண்டு. 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை ஆர்.பி.ஐ நிறுத்திவிட்டதாகவும், விரைவில் இந்த நோட்டுகளும் பணமதிப்பிழப்பு செய்யப்படும் என இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

RTI
RTI

இந்த நிலையில், கடந்த காலங்களில் இந்தச் செய்தியை வதந்தி என்றும் உயர் மதிப்பு நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்று அரசு மற்றும் ஆர்.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட 2,000 ரூபாய் தொடர்பான கேள்விக்கு ஆர்.பி.ஐ அளித்த பதிலில் இந்த நிதியாண்டில் புதிதாக ஒரு 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.பி.ஐ-யின் இந்தப் பதில் தொடர்பாக பேசிய பொருளாதார வல்லுநர்கள், ``இந்த நடவடிக்கை மூலம் பதுக்கலையும் கறுப்புப் பணப் புழக்கத்தையும் தடுக்க முடியும்” என்றனர்.

ஆர்.பி.ஐ-யின் இந்த நடவடிக்கை தொடர்பாக `நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகத்துக்குப் பேட்டியளித்த பொருளாதார நிபுணர் நிதின் தேசாய், ``உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கை என்பது கறுப்புப்பண புழக்கத்தைச் சிக்கலாக்கும். நிச்சயமாக பணமதிப்பிழப்பு நடவடைக்கையைவிட இது நல்ல நடவடிக்கைதான். இங்கு எதுவும் நிலைகொலையச் செய்யவில்லை. ஆனால், கறுப்புப் பணப்புழக்கம் குறையும்.

 2,000 ரூபாய் நோட்டு
2,000 ரூபாய் நோட்டு

இதுபோன்ற நடவடிக்கையை பல ஐரோப்பிய நாடுகள் செய்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் முறைசாரா தொழில் மற்றும் விவசாயத் தொழில்கள் அதிகம். அங்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இடமிருக்காது. நோட்டுகளாகத்தான் பணம் கைமாறும். இந்த நடவடிக்கை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகரிக்க உதவும்” என்றார்.

ஆர்.பி.ஐ-யின் பதிலில், 2016-17 நிதியாண்டில் 3,542.991 மில்லியன் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டதாகவும், அதுவே, 2017-18 நிதியாண்டில் 111.507 மில்லியன் நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியாக 2018-19 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 46.690 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் தற்போதுவரை ஒரு 2,000 ரூபாய் நோட்டுகள் கூட அச்சிடப்படவில்லை.

RBI
RBI

உயர்மதிப்பு கொண்ட நோட்டுகளின் புழக்கத்தைக் குறைப்பதன் மூலம், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எளிதாக பணத்தை எடுத்துச் செல்ல முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.