நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ரூ.4.85 லட்சம் கோடி to ரூ.5.70 லட்சம் கோடி... அதிகரிக்கும் தமிழகத்தின் கடன்!

பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
News
பட்ஜெட்

இடைக்கால பட்ஜெட் சொல்லும் உண்மைகள்! - T A M I L N A D U B U D G E T

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி வெளியான மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு, கடந்த 23-ம் தேதி வெளியான தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டிலும் பல பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அம்சங்கள் நிரம்பியிருந்தன. இந்த பட்ஜெட் சொன்ன முக்கியமான விஷயம், கடந்த 2020-21-ம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த பொருள் உற்பத்தி (GSDP) 2.02% என்ற அளவில் வளர்ச்சி காண வாய்ப்புண்டு என்று கணித்திருக்கிறது தமிழக அரசாங்கம். இந்தக் காலத்தில் இந்தியாவின் மொத்த பொருள் உற்பத்தி -7% என்ற அளவில் இருக்கும் எனப் பல்வேறு நிறுவனங்களில் கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி ஏற்றத்தின் போக்கில் இருப்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்தான். அது மட்டுமல்ல, 2021-22-ம் ஆண்டில் நமது மாநிலத்தில் மொத்த பொருள் உற்பத்தி வளர்ச்சி 11.5 சதவிகிதமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் ஏறக்குறைய இதே அளவு வளர்ச்சி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்
பட்ஜெட்

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வெளியில் 6,683 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது, தொழில் முதலீட்டுக் கழகத்தின் மேம்பாட்டுக்காக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, தமிழகத்தில் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாகத் தொழில் தொடங்க விரும்பும் 62 நிறுவனங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு, எல்.ஐ.சி மற்றும் யுனைடெட் இந்தியா ஆகிய இரு காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, அரசு சார்பில் மக்களுக்குக்காகப் புதிய காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகம் எனப் பல பாசிட்டிவ் அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இருப்பதைக் குறிப்பிடலாம்.

ஆனால், இந்த பட்ஜெட்டில் மிகப் பெரிய நெகட்டிவ்வான அம்சம் என்றால், அது தமிழக அரசின் பெருகிவரும் கடன்தான். கடந்த ஆண்டின் மார்ச் மாதக் கடைசியில் ரூ.4.85 லட்சம் கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட கடன், 2021-ம் ஆண்டு ரூ.5.70 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப் பட்டிருக்கிறது. இந்தக் கடனை சமாளிப்பதற்காகப் புதிதாக ரூ.84,687 கோடி கடன் வாங்கப்போகிறது.

தமிழக அரசின் கடன் ஒரே ஆண்டில் இந்த அளவுக்கு உயர என்ன காரணம் என்பதற்கு பெரிய விளக்கம் எதுவும் தேவையிருக்காது. கடந்த ஓராண்டுக் காலத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக வர்த்தக நிறுவனங்கள் சில மாதங்களுக்கு மூடப்பட்டிருந் ததால், இந்த நிறுவனங்கள்மூலம் கிடைக்கும் வரி வருமானம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. கடந்த 2020-21-ம் ஆண்டில் தமிழக அரசின் வருமானம் ரூ.1.09 லட்சம் கோடியாக இருக்கிறது. இது திட்டமிட்டதைவிட ரூ.23,561 கோடி குறைவாகும். தமிழக அரசின் வருமானம் இனிவரும் 2021-22-ம் ஆண்டில் ரூ.1.35 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தளவு வருமானம் வருமா, வராதா என்பது அடுத்த ஆண்டுதான் தெரியும்.

தமிழக அரசின் இந்தக் கடன் கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது அதிர்ச்சியான விஷயம். 2015-16-ல் தமிழகத்தின் மொத்தக் கடன் 2.11 லட்சம் கோடியாக இருந்தது; இது, 2016-17-ல் 2.52 லட்சம் கோடியாக உயர்ந்தது. 2017-18-ல் ரூ.3.14 லட்சம் கோடியாக அதிகரித்தது; 2018-19-ல் ரூ.3.56 லட்சம் கோடி மேலும் உயர்ந்து, எல்லோரையும் கலக்கம் அடைய வைத்தது. ஆனால், 2019-20 ரூ.3.97 லட்சம் கோடியாகவும் 2020-21-ல் 4.85 லட்சம் கோடியாகவும் உயர்ந்ததைத் தொடர்ந்து, இனி என்ன செய்து தமிழக அரசாங்கம் எப்படி இந்தக் கடனைத் திரும்பக் கட்டி முடிக்கப்போகிறது என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமலே இருக்கிறது.

ஒரு மாநிலத்தின் மொத்த கடன் அளவு அந்த மாநிலத்தின் மொத்த பொருள் உற்பத்தியில் சுமார் 25% வரை இருக்கலாம் என ஆர்.பி.ஐ வரையறை நிர்ணயித்திருக்கிறது. பஞ்சாப், உத்தரப்பிரதேசம், இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காள மாநிலங்கள் 32 - 39% அளவுக்கு மொத்த பொருள் உற்பத்தியில் கடன் வைத்திருக்கின்றன. ஆனால், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்கள் 18 சதவிகிதத்துக்கும் குறைவாகக் கடன் வைத்துள்ளன. தமிழகத்தின் கடன் அடுத்த ஆண்டு முடிவில் ரூ.5.70 லட்சம் கோடியாக இருக்கும்பட்சத்தில், அது நமது மொத்த பொருள் உற்பத்தி 26.69 சதவிகிதமாக இருக்கும். இது ஆர்.பி.ஐ நிர்ணயத்திருக்கும் அளவைவிட சற்று அதிகம்தான். தமிழக அரசாங்கம் என்ன செய்து இந்தக் கடனைக் குறைக்கப்போகிறது என்பதுதான் முக்கியமான விஷயமாக மக்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

இது இடைக்கால பட்ஜெட்தான் என்பதால், வருமானத்தை உயர்த்துவதற்கான வழிகளையோ, கடனைக் குறைப்பதற்கான வழிகளையோ இந்த பட்ஜெட்டில் சொல்லப் படவில்லை. இந்தக் கடனைச் சமாளிக்கும் கடமை இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்துவரும் கட்சியைத்தான் சேரும். சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி ஜெயிக்குமோ, இவ்வளவு பெரிய கடனை எப்படிச் சமாளிக்குமோ!?