
தமிழ்நாட்டில் என்னென்ன விவசாயம் செய்கிறார்கள் என்பதைப் பார்த்து, ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் கொடுத்துத் திட்டங்கள் தீட்டி வருகிறோம்
ஆண்டுதோறும் பனை நடவு, பனை விவசாயிகள் நலன், பனை குறித்த ஆராய்ச்சிக்கெனத் தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பனை மேம்பாட்டு இயக்கம், தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் பனைக்கெனத் தனி ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட அறிவுப்புகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ‘‘பனை குறித்துத் தமிழக அரசின் பட்ஜெட்டில் வந்திருக்கும் அறிவிப்புகள் நேர்மறையானதாக இருந்தாலும், பனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு அதிலிருந்து கிடைக்கக்கூடிய பனை வெல்லம், பனங்கற்கண்டு, பதநீர் போன்ற பொருள்களை புரமோட் செய்ய விசேஷமான முயற்சிகள் எடுக்கவில்லை'' என்கிறார் தாவரவியலாளர் நரசிம்மன்.
இப்படி இது குறித்தான அதிருப்தியைப் பலரும் தெரிவிக்கின்றனர்.

‘‘கடந்த ஆண்டு பனை குறித்து அறிவித்த அறிவிப்புகளே இன்னும் ஏட்டளவில்தான் இருக்கின்றன” என்று விமர்சிக்கும் தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, அதுகுறித்துப் பகிர்ந்தார். ‘‘கடந்த ஆண்டு அறிவிப்பைப் போலவே இந்த ஆண்டும் பத்து லட்சம் பனை விதைகள் வழங்கப்படும் என்கிறார் அமைச்சர். இதெல்லாம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. நானே பத்து லட்சம் விதைகளை இலவசமாகத் தருகிறேன். பனை மரம் வெட்டும்போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றுதான் வெட்ட வேண்டும். ஆனால், பனையில் உபயோகம் இல்லை என்று இஷ்டத்துக்கு வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கள் மீதான தடையை நீக்கினால்தான் பனை மரத்துக்கு எதிர்காலம் இருக்கும். கருப்பட்டி நல்ல விலைக்கு விற்கிறது. ஆனால், பதநீர் இறக்குவதற்கே விடுவதில்லையே. பனை மரத்தில் கால் வைத்தால், கள் இறக்குவதற்குத்தான் மரம் ஏறுகிறார் எனத் தடை செய்கிறார்கள். மீறி மரம் ஏறுபவர்கள், தங்கள் பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கப்பம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் பனை மரத்தின் மீது ஏறினால்தானே பனை வெல்லம், பனங்கற்கண்டு என இவர்கள் சொல்லும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்க முடியும்?
இரண்டு கோடி ரூபாய் நிதியில் பயிற்சி அளிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்தத் தொகை போதுமானதாக இல்லை. ஆராய்ச்சி நிலையம் அமைக்க
ரூ. 15 கோடி ஒதுக்கியுள்ளனர். ஏற்கெனவே வில்லிபுத்தூரில் இருந்த பனை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடிவிட்டார்கள். அதைப் புதுப்பித்தாலே போதுமே, எதற்கு வேறு இடத்தில் இத்தனை கோடி செலவில் ஆரம்பிக்க வேண்டும்? முதலில் இந்த அரசுக்கு பனை விவசாயிகள்மீது உண்மையான அக்கறை இருந்தால், கள்ளுக்கு இருக்கக்கூடிய தடையை நீக்க வேண்டும். இயற்கையான பானத்துக்குத் தடை விதித்துவிட்டு, டாஸ்மாக் மதுவுக்கும், இறக்குமதி மதுவுக்கும் முக்கியத்துவம் தருவது எந்த விதத்தில் நியாயம். கடந்த நிதியாண்டில், ரூ. 45,000 கோடி மதுக்கடைகளின் மூலம் வருமானம் கிடைத்திருக்கிறதெனக் கூறி, அதை 50,000 கோடி ரூபாயாக உயர்த்தத் திட்டமிடப்பட்டிருப்பதாக நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது வெட்கக்கேடானது இல்லையா? இப்படி இருக்கும்போது எப்படி இவர்களுக்கு பனை விவசாயத்தின் மீது அக்கறை இருக்கும்?” என்றார் காட்டமாக.

‘‘எந்தப் பொருளும் தினசரி நம் வாழ்க்கைக்குள் வரும்போதுதான் அதற்கான மதிப்பிருக்கும். அதுபோல் பனை சார்ந்த பொருள்களும் வர வேண்டும்” என்கிறார் ‘பனை மரமே! பனை மரமே!' புத்தகத்தின் எழுத்தாளரும், ஆய்வாளருமான ஆ.சிவசுப்பிரமணியன். தொடர்ந்து பேசியவர், ‘‘இன்று செங்கல் சூளைகளுக்கு விறகாகப் பயன்படுத்துவதால் அதிக அளவிலான பனை மரங்கள் வெட்டப்படுவதுதான் பனை அழிவுக்கு முக்கியக் காரணம். செங்கல் சூளைகள் பெரும்பாலும் மலை அடிவாரங்களில் அமைந்திருக்கின்றன. வெட்டப்பட்ட பனை மரங்கள், அங்கு குவிக்கப்படுகின்றன. பனை மரத்தின் நடுவே ஸ்பாஞ் போன்று இருக்கும். அதை மோப்பம் பிடித்து, அதைச் சாப்பிடத்தான் யானைகள் வருகின்றன. அந்த ஸ்பாஞ்ச் ஒரு வகையான போதையைத் தருகிறது. இதற்கு யானைகள் அடிமையாகின்றன. இதைத் தடுத்துவிட்டால் யானைகள் அடிவாரத்துக்கு இடம் பெயர்வதும் குறையும். அ.தி.மு.க., தி.மு.க யார் ஆட்சிக்கு வந்தாலும் சாராய லாபியில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். சாராயத்துக்கு பதில், கள் கொடுத்தாலே மக்களுக்கு நல்லது. அடுத்து பனையிலிருந்து கிடைக்கக்கூடிய மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயார் செய்து, கிடைக்காத ஊர்களுக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும். பனைக்கென்று கூட்டுறவு சொசைட்டிகள் உருவாக்கி நலத்திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வர அரசு முன்வர வேண்டும்” என்றார்.
இது தொடர்பாகப் பேசிய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, ‘‘தமிழ்நாட்டின் இனிப்பு என்றாலே அது கருப்பட்டிதான். அதன் பிறகுதான் சீனி என்று கூறும் கரும்புச் சர்க்கரை எல்லாம். அந்தக் கருப்பட்டி இனிப்பைத் தமிழ்நாட்டு மக்கள் சுவைப்பதற்கான அடிப்படை உரிமையை மறுத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஏனென்றால், இன்று கரும்பு மூலக்கூறு மூலம் பெறும் சாராயத்துக்கு மவுசும் வருமானமும் இருப்பதனால் அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பனைக்குக் கொடுக்க மறுக்கிறார்கள். இதனால் இப்போது டாஸ்மாக் Vs பனை மரம் என்கிற சூழல் உருவாகியிருக்கிறது. ஏற்கெனவே பனைத் தொழிலில் ஈடுபடும் பலரையும் அழைத்து, அவர்கள் தேவை, அனுபவம் மூலமாக சட்டதிட்டங்களை வகுத்து, அவர்களுக்குத் தேவையான உதவிகள் அளித்தால் அது பயனுள்ளதாக இருக்கும். அதை விட்டுவிட்டு டெஸ்க் ஒர்க்காக அறிவித்திருப்பதில் எந்தப் பயனும் இருக்காது. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான கிராமங்களில் பனை மரங்கள் இருக்கின்றன. அதன்மூலம் கிடைக்கின்ற பொருள்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி, அந்தந்த கிராமங்களின் வளர்ச்சிக்கே வித்திடலாம்” என்றார்.

இதுகுறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கேட்டோம். ‘‘தமிழ்நாட்டில் என்னென்ன விவசாயம் செய்கிறார்கள் என்பதைப் பார்த்து, ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் கொடுத்துத் திட்டங்கள் தீட்டி வருகிறோம். அதன்படி பனை விவசாயத்துக்கும் கவனம் செலுத்தி மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாகக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுத்துவருகிறோம். பனைப் பொருள்கள் மக்களின் கைகளுக்குச் செல்லும்போதுதான் அதன் வளர்ச்சி தெரியும். இன்று கருப்பட்டி, சிறுதானியங்கள் உபயோகிக்கும் எண்ணம் வந்திருக்கிறது. இது ஆரோக்கியமான விஷயம். அதோடு, கருத்து மாறுபட்டவர்களின் கருத்துகளையும் கேட்டு ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை எடுக்க அரசு தயாராக இருக்கிறது. கள் குறித்துப் பல ஆண்டுகளாகக் கோரிக்கைகள் இருக்கின்றன. இது கொள்கை சார்ந்த நடவடிக்கை. இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுதான் முடிவுகள் எடுக்க முடியும்” என்றார்.