Election bannerElection banner
Published:Updated:

முதல் பட்ஜெட்டை வாசித்த தமிழர்; பெட்டி ரகசியம்; நார்த் ப்ளாக் அல்வா - பட்ஜெட் சுவாரஸ்யங்கள்!

Budget 2020
Budget 2020

1999-ம் ஆண்டு வரை மாலை 5 மணிக்குதான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அது ஏன் தெரியுமா?

பிப்ரவரி மாதம் முழுவதுமே பட்ஜெட் விஷயங்கள்தான் இந்திய அளவில் பேசுபொருளாக இருக்கும். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அனைவரும் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்நேரத்தில் பட்ஜெட்டின் வரலாறு பற்றி சற்று அலசுவோம் வாருங்கள்.

budget 2020
budget 2020

பட்ஜெட் - பெயர்க் காரணம்

பிரெஞ்சு சொல்லான 'Bougette' என்கிற வார்த்தையிலிருந்து திரிந்து வந்ததுதான் 'பட்ஜெட்'. பிரெஞ்சில் 'பவ்கெட்' என்றால் தோலால் செய்யப்பட்ட பர்ஸ் அல்லது பையைக் கூறிக்கும். ஆண்டின் வரவு செலவு குறித்த ஆவணங்களைத் தோலாலான பைகளில் கொண்டு செல்வதால் பட்ஜெட் என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

பெட்டி ரகசியம்!

பட்ஜெட் சூட்கேஸ்
பட்ஜெட் சூட்கேஸ்

கடந்த ஆண்டின் பட்ஜெட்டுக்கு முன்னர் வரை பட்ஜெட் குறித்த ஆவணங்கள் அனைத்தும் பெட்டி அல்லது பெட்டியைப்போல இருக்கும் Buckle கொண்ட தோல் பையில்தான் கொண்டு வரப்பட்டன. ஆனால், கடந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல் முறையாக 4 சிங்கங்கள் கொண்ட தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிறத் துணியிலான ஃபைலில் நிதிநிலை ஆவணங்களைக் கொண்டு வந்தார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

லண்டனில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, அந்நாட்டின் நிதியமைச்சர்கள் சிவப்பு நிற பெட்டி ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றி வருகின்றனர். பெரும்பாலும் அந்தப் பெட்டியின் வெளிப்புறம் தோலினால் ஆனதாகவே இருக்கும். அந்தப் பெட்டியினுள்ளேதான் பட்ஜெட் உரைக்கான தாள்கள் இருக்கும். இதைத்தான் இத்தனை ஆண்டுகளாக இந்தியாவின் நிதியமைச்சர்களும் பின்பற்றி வந்தனர். ஆண்டுக்கு ஆண்டு பெட்டியின் நிறங்கள் மாறுமே தவிரப் பெட்டியைப் பயன்படுத்துவது மாறியதே இல்லை. ஆனால், கடந்த ஆண்டுதான் சிவப்பு நிறத் துணிக் கோப்பில் பட்ஜெட் தாள்களைக் கொண்டுவந்து மாற்றம் காட்டினார் இந்தியாவின் முதல் (தனிப்பொறுப்புடன்) பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன். இந்த ஆண்டும் அதைத் தொடர்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியாவின் முதல் பட்ஜெட்!

James Wilson
James Wilson
Royal Scottish Academy

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக 1860-ம் ஆண்டு இந்தியாவில் பட்ஜெட் முறையை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியக் கவுன்சிலின் நிதி உறுப்பினராக இருந்த ஜேம்ஸ் வில்சன் என்பவரின் அறிவுறுத்தலின்படி இந்தியாவின் முதல் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டது. பிப்ரவரி 18, 1869-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் ஜேம்ஸ் வில்சன்.

'தி எகனாமிஸ்ட்' பத்திரிகை மற்றும் 'ஸ்டாண்டர்ட் சார்டட் வங்கி' ஆகியவற்றின் நிறுவனர்தான் இந்த ஜேம்ஸ் வில்சன். இவரை 'ஃபாதர் ஆஃப் பட்ஜெட்' என்றும் அழைக்கிறார்கள்.

பட்ஜெட் நேரம்

1999-ம் ஆண்டு வரை இந்தியாவின் மத்திய பட்ஜெட் ஆனது, பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளன்று மாலை 5 மணிக்கு வாசிக்கப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் பின்பற்றிய அதே நேரத்தைப் பின்பற்றி வந்தது இந்திய அரசாங்கம். 2000-ம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட் நேரத்தைக் காலை 11 மணிக்கு மாற்றியமைத்தார். 2017-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த அருண்ஜெட்லி பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளிலிருந்து பிப்ரவரி 1-ம் தேதிக்கு பட்ஜெட்டை மாற்றினார். அதேபோல 92 ஆண்டுகளாகத் தனியாக வாசிக்கப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட்டும் 2017-ம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட்டோடு இணைக்கப்பட்டது.

Yashwanth Sinha
Yashwanth Sinha
`திருநங்கைகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் வேண்டும்' மக்களின் பட்ஜெட் எதிர்பார்ப்பு! பகுதி 4 #Budget2020

பட்ஜெட் ரகசியம்!

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரங்கள் முன்பாக டெல்லியில் உள்ள பட்ஜெட் அச்சிடப்படும் நார்த் பிளாக் அலுவலகத்தில் அல்வா கிண்டுவதை வழக்கமாக வைத்துள்ளது நம் இந்திய அரசாங்கம். நாட்டின் நிதி நிலை அறிக்கை பற்றிய தகவல்கள் வெளியில் கசிந்துவிடாமல் ரகசியம் காக்கப்பட வேண்டுமென்பதால் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள், தட்டச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், பட்ஜெட் தயாராகும் நார்த் பிளாக் அலுவலகத்திலிருந்து வெளியே செல்ல அனுமதியில்லை. நார்த் பிளாக் அலுவலகத்திலேயே இரண்டு வாரங்கள் தங்கியிருந்து பட்ஜெட் ஆவணங்களைத் தயார் செய்து வரும் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் தொலைபேசிகளில், இன்கம்மிங் கால்கள் மட்டுமே வருமாம். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் புலனாய்வு அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவதோடு அவர்களுக்கான வெளியுலக தொடர்புகளும் துண்டிக்கப்படுகின்றன.

அல்வா கிண்டும் நிகழ்வு #Budget2020
அல்வா கிண்டும் நிகழ்வு #Budget2020
பட்ஜெட்டுக்கு முன் ஏன் அல்வா கிண்டப்படுகிறது..? #Budget2020

பட்ஜெட் சுவாரஸ்யங்கள்!

முதல் பட்ஜெட் - தமிழர்!
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த ஆர்.கே.சண்முகம் ஒரு தமிழர்.

1947-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம் சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை வாசித்தார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இந்தியாவின் 'மத்திய பட்ஜெட்டை அதிக முறை வாசித்தவர்' என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மொரார்ஜி தேசாய். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 2 முறை நிதியமைச்சராக இருந்தவர், 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். மொரார்ஜி தேசாயின் பிறந்த நாள் பிப்ரவரி 29 என்பதால் லீப் வருடமான 1964 மற்றும் 1968-ம் ஆண்டுகளில் தனது பிறந்த நாளன்று இந்தியாவின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

R K Shanmugam
R K Shanmugam

முன்னாள் நிதியமைச்சர்களில், ப.சிதம்பரம் 9 முறையும் பிரணாப் முகர்ஜி 8 முறையும் யஷ்வந்த் சின்கா, யஷ்வந்த்ராவ் சவான் மற்றும் சிடி தேஷ்முக் ஆகியோர் தலா 7 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த காலத்தில் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அதேபோல முன்னாள் நிதியமைச்சர் கிருஷ்ணமாச்சாரியும் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் யஷ்வந்த் சின்ஹா மற்றும் மன்மோகன் சிங் ஆகிய இருவர் மட்டுமே தொடர்ந்து 5 முறை பட்ஜெட் வாசித்துள்ளனர்.

இந்த ஆண்டு, தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த ஆண்டின் பட்ஜெட்டில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் பற்றி கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு